

புதுச்சேரி: ஆந்திர மாநிலத்தில் இருந்து வரத்து குறைவால் புதுச்சேரியில் தக்காளி விலை திடீரென உயர்ந்துள்ளது. புதுச்சேரிக்கு தினமும் 50 டன் அளவுக்கு தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. பெரிய மார்க்கெட்டுக்கு தினமும் லாரிகள் மூலம் ஆந்திரம் மற்றும் கர்நாடகத்தில் இருந்து தக்காளி பெட்டிகளில் கொண்டு வரப்படும். அங்கிருந்து புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு சில்லறை விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். கடந்த 3 நாட்களுக்கு முன்பு ரூ.40-க்கு விற்ற ஒரு கிலோ தக்காளி ரூ.50, 60 என உயர்ந்து, தற்போது ரூ.70 வரை விற்பனை செய்யப்படுகிறது.
சில்லறை விற்பனையில் ரூ.80 வரை தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. புதுச்சேரி மட்டுமல்லாது சென்னையிலும் இன்று சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.80 வரை விற்கப்பட்டு வருகிறது. திடீர் விலை உயர்வுக்கான காரணம் குறித்து வியாபாரிகளிடம் விசாரித்தபோது, ஆந்திரத்தில் இருந்து தக்காளி வரத்து பாதியாக குறைந்து விட்டதால் தக்காளி விலை திடீரென்று உயர்ந்திருப்பதாக வியாபாரிகள் கூறினர்.