

தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா தேரோட்டம் இன்று (மார்ச் 12) காலை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
மாசித் திருவிழா: தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் சுவாமி, அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் முக்கிய நிகழ்ச்சிகளான சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி வீதி உலா கடந்த 9-ம் தேதியும், பச்சை சாத்தி வீதி உலா 10-ம் தேதியும் நடைபெற்றது.
தேரோட்டம்: மாசித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் திருவிழாவின் 10-ம் நாளான இன்று (மார்ச் 12) காலை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, காலை 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் காலை 7 மணிக்கு விநாயகர் தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.
தொடர்ந்து வள்ளி-தெய்வானையுடன் சுவாமி குமரவிடங்கப் பெருமான் எழுந்தருளிய பெரிய தேரை பக்தர்கள் 'வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா’ என முழக்கமிட்டபடி வடம் பிடித்து தேர் இழுத்தனர். பின்னர் தெய்வானை அம்மன் மட்டும் எழுந்தருளிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டத்தில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
தெப்ப உற்சவம்: 11-ம் திருவிழாவான நாளை (மார்ச்) மாலையில் சிவன் கோயிலில் இருந்து சுவாமியும், அம்மனும் சன்னதி தெருவில் உள்ள யாதவர் மண்டபத்துக்கு எழுந்தருளுகின்றனர். அங்கு சுவாமிக்கும், அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாரானை நடக்கிறது. பின்னர் சுவாமி, அம்மன் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி வெளிவீதி வழியாக நெல்லை நகரத்தார் தெப்பக்குளம் மண்டபம் சேர்கிறார்கள். அங்கு இரவு அபிஷேகம், அலங்காரமாகி சுவாமி அம்மனுடன் தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.
மஞ்சள் நீராட்டு: 12-ம் திருவிழாவான நாளை மறுநாள் (மார்ச் 14) மாலையில் சுவாமி, அம்மன் மஞ்சள் நீராட்டு கோலத்துடன் எட்டு வீதிகளிலும் உலா வருகிறார்கள். இரவு சுவாமியும், அம்மன் தனித்தனி மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவிலை சேர்கிறார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரா.அருள்முருகன், இணை ஆணையர் சு.ஞானசேகரன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.