Published : 02 Aug 2018 11:48 AM
Last Updated : 02 Aug 2018 11:48 AM

உயிர் வளர்க்கும் திருமந்திரம் 42: மனத்தில் எழுந்தது மாயக் கண்ணாடி

யோகம் சித்த விருத்தி நிரோதம்’ என்று யோகத்தை வரையறுத்துக் கொள்கிறது பதஞ்சலியின் யோக சூத்திரம். யோகம் என்பது சித்த விருத்திகளைத் தடை செய்தல். சித்தம் என்பது என்ன? மனிதர்கள் மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐந்து புலன்கள் வழியாகவே எதையும் அறிகிறார்கள். இந்த ஐம்புலன்களும் புறக் கருவிகள் என்று சொல்லப்படுகின்றன.

இந்த ஐம்புலன்களும் கொண்டு வந்து சேர்க்கும் செய்திகளை வாங்கி, வந்த செய்தி இன்னதென்று துணிந்து, அதை வகை பிரித்து, பதிவுசெய்து, பொதிந்து வைத்துக்கொள்வன அகக் கருவிகள் என்று சொல்லப்படுகின்றன. புறக் கருவிகள் ஐந்து என்பதுபோல அகக் கருவிகள் நான்கு: மனம், புத்தி, அகங்காரம், சித்தம் ஆகியன.

இவற்றில் மனம் என்பது ஒரு பாத்திரம்போல. அது புறக்கருவிகள் கொண்டு வந்து கொட்டும் செய்திகளை வாங்கிக்கொள்ளும். மனம் வாங்கி வைத்த செய்திகளை ஒருங்கிணைத்து ஒற்றைப்படுத்திப் புத்தி அதனை வகை பிரிக்கும். எடுத்துக்காட்டாக, ஒரு பாம்பைப் பார்க்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்களது புலன்கள் அந்தப் பாம்பைப் பற்றித் தனித்தனியாகச் செய்திகள் கொண்டு தரும்.

கண், அதன் உருவம் பற்றிய செய்தியைக் கொண்டு தரும்; காது, அதன் சீற்ற ஒலியைக் கொண்டு தரும்; மூக்கு, அதற்கு மணம் ஏதேனும் இருந்தால் அதனைக் கொண்டு தரும்; அது நம் காலின்மீது ஏறி ஓடியிருந்தால் அதன் வழவழப்பை நம்முடைய மெய் கொண்டு வரும். இவ்வாறு பாம்பைப் பற்றி வெவ்வேறு புலன்கள், தனித்தனியாகக் கொண்டு தரும் நான்கு செய்திகளை மனம் வாங்கிப் போட்டுக்கொள்ள, புத்தி அவை நான்கும் பாம்பைப் பற்றி செய்திகள் என்று ஒன்றாக்கித் தொகுக்கும்.

பிறகு அது என்ன பாம்பு, அதன் குணம் என்ன, அது என்ன செய்யும் என்பதைப் பதிவெடுக்கும். ஒருவேளை புலன்கள் கொண்டு வந்த செய்திகளில் தோற்றப்பிழைகள் ஏதேனும் இருந்து குழப்பம் ஏற்பட்டால், அகங்காரம் சரியாகவோ தவறாகவோ, அது இன்னதென்று முடிவு செய்யும். எடுத்துக்காட்டாக, பார்த்த நேரம் பார்வை மயங்கும் அரை இருள் நேரம். பார்த்த பொருள் பாம்பா கயிறா என்று குழப்பம்.

அப்போது அகங்காரம் முன்கை எடுத்து அதைப் பாம்பென்றோ, அல்லது கயிறென்றோ முடிவு செய்யும். இவ்வாறு மனத்தால் வாங்கப்பட்டு, புத்தியால் வகை பிரிக்கப்பட்டு, அகங்காரத்தால் தீர்மானிக்கப்பட்டு இறுதி செய்யப்பட்ட செய்திகளையெல்லாம் சித்தம் தன்னுடைய அடுக்குகளுக்குள் பொதிந்து வைத்துக்கொள்ளும்.

சித்தத்தின் செயலறுப்பது யோகம்

பணம், காசு, நகைகளை வகை பிரித்து அடுக்கடுக்காகச் சேகரித்து வைத்துக்கொள்வது தன பண்டாரம் என்றால், செய்திகளை வகைபிரித்து அடுக்கடுக்காகச் சேகரித்து வைத்துக்கொள்ளும் இது, மன பண்டாரம். மனிதர்கள் ஆற்றுகின்ற வினைகளும் மறிவினைகளும் எதிர்வினைகளும் சித்தத்தின் சேகரத்தை அடிப்படையாகக் கொண்டே நிகழ்த்தப்பெறுகின்றன.

நல்ல பாம்பைப் பார்த்தால் பயந்து ஓடுவது அல்லது அதைத் தடியால் அடிப்பது, தண்ணீர்ப் பாம்பைப் பார்த்தால் அஞ்சாமல் அதைக் கையிலெடுத்துச் சுழற்றுவது அல்லது அதை லட்சியமே செய்யாமல் இருப்பது என்று நாம் ஆற்றுகிற எதிர்வினைகள் எல்லாமே பாம்புகளைப் பற்றி நம் சித்தத்தில் சேகரிக்கப்பட்டிருக்கிற தகவல்களின் அடிப்படையில், சித்தத்தின் தூண்டுதலால் செய்யப்படுபவை.

பிறக்கும்போது எந்தச் சேகரமும் இல்லாமல் வெண்ணிலையாக இருக்கிற சித்தம் போகப்போக எது கிடைத்தாலும் வாங்கிச் சேகரித்து விரிந்துகொண்டே போகிறது. தன்னுடைய சேகரத்தின் தன்மைக்கு ஏற்ப, நம்மை ஆசைப்படச் செய்கிறது; வருத்தப்படச் செய்கிறது; கோபப்படச் செய்கிறது; வெறி கொள்ளச் செய்கிறது. நம்மை நாமாக இல்லாமல் செய்கிறது.

நம்மிலிருந்து விரிகிற சித்தம், நம்மைக் காட்டிலும் பெரிதாக விரிந்து, கடைசியில் நம்மையே விழுங்கிச் செரித்துச் சக்கையாக்கி விடுகிறது. அதன்பிறகு நாம் என்ற ஒன்று இல்லை; சித்தம் என்கிற மனப்பண்டாரம் உருவாக்கிக் காட்டுகிற மாயப் பிம்பம் மட்டுமே இருக்கிறது. நம்மை நாம் சித்தத்தில் தொலைத்துவிட்டோம். நம்மை மீளவும் கண்டுகொண்டு, மீள் உருவாக்கம் செய்துகொண்டு, சித்தத்தின் சக்கையாக இல்லாமல், நம்முடைய சாரமாகவே நாம் ஆகவேண்டுமானால், சித்தத்தின் அளப்பற்ற விரிவை, அது செய்கிற அலைக்கழிப்பை, அதன் மாயத்தை நாம் அறியவேண்டும்.

அறிந்தால் நம்மைத் தின்று செரிக்க முயலும் சித்தத்தின் செயல்பாடு நின்று போகும். சித்தத்தின் மாயப் பிம்பமாக ஆகிவிடாமல், சித்தத்தால் தின்று செரிக்கப்பட்டுவிடாமல், சலனமின்றி, நாம் நாமாகவே இருப்பது யோகம். சித்தத்தின் செயலறுப்பது யோகம்.

எதையேனும் ஒன்றை அறுக்க வேண்டும் என்று நினைத்தால் அதன் வேரைத் தேடிப் போங்கள் என்கிறது பௌத்தம். காரியத்தை ஒழிக்க வேண்டுமானால் முதலில் காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும். பிறகு அதை ஒழிக்க வேண்டும். துக்கத்தை அறுப்பதற்காகத் துக்கத்தின் வேரைத் தேடிப் போகிறது அது.

சித்தத்தின் வேர் தேடிப்போ

சித்தத்தை அறுக்க வேண்டும் என்றால் சித்தத்தின் வேர் தேடியாகவேண்டும். ஆனால் வேர் காட்டாமல் மயக்குகிறது சித்தம்; நம்மைப் பேதைமைப்படுத்துகிறது. திருமூலர் சொல்கிறார்:

மனத்தில் எழுந்ததுஓர் மாயக் கண்ணாடி;

நினைப்பின் அதனின் நிழலையும் காணார்;

வினைப்பயன் போக விளக்கியும் கொள்ளார்;

புறக்கடை இச்சித்துப் போகின்ற வாறே (திருமந்திரம், 1681)

தன்னை அறியக் கிளம்பியவர்கள் தன்னுடைய மூலை முடுக்குகளிலெல்லாம் தன்னைத் தேடினார்கள்; மன பண்டாரம் எதிர்ப்பட்டது; அங்கும் தேடினார்கள்; அது ஒரு மாயப் பிம்பத்தை எழுப்பிக் காட்டியது. அடிமுடி தேடிய படலத்தில், முடி தேடிப் போன பிரம்மன், முடியைக் காணாமல் அன்னப் பறவையைக் கண்டு திரும்பிவிட்டதைப்போல, தன்னையே தேடிப் போனவர்கள், தன்னைக் காணாமல் ஏதோ ஒரு மாயப் பிம்பத்தைக் கண்டு அதுவே தான் என்று எண்ணித் திரும்பி விட்டார்கள்.

விளங்காதவர்கள்; விளக்கிச் சொன்னாலும் விளங்கிக் கொள்ளத் தெரியாதவர்கள். தலைவாயில் அடைத்திருப்பதாக எண்ணி ஏமாந்து பின்னால் சென்று புறக்கடை வாசலைத் தட்டிக்கொண்டு நிற்கிறார்கள். தன்னை அல்ல, தன்னுடைய நிழலைக்கூட இவர்களால் கண்டுகொள்ள முடியாது.

மனமாயை மாயை;இம் மாயை மயக்க;

மனமாயை தான்மாய, மற்றொன்றும் இல்லை;

பினைமாய்வது இல்லை; பிதற்றவும் வேண்டா;

தனைஆய்ந்து இருப்பது தத்துவம் தானே.

(திருமந்திரம், 2956)

உங்களைப் பேதைமைப்படுத்துவதும் மயக்குவதும் நீங்களே உருவாக்கிச் செல்லங் கொஞ்சிப் பேணி வளர்த்து வைத்திருக்கிற மனம்தான். மனம் உங்களை மயக்குவதை நிறுத்துங்கள்; மனத்தை நீங்கள் மயக்குங்கள். மனம் என்கிற மாயை ஒழிந்துவிட்டால், பிறகு உங்களை மயக்கத்தக்கது வேறு ஒன்றும் இல்லை. ஒழித்துக்கட்ட வேண்டியதும் வேறு ஒன்றும் இல்லை. மனத்தின் தூண்டுதலுக்கு ஆட்பட்டுத் தாறுமாறாக நடந்துகொள்ளவும் தேவையில்லை. தன்னையே தான் ஆராய்ந்து, தானே தானாக இருப்பதுதான் யோகம்.

தன்னையே தான் ஆராய்தல் எப்படி? மாணிக்கவாசகர் சொல்கிறார்:

நான்ஆர்?என் உள்ளம்ஆர்? ஞானங்கள்

ஆர்?என்னை யார்அறிவார்?

வானோர் பிரான்என்னை

ஆண்டுஇலனேல் மதிமயங்கி

ஊனார் உடைதலையில்

உண்பலிதேர் அம்பலவன்

தேன்ஆர் கமலமே

சென்றுஊதாய் கோத்தும்பீ

(திருவாசகம், திருக்கோத்தும்பி, 2)

நான் யார், என் உள்ளம் எது, ஞானங்கள் எவை என்று அறிய வேண்டும்; என்னை அறிகிறவர் யார் என்றும் பார்க்க வேண்டும். எல்லாமே வானோர் பிரானாகிய சிவன்தான் என்று தன்னை அறிவிக்கும் பொறுப்பையும் அறியும் பொறுப்பையும் இறைவனிடம் ஒப்படைக்கிறார் பக்தியின் வழிவந்த மாணிக்கவாசகர். யோகத்தின் வழிவந்த திருமூலரோ அந்தப் பொறுப்பைத் தன் வசமே வைத்துக்கொள்கிறார்.

(யாரென்று தேடுவோம்)
கட்டுரையாசிரியர், தொடர்புக்கு: arumugatamilan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x