

கும்பகோணம்: திருவிடைமருதூர் வட்டம், திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயிலில் புரட்டாசி பெருவிழா கொடியேற்றம் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
ஆண்டுதோறும் ஒப்பிலியப்பன் கோயிலில் புரட்டாசி பெரு விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு, அக்.3 பூர்வாங்க பூஜைகளுடன் இன்று காலையில் கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக கொடிமரத்துக்கு 21 வகையான மங்களப் பொருட்களால் அபிஷேகம் செய்விக்கப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது, பூதேவி உடனாய பொன்னப்பர் சிறப்பலங்காரத்தில் காட்சியளித்தார்.
கொடியேற்ற நிகழ்வில் அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹம்சன், அறங்காவலர் குழுத் தலைவர் மோகன் மற்றும் உறுப்பினர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, நாளை முதல் 11-ம் தேதி வரை பெருமாள் தாயாருடன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா புறப்பாடு நடைபெறுகிறது. பிரதான நிகழ்ச்சியான 12-ம் தேதி காலை 6.30 மணி முதல் 8 மணிக்குள் தேரோட்டமும், தீர்த்தவாரியும், 13-ம் தேதி மூலவர் திருமஞ்சனமும், சப்தாபரணமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத் துறை அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.