Published : 29 Nov 2018 05:16 PM
Last Updated : 29 Nov 2018 05:16 PM

தெய்வத்தின் குரல்: இஷ்டப்படி செய்வோம்

சம்பத்துக்கு லக்ஷ்மி, வித்யைக்கு சரஸ்வதி, ஆரோக்கியத்துக்கு சூர்யன், இன்னும் இந்த இந்த க்ரஹ பீடை போக ராஹூ – கேது, இன்ன நாளில் இன்னாருக்கு உத்ஸவம் என்று எப்படியெப்படி பூஜிக்கச் சொல்லியிருக்கிறதோ அப்படி அந்தந்த தெய்வத்துக்கு வழிபாடு நடத்தினால்தான் பலன் என்றே பொதுவாக ஜனங்களுக்கு நம்பிக்கையும், பிடிப்பும் இருக்கும்.

சனிப் பெயர்ச்சி என்றால் லக்ஷம் ஜனங்கள் திருநள்ளாற்றில் கூடுகிறார்கள், மகரவிளக்கு என்று சபரிமலையில் பத்து லக்ஷம் ஜனங்கள் கூடுகிறார்கள் என்றால் இதுதான் காரணம். அத்வைத சாதனையில் நன்றாக முன்னேறிப்போகிற அபூர்வமான சிலரைத் தவிர இந்த த்வைத பிரபஞ்சத்திலேயே பக்தி, ஏதோ கொஞ்சம் ஞானம் என்று போகிற எல்லாருக்கும் ஒண்ணே ஒண்ணு என்று பிடித்துக்கொள்வது கஷ்டம்தான்.

‘வெரைட்டி’ தான் லோக வாழ்க்கைக்கே ஸாரமாயிருப்பது! இஷ்டதேவதை என்று ஏதோ ஒன்றை ஓரளவு கெட்டியாகப் பிடித்துக் கொண்டாலுங்கூட அப்போதும் அதற்கே தினுஸு தினுஸாக வேஷம் போட்டு அலங்காரம் பண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது!

இன்றைக்கு உத்ஸவத்தில் கைலாஸ வாகனம் என்று ராஜாதி ராஜனாக அலங்காரம் பண்ணிப் பார்க்கிறவனையே நாளைக்கு பிக்ஷாண்டி என்று எல்லாவற்றையும் வழித்துவிட்டு நிறுத்திப் பார்த்து சந்தோஷிக்கத் தோன்றுகிறது!

பக்குவப்படுத்தத்தான் மதம்

மனசு கவடு விட்டுக்கொண்டு நானாவித ருசி பேதங்களில் போனாலும், அதன் இயற்கையிலேயே அதை விட்டுப் பிடித்துக் கொஞ்சம் கொஞ்சமாக வழிக்குக் கொண்டுவந்து ஒன்றிலேயே நிற்பதற்குப் பக்குவப்படுத்தத்தான் மதம் ஏற்பட்டிருக்கிறதேயொழிய, எடுத்த எடுப்பிலேயே மனசை ஒன்றிலேயே அமுக்கிப் போடுவதற்கில்லை.

இப்படி வற்புறுத்திப் பண்ணினால் மனசின் இயற்கைப்படி அது ஈடுகொடுக்க முடியாமல் திணறி, திமிறிக் கஷ்டப்பட்டுக் கொண்டு முடிவிலே ஜடம் மாதிரியோ, இல்லாவிட்டால் எதிர்த்திசையில் வெறித்தனமாகவோதான் போகும். அதனால், நமது மதம் செய்கிற முதல் காரியம் நானாவிதமான லௌகிக ருசிகளிலேயே சந்தோஷிக்கிற மனசை நானாவிதமான தெய்விக ருசிகளைக் காட்டி சந்தோஷப்படுத்தி, அந்த மனசின் அழுக்கை எடுத்துத் தெளிவு பண்ணுவதுதான்.

இப்படி நன்றாக அழுக்குப் போய் தெளிந்த தெளிவாக ஆகிப் பக்குவப்பட்ட அப்புறம், முடிவில்தான், நானா தினுஸு என்கிற த்வைத அனுபவங்களை விட்டு ஒன்றேயான அத்வைதம் என்று கொண்டு போவது.

அதனால் பிள்ளையார், சுப்ரமணிய சுவாமி, அம்பாள், சிவன், விஷ்ணு, ராமன், கிருஷ்ணன், நவக்ரஹம், ஐயனார் என்று எல்லாவற்றையும் வைத்துக்கொண்டே விதவிதமாக அலங்காரம் பண்ணி, உபசாரம் பண்ணி, நைவேத்தியம் பண்ணி, ஒவ்வொன்றுக்கும் அததற்கான நியமங்களை அனுஷ்டானம் பண்ணி ருசி பேதத்திலேயே நிறைவு காண்கிற மனசுக்கு சந்தோஷம் கொடுத்துக்

கொடுத்து, தத் – த்வாராவே (இதன் மூலமே) அதைக் கொஞ்சம் கொஞ்சமாக மேலே உசத்திக்கொண்டு போவோம். லௌகிகத்திலேயே அழுந்திக் கிடக்கிற மனசை எப்படியோ ஒரு அப்படி தெய்வ விஷயமாகக் கொஞ்சம் தொட்டுகொண்டு, அதிலே ஒரு சந்தோஷம் அடையும்படிப் பண்ண இது (பல தெய்வ வழிபாடு) ஒத்தாசை பண்ணுகிறதா இல்லையா?

நாமும் குழந்தை மாதிரிதான்

குழந்தைகளுக்கு ஒரே வர்ணத்திலுள்ள ஒரு பொருளைக் காட்டிலும் கலர் கலராகக் காட்டினால் ஒரே உற்சாகம், குஷி பிறந்து சிரித்துக் கூத்தாடும். அத்யாத்ம ரீதியில் நாமும் அந்தக் குழந்தை மாதிரிதான். அதனால் அத்தனை ‘ஹிண்டு பாந்திய’னையும் வெட்கப்படாமல் வைத்துக்கொண்டு, ஒரே மூர்த்திதான் என்னும்போது ஏற்படக்கூடிய சலிப்பு இல்லாமல் (சிரித்துக்கொண்டு) ‘போர்’ அடிக்காமல், ஏதோ தெரிந்த மட்டும் வழிபாடு பண்ணி, ஏதோ நமக்குக் கிடைக்கிற மட்டும் கொஞ்சம் பக்தி ருசியை அநுபவிப்போம். ஏக ரஸம் எல்லாம் அப்புறம்தான், இப்போது அவியல்தான்!

எடுத்துக்கொண்ட விஷயத்தின் உயர்வை விசேஷப்படுத்திக் காட்டுவதற்காகத்தான் தத்ஹேது நியாயப்படி விக்நேச்வர உபாஸனை ஒன்று மாத்திரமே போதும் என்று காட்டியிருக்கிறதே தவிர, இதனால் நடைமுறையில் அப்படியே எல்லாரும் பண்ணி விடவேண்டும், மற்ற சுவாமியையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட வேண்டுமென்று அர்த்தமில்லை.

இந்த சுலோகத்தைப் பண்ணினவரே எல்லா சுவாமியையும் ஸ்தோத்ரம் பண்ணினவர்தான். விக்நேச்வர பூஜையே போதுமென்றில்லாமல் விசேஷமாக சிவாராதனம் பண்ணினவர்தான்.

நியாய ரீதியாக புத்தி மட்டத்தில் ஒன்றை நிலைநாட்டி விட்டால் போதுமா? மனசு, மனசு என்று ஒன்று, அதுதானே புத்திக்கு மேலே நம்மைப் பிடித்துக்கொண்டு ஆட்டி வைக்கிறது? பக்தி என்று வந்துவிட்டால் அங்கே புத்தியையே கொண்டுவரக் கூடாது என்றுகூடச் சொல்கிறார்களே!

ஆனபடியால் புத்தி லெவலில் நியாயம் சொல்வது அப்படியே இருக்கட்டும், நம்முடைய ஸ்டேஜில் நமக்கு அது நிறைவு தரவில்லை என்றால், சகல தேவதாராதனம், இஷ்ட தெய்வ ஆராதனம் என்று எதில் ஸந்துஷ்டியோ அதன்படி செய்வோம். இப்படியும் அப்படியுமாகக் கலந்து கலந்து வேண்டுமானாலும் செய்வோம்.

அதே சமயத்தில், புத்தி ரீதியில் ஆராய்ந்து பார்த்தால் இப்படி ஸர்வ தேவதோபாஸனா பலன்களையும் விக்நேச்வரர் ஒருத்தரின் மூலமே, அவரொருவரை மட்டும் வழிபடுவதனாலேயே அடையமுடியும் என்பதான ஒரு பெரிய சிறப்பு அவருக்கு நிச்சயமாக இருக்கிறது என்பதையும் புரிந்துகொள்வோம்.

நாம் பல பேரை வழிபடுகிறபோது, முதலில் அவரிடம் வந்து குட்டிக் கொள்ளும்போது, புத்தி ரீதியில் நாம் தெரிந்துகொண்ட இந்த நியாயமே நம்முடைய இருதயத்திலும் பளிச்சென்று நினைவுக்கு வந்து அவரிடம் நாம் செய்கிற பக்திக்கு ஒரு ஜீவனை ஊட்டிவிடும்.

(தெய்வத்தின் குரல் ஐந்தாம் பாகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x