தைப்பூச திருவிழாவையொட்டி வள்ளிக்கு பிறந்த வீட்டு சீதனம் வழங்கிய குறவர்கள்

தைப்பூச திருவிழாவையொட்டி வள்ளிக்கு பிறந்த வீட்டு சீதனம் வழங்கிய குறவர்கள்
Updated on
1 min read

பழநி: தைப்பூசத் திருவிழாவையொட்டி பழநியில் திருக்கல்யாண உற்சவம் முடிந்த நிலையில், வள்ளிக்கு தாய் வீட்டு சீதனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரிய நாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 5-ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக வள்ளி, தெய்வானை மற்றும் முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

இந்நிலையில், வள்ளிக்குப் பிறந்த வீட்டு சீதனம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பழங்குடி மற்றும் குறவர் இன மக்கள் பழநியில் ஒன்று கூடினர். தங்களது பாரம்பரிய வழக்கப்படி, ஆதிவாசி, முருகன் வேடமிட்டு, மேள தாளம் முழுங்க, ஆட்டம் பாட்டத்துடன் சீதனம் கொண்டு வந்தனர்.

தேன், திணை மாவு, மா, பலா, வாழை, மலைக்காய்கறிகள், பழ வகைகள், கிழங்குகள், வில் அம்பு, வேல் உள்ளிட்ட சீதனங்களை ஊர்வலமாக எடுத்து மலைக்கோயில் செல்லும் வழியில் உள்ள வள்ளி சுனையில் வைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து, மலைக்கோயிலில் தண்டாயுதபாணி சுவாமியை தரிசித்து விட்டு, தாங்கள் கொண்டு வந்த சீதனங்களை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். மேலும், அலகு குத்தி வந்தும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.

இதேபோல, கேரள மாநிலம் பத்தனம் திட்டா பகுதியைச் சேர்ந்த பழங்குடி மக்களும் தாய் வீட்டு சீதனம் கொண்டு வந்தனர். இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in