Last Updated : 29 Nov, 2018 04:35 PM

 

Published : 29 Nov 2018 04:35 PM
Last Updated : 29 Nov 2018 04:35 PM

அன்பை அருளிய பிச்சைக்காரன்!

டிசம்பர் 1: யோகி ராம்சுரத்குமார் பிறப்பு நூற்றாண்டு

‘தலையிலோர் பாகை உளான்

தாடி உளான், கையிலோர்

அலைவுறுமோர் விசிறி உளான்

அங்கையிலோர் ஓடெடுப்பான்

நிலையுள்ள இன்பத்தை

நித்தம் அனுபவிக்கும்

கலையாளன்…’

என்று போற்றுவார் தமிழறிஞர் கி.வா.ஜகந்நாதன். அந்தப் பாட்டுடைத் தலைவன் சாட்சாத் யோகி ராம்சுரத் குமாரேதான்.

பாகை இருக்கும். ஆனால் ‘நானே பகவான்’ என்ற தலைக்கனம் இருக்காது. முகத்தை மறைக்கும் தாடி இருக்கும். ஆனால் முகஸ்துதிக்கு மயங்காத தாடி அது. சதா சர்வகாலமும் கையில் விசிறி இருக்கும். ஆனால், சீடர்கள் என்று கூறி சுற்றித் திரியும் கூட்டத்தைத் துரத்தியடிக்கும் பக்தியைக் கொண்டிருக்கும். இன்னொரு கையில் இருப்பது பிச்சை ஓடுதான். ஆனால் அன்பை அள்ள அள்ளக் குறையாமல் வழங்கிய அட்சயப் பாத்திரம் அது!

ஆம்… இது பிச்சைக்காரனுக்கே உரிய தோற்றம்தான். ஆனால் அது வெளிப்புறத் தோற்றம் மட்டுமே அல்ல. ஆன்மிக ரீதியிலும், தன்னை ஒரு யாசகனாகவே கருதிக் கொண்ட துறவியின் மெய்ஞானமும் அதுவே. ‘ஐ ஆம் எ பெக்கர்..!’ என்று அவர் கூறிக்கொண்டது வெறும் அடையாளம் அல்ல. அன்பின் வழியே இறையைக் கண்டவனின் அலறல்!

அந்தப் பிச்சைக்காரனுக்கு டிசம்பர் 1-ம் தேதி நூறாவது பிறந்தநாள். அவர் திருவண்ணாமலை சாமியின் பிள்ளை. அதனால் வாழ்த்தினாலும், வாழ்த்துக் கூறச் சென்றாலும் குழந்தையின் நிலையிலிருந்தே அருளைப் பொழிவார்… ‘மை ஃபாதர் வில் ப்ளெஸ் யூ..!’

குருவாய் வந்த பறவை

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணசிக்கு அருகே உள்ள நார்தரா என்ற கிராமத்தில், 1918-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி பிறந்தான் ராம்சுரத் குன்வர். விவசாயக் குடும்பம். ஆனால், குன்வருக்கோ படிப்பில்தான் நாட்டம்.

கங்கைக் கரையோரம் இருந்தது அவனின் வீடு. அங்கு சாதுக்கள் பலர், இரவு முழுவதும் கடவுளைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள். அதை ஆவலுடன் கேட்டபடி இருப்பான் குன்வர். அவனுக்கு அதுதான் பொழுதுபோக்கு. இதனால், அந்தச் சிறுவனின் உள்ளத்தில், சின்ன வயதிலேயே கடவுளைப் பற்றிய எண்ணங்கள் எழத் தொடங்கிவிட்டன.

எண்ணங்கள் எழ, கேள்வியும் எழுந்தது. ‘கடவுளை எங்கு காண்பது?’. அவனை காசிக்குப் போகச் சொன்னார் ஒரு சாது. காசியில் அவருள்ளே ஒரு புதிய மாறுதல் ஏற்பட்டது. வீடு திரும்பினார். பட்டப்படிப்பை முடித்தார். ஆசிரியராகச் சில காலம் பணியாற்றினார். இல்லறத்தில் ஈடுபட்டார். குழந்தைகளைப் பெற்றெடுத்தார். ஆனாலும் அந்த இல்லறவாசிக்குத் திருப்தி ஏற்படவே இல்லை.

‘குரு என்ற சொல்லுக்கு இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு அழைத்துப் போதல்’ என்று பொருள் கூறுகிறார்கள் ஆன்றோர்கள். பலருக்கும் இயற்கைதான் வழிகாட்டியாக இருந்திருக்கிறது. நியூட்டனுக்குக் கீழே விழுந்த ஆப்பிள். ஆர்கிமிடீஸுக்குத் தளும்பிய நீர். ராம்சுரத் குன்வருக்கு ஒரு பறவை.

தான் சிறுவனாக இருந்தபோது, கிணற்றிலிருந்து நீர் எடுத்து வரச் சொன்னார் அவரது தாயார். அப்போது கிணற்றின் விளிம்பில் ஒரு பறவை அமர்ந்திருந்தது. அந்தப் பறவையை விளையாட்டாக விரட்ட, கிணற்று வாளியில் கட்டியிருந்த கயிறைத் தூக்கி வீசினான். அந்தக் கயிறு பட்டு, பறவை இறந்தது. அந்தக் கொலைக்காக அவன் மனம் புழுங்கியது. கங்கையில் அந்தப் பறவைக்கு இறுதிச் சடங்குகளைச் செய்த அவன், அன்றிலிருந்து ‘பரிவு’ எனும் விஷயத்தைத் தன் வாழ்க்கையைச் செலுத்தும் ஒளியாக வரித்துக்கொண்டான்.

இப்படியானவனுக்குக் கடவுள் பற்றிய தேடலும் சேர்ந்தால் என்னவாகும்? 1952 முதல் 1959 வரை இந்தியா முழுவதும் தனக்கொரு குருவைத் தேடி அலைந்தான். இறுதியாக, அவன் வந்தடைந்த இடம், திருவண்ணாமலை!

மூன்று தந்தையரின் மகன்

‘எந்த ஒரு நபரும் தனக்கு மூன்று தந்தைகள் உண்டு என்பதைப் பெருமையாகச் சொல்ல மாட்டார். ஆனால் இந்தப் பிச்சைக்காரன் சொல்வேன். அந்த மூன்று பேரும் எனக்கு நிறைய விஷயங்களைத் தந்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அரவிந்தர் தொடங்கி வைக்க, ரமணர் நீர் வார்க்க, பப்பா ராமதாஸ் முடித்து வைத்தார்’ என்பார் யோகி ராம்சுரத் குமார்.

அது முற்றிலும் உண்மைதான். கடவுளைத் தேடி அலைந்த ராம்சுரத் குன்வரின் பயணத்தில் புதுச்சேரி மிகவும் முக்கியமானது. அங்குதான் ஸ்ரீ அரவிந்தரை முதன்முதலில் சந்தித்தான்.

‘இந்தப் பிச்சைக்காரனுக்கு அரவிந்தர் ஒரு புரட்சியாளர் என்பது தெரியும். அவரது ஆஸ்ரமத்துக்குள் நுழைந்தவுடன், அங்கிருந்த அமைதியை உணர்ந்தேன். அரவிந்தரே அந்த அமைதி என்பதையும் உணர்ந்தேன். ‘ஆன்மிகவாதிகளின் ஒற்றுமையே உலகளாவிய அமைதி’ என்ற அவரது தொலைநோக்குப் பார்வையில் இந்தப் பிச்சைக்காரனுக்கு நம்பிக்கை உண்டு. அந்தக் கனவு பொய்க்காது’ என்று தன் முதல் தந்தையை யோகி ராம்சுரத் குமார் நினைவுகூர்ந்தார்.

பிறகு திருவண்ணாமலையில் ரமண மகரிஷியையும், பின்பு கேரளாவில் பப்பா ராமதாஸையும் சந்தித்தான் ராம்சுரத் குன்வர். எப்போதும் ராம நாமத்தைச் சொல்லிக் கொண்டிருக்கச் சொன்னார். ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம் ஜெய் ஜெய் ராம். இதுதான் ராமதாஸ் அவனுக்குச் சொன்ன மந்திரம். அப்படியே செய்தான் குன்வர்.

yogiram-2jpg

அரவிந்தரிடமிருந்து ஞானத்தையும், ரமணரிடமிருந்து தவத்தையும், ராமதாசரிடமிருந்து பக்தி நெறியையும் பெற்ற அவன், ஒரு கட்டத்தில், உன்மத்தம் கொண்டான். பைத்தியக்காரன் என்ற பெயர் கிடைத்தது சொந்த ஊரில். எனவே, இல்லறத்தை விட்டு வெளியேறினான்.

மீண்டும் திருவண்ணாமலைக்கே வந்தான். பிச்சைக்காரன் என்ற பெயர் கிடைத்தது வந்த ஊரில். வேறு இடம் போக அவனுக்கு விருப்பமில்லை. எனவே, அங்கேயே ஒரு புன்னை மரத்தடியில் அமர்ந்து நித்தமும் ராம நாமத்தை அவன் ஜபித்தான்.

உலகத்துடனான பந்தம் கட்டறந்தது. கடவுள் தன்மை அவனுக்குள் இறங்கியது. முகத்தில் தெய்வீகக் களை ஒளிர்ந்தது. ராம்சுரத் குன்வர், ராம்சுரத் குமார் ஆனார். பிறகு சன்னதித் தெருவின் அடையாளமான அவர், 2001-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ம் தேதி இறையுடன் கலந்தார்.

‘கூப்பிட்ட குரலுக்கு வருவேன்’

தன்னை மகான் என்று கூப்பிடச் சொல்லி யாரையும் வற்புறுத்தவில்லை. கோயில் கட்டி பூஜை செய்யச் சொல்லவில்லை. எந்த மந்திர ஜாலத்தையும் நிகழ்த்தவில்லை. ‘என்னை விழுந்து வணங்கினால்தான் வளம் பெருகும்’ என்று எந்த வாக்குறுதியையும் அளிக்கவில்லை. ஆனாலும் அவரை நம்பியவர்க்கு அமைதி உட்பட எல்லாம் கிடைத்ததாகச் சொல்லப்படுகிறது.

உதவி என்று நாடிச் சென்றால், ‘நான் ஒரு பிச்சைக்காரன். என்னிடம் உனக்குக் கொடுப்பதற்கு எதுவுமில்லை. என் தந்தை உன்னைக் காப்பாற்றுவார்!’ என்று இவர் சொல்வதே, பெரிய வரம்.

‘உன்னை நீயே உள்ளார்ந்து உற்றுப் பார்த்துத் தெரிந்துகொள்வதே ஞானம்’ என்பதுதான் இவரது போதனை. மற்றபடி, ‘நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து என் பெயரை மூன்று முறை சொல்லுங்கள் அது போதும். நான் ஓடோடி வந்து உங்களுக்கு உதவுவேன்’ என்று உறுதியளித்த பெருமான் அந்த யோகி. அப்படியே செய்வோம்.

யோகி ராம்சுரத் குமார்

யோகி ராம்சுரத் குமார்

யோகி ராம்சுரத் குமார்

ஜெய குருராயா! தந்தை மட்டுமே இருக்கிறார். வேறெதுவும் இல்லை;

வேறு எவரும் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x