Published : 07 Aug 2014 12:17 PM
Last Updated : 07 Aug 2014 12:17 PM

ஆகஸ்ட் 8: வரலட்சுமி விரதம் - இல்லம் வரும் ஸ்ரீராஜபுத்திரி

சுமங்கலிகளுக்கான மிக முக்கியமான பண்டிகை வரலட்சுமி விரதம் ஆகும். ஆண்டுதோறும் ஆவணி மாதம் கொண்டாடப்படும் இப்பண்டிகை இந்த ஆண்டு ஆடி மாதம் வருவது அபூர்வம் ஆகும். இந்த விரதம் மாமியார் தொடங்கிக் கொடுக்க மருமகள் தொடர்ந்து செய்வது வழக்கம். பின்னர் அந்த மருமகள் எடுத்துக் கொடுக்க அடுத்து வரும் மருமகள் தொடர்ந்து பூஜை செய்ய வேண்டும். அவரவர்களும் தனித்தனியே தாயார் திருமுகம் வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்பண்டிகையைக் குலப் பண்டிகை என்றே சொல்லலாம். கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், குழந்தைகள் பிறந்து குலம் தழைக்கவும், அஷ்ட ஐஸ்வரியம் கிடைக்கவும் வேண்டி சுமங்கலிப் பெண்கள் இப்பண்டிகையைக் கொண்டாடுவார்கள். அன்றைய தினம் பூஜையில் வைத்த மஞ்சள் சரடைப் பூஜைக்காக இல்லம் வரும் அனைத்துப் பெண்களும் கட்டிக் கொள்வார்கள்.

விரத கதை

மகத ராஜ்ஜியத்தில், குணதினபுரம் என்ற ஒரு நகரம் இருந்தது. அங்கு சாருமதி என்கிற பெண்ணும் அவளது கணவனும் வசித்துவந்தனர். அவள் தன் குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவள். சிறந்த பக்தி உடைய அவளின் கனவில் வந்த லட்சுமி, தன்னை வரலட்சுமியாக வழிப்பட்டால் அவளுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்று கூறினாள். தாயாரே எடுத்துக் கொடுத்ததாக எண்ணிய சாருமதி அதன் பிறகு வெள்ளிக்கிழமை அன்று வரலட்சுமி அம்மனை வழிபட்டாள். வரலட்சுமியை வழிபட்டு அவளின் வாழ்வின் தரம் உயர்வதைக் கண்ட பிற பெண்களும், சாருமதியிடம் தங்களுக்கும் இப்பூஜையை எடுத்துத் தருமாறு கூறி, அதன் பின்னர் வரலட்சுமி விரதத்தை அவர்களும் கடைப்பிடித்தனர்.

வரலட்சுமி விரதத்தன்று வரலட்சுமி தாயாரை மனதால் வேண்டினால், ஆதி லட்சுமி, தனலட்சுமி, தானியலட்சுமி, வித்யா லட்சுமி, வீர லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி ஆகிய அஷ்டலட்சுமிகளையும் வேண்டிய பலன் ஒரு சேரக் கிடைக்கும் என்பது ஐதீகம். இவர்கள் அனைவரும் வரலட்சுமி விரதத்தன்று ஒரே தாயாரான வரலட்சுமியில் ஐக்கியம் ஆவதாக நம்பிக்கை.

வழிபடும் முறை

அழகிய தாம்பாளத்தின் மீது தலை வாழை இலை இட்டு அதன் மீது அரிசி பரப்ப வேண்டும். பின்னர் இதன் மீது கலசம் வைக்க வேண்டும். இக்கலசத்தினுள் கால் பங்கு அரிசியை நிரப்பி, காதோலைக் கருக மணி, கரும் புள்ளி இல்லாத மஞ்சள் நிற எலுமிச்சம் பழம், தங்கக் காசு, வெள்ளிக் காசு, சிறிய கண்ணாடி, மரச் சீப்பு, இரண்டு வெற்றிலைப் பாக்கு ஆகியவற்றை இட்டு நிரப்ப வேண்டும். கலசத்தின் அகன்ற வாய் பகுதியின் மீது தேங்காயின் குடுமிப் பகுதி மேல்புறம் இருக்குமாறு வைக்க வேண்டும்.

அத்தேங்காய்க்கு மஞ்சள் குங்குமம் இட வேண்டும். பின்னர் ஆண்டுதோறும் தாயார் முகமாக வைக்கப்படும் திருமுகத்தை, தேங்காயின் குடுமிப் பகுதி மறையுமாறு செருக வேண்டும். தாயாருக்குப் பொட்டு இட்டு, அதில் ஜொலிக்கும் கற்களைப் பதிக்கலாம். பின் பகுதியில் பூச்சரமும், பூ ஜடையும் வைத்தால் அழகாக இருக்கும். தாயாருக்கும், கலசத்திற்குமாக அழகிய ஆடை அணிய வேண்டும். அழகிய முத்து மாலை உள்ளிட்ட நகைகளைத் தாயாருக்கு அணிவிக்க வேண்டும்.

முதல் நாளான வியாழன் இரவே தாயார் தயாராகிவிடுவார். ஒரு வருடமாக பூஜை அறையில் பெட்டிக்குள் இந்தத் தாயார், கண் திறக்கும் நேரத்தில் உணவு படைக்க வேண்டும். முன்னதாக வெண்பொங்கல் தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும். வெற்றிலை பாக்கு, பழம் ஆகியவற்றைத் தட்டில் வைத்து, தீபாராதனை, ஆரத்தி போன்றவற்றைத் தயார் நிலையில் வைத்துவிட வேண்டும். புதிய கண் மை எடுத்துத் தாயார் திருமுக மண்டலத்தில், கண்களுக்கு இட வேண்டும். இதனையே தாயார் கண் திறத்தல் என்று சொல்வார்கள். பின்னர் தாயாருக்குப் படைத்த பிரசாதத்தையே நோன்பு நோற்கும் பெண் சாப்பிட வேண்டும்.

மறுநாள் விடியற்காலை இந்தத் தாயாரை இல்லத்திற்குள் வருமாறு அழைக்க வேண்டும். பக்கத்திற்கு ஒருவராக இரு சுமங்கலிப் பெண்கள் அலங்கரித்து வைத்துள்ள தாயாரைத் தாம்பாளத்துடன் தூக்கி வந்து முன்னதாகத் தயாரிக்கப்பட்ட சிறிய மண்டபத்தினுள் வைக்க வேண்டும். அந்த மண்டபத்தின் இரு புறமும் வாழைக்கன்றுகளைக் கட்டி, மாவிலை, தென்னை இலை தோரணங்களால் அலங்கரிக்க வேண்டும். மண்டபத்துக்கும் மஞ்சள், குங்குமம் இட வேண்டும்.

விநாயகருக்கு வணக்கம்

முதலில் விநாயகர் பூஜையைச் செய்துவிட்டு பிறகு மகாலட்சுமி அஷ்டோத்திரம் பாடி வழிபட வேண்டும். நோன்புச் சரடுக்குத் தனியாகப் பூஜை செய்ய வேண்டும். பூஜை முடிந்தபின்பு தாயாருக்குப் பருப்பு பாயாசம், தேங்காய், உளுந்துக் கொழுக்கட்டை, பால், தயிர், வெற்றிலைப் பாக்கு, பழம் இவை அனைத்தையும் நைவேத்தியம் செய்ய வேண்டும். பிறகு பெரியோர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிய பின்னர் நோன்புச் சரடை வலது கையில் கட்டிக்கொள்ள வேண்டும். குடும்பத்தில் சுபிட்சத்தை ஏற்படுத்தும் பூஜை, ஸ்ரீவரலட்சுமி பூஜை. தாயாரை வழிபட்டு தனம் பெற்று வாழ்வோம்.

தாயாரின் முகம்

தாயார் முகமாக வந்த வரலாறு சுவையானதுதான். தன்னை வரலஷ்மியாக வைத்து பூஜிக்கக் கூறி தனது பக்தையின் கனவில் வந்தாள் தாயார். அக்காலத்தில் மாட்டு சாணத்தைக் கொண்டு இல்லம் மெழுகுதல் வழக்கம். தன்னை விட்டுத் தாயார் என்றும் பிரிந்துவிடக் கூடாது என்பதற்காக தங்கள் இல்லச் சுவரில், அழகிய சொம்பு ஒன்றினை ஓவியமாக வரைந்து அதன் மேல் அப்படியே தாயார் முகம் வரைவார்கள். இதனையே வெள்ளிக் கிழமைதோறும் பூஜித்தும் வந்தார்கள். ஆண்டுதோறும் புதுப்பிப்பார்கள். சமீபகாலமாக அழகிய, கருணை சொரியும் தாயார் முகங்களை, அச்சு செய்து வெள்ளி மற்றும் தங்கத்தில் வார்த்தெடுத்து அந்த முகங்கள் நகைக் கடைகளிலும் கிடைக் கின்றன.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x