Last Updated : 10 May, 2024 04:04 AM

 

Published : 10 May 2024 04:04 AM
Last Updated : 10 May 2024 04:04 AM

அனுமன் தீர்த்தம் ஆற்றில் நீர்வரத்து இல்லாததால் புனித நீராட முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம்

அனுமன் தீர்த்தம் அனுமந்தீசுவரர் கோயில் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பொது குழாய்களில் புனித நீராடும் பக்தர்கள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அனுமன் தீர்த்தம் தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து இல்லாததால், புனித நீராட முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இக்குறையைப் போக்க டிராக்டர் மூலம் தண்ணீர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம் காட்டேரி ஊராட்சிக்கு உட்பட்டஅனுமன்தீர்த்தம் கிராமமானது சேலம்-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் தென் பெண்ணை ஆற்றங்கரை யோரம் உள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்ட எல்லையில் இக்கிராமம் உள்ளது.

பிரசித்தி பெற்ற அனுமன் கோயில்: இக்கிராமத்தின் வழியாகச் செல்லும் தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் பிரசித்தி பெற்ற அனுமன் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் வாரம் தோறும் வெள்ளி, சனி, அமாவாசை, பவுணர்மி மற்றும் அனுமன்ஜெயந்தி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தென்பெண்ணை ஆற்றில் புனித நீராடி அனுமனை வழிபடுவது சிறப்புக்குரியதாகக் கருதப்படுகிறது. இதனால், இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆற்றில் புனித நீராட தவறுவதில்லை.

புனித நீராடுவதில் சிரமம்: இந்நிலையில், தென்பெண்ணை ஆற்றில் கடந்த ஒரு மாதமாக நீர்வரத்து முற்றிலும் இல்லை. இதனால், புனித நீராடலுக்கு வரும் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலையுள்ளது. மேலும், வெளியூர் பக்தர்களின் வசதிக்காகக் கோயில் நிர்வாகம் மூலம் ஆற்றின் அருகே பொதுக் குழாய்கள் அமைக்கப்பட்டு, தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இத்தண்ணீர் குறிபிட்ட நேரம் மட்டுமே விநியோகம் செய்யப்படுவதால், இந்நீரிலும் பக்தர்கள் நீராட முடியாத நிலையுள்ளது. எனவே, கோயிலுக்கு வரும் அனைத்துப் பக்தர்களும் நீராட வசதியாக டிராக்டர் மூலம் தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பெண்களுக்கு தனி இடம் இல்லை - இது தொடர்பாக உள்ளூர் பக்தர்கள் சிலர் கூறியதாவது: கிருஷ்ணகிரி அணையிலிருந்து ஆற்றில் திறக்கப் படும் உபரிநீர் நெடுங்கல் அணை, அரசம்பட்டி, இருமத்தூர் வழியாக அனுமன் தீர்த்தத்துக்கு வருகிறது. கடந்த ஒரு மாதமாக கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து இல்லாத நிலையில், ஆற்றில் நீர்வரத்து முற்றிலும் சரிந்துள்ளது. இதனால், அனுமன்தீர்த்தம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் புனித நீராட முடியாமல் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். கோயில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் போதிய அளவில் தண்ணீர் விநியோகம் செய்வதில்லை. அதேபோல, குழாய் பகுதியில் பெண்கள் குளிக்கத் தனி இட வசதியும் இல்லை.

தட்டுப்பாட்டை போக்க வேண்டும்: எனவே, வரும் காலங்களில் பக்தர்களின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் அதிக அளவில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க வேண்டும். தற்போதைய தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க டிராக்டர் மூலம் தண்ணீரைப் பக்தர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் குளிக்கத் தனி அறை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

கோயில் நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் போதிய அளவில் தண்ணீர் விநியோகம் செய்வதில்லை. அதேபோல, குழாய் பகுதியில் பெண்கள் குளிக்கத் தனி இட வசதியும் இல்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x