Published : 05 Apr 2018 10:54 AM
Last Updated : 05 Apr 2018 10:54 AM

கனி காணும் நாள்

ஏப்ரல் 14: சித்திரை நாள்

சித்திரைக் கனி காண குமரி கோயில்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. சுசீந்திரம் தாணுமாலயப் பெருமாள் சுவாமிகோயில், கிருஷ்ணன் கோயில், ஐயப்பன் கோயில், திருவட்டாறு ஆதிகேசவன் கோயில், குமரி பகவதி அம்மன் கோயில் என எல்லாக் கோயில்களிலும் சித்திரைக் கனி அலங்காரத்துடன் காணப்படும்.

விவசாயிகளின் விசேஷ தினம்

சித்திரை மாதம் முதல் நாள் சித்திரை கனி காணும் நிகழ்வு நடைபெறும். சூரியன் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்குப் பிரவேசிக்கும் நாளே சித்திரைப் புத்தாண்டு என்று அறியப்படுகிறது. குமரியில் இந்நாள் சித்திரை விஷு என்று அழைக்கப்படுகிறது. இது சபரிமலை, குருவாயூர், பத்மனாபசுவாமி திருக்கோயில் போன்ற கோயில்களில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு இந்நாள் விவசாயிகளின் விசேஷ தினமாகக் கொண்டாடப்படுகிறது.

விஷு, வேனல் மழைக்குப் பின் விவசாயம் தொடங்க ஏற்ற நாள் என்பதைக் குறிக்கிறது. விஷு என்பதற்குச் சமம் என்பது பொருள். அன்றைய தினம் இரவும் பகலும் ஒரே நேர அளவு (சமம்) உடையது என்பதைக் காட்டுகிறது. விஷு தினத்தன்று விஷுக்கனி, விஷுகைநீட்டம், விஷுசாப்பாடு போன்றவை முக்கியமானதாகும். விஷுக்கனி என்பது விஷு தினத்தன்று காலையில் வீட்டிலுள்ள வயதான பெண்கள் கனி வர்க்கங்களை அடுக்குவார்கள்.

வாழையிலையில் அரிசியைப் பாதியளவு பரப்பி அதன்மேல் புதுத் துணி, பணம், பொன், பழ வகைகள், கண்ணாடி, ஸ்ரீகிருஷ்ணனின் உருவப் படம் மற்றும் கணிக்கொன்றைப்பூ ஆகியவற்றை அலங்கரித்து வைப்பார்கள். காலையில் எழுந்தவுடன் வீட்டிலுள்ள குழந்தைகள் பெரியவர்கள் கண்விழித்துப் பார்க்க வேண்டியது அலங்கரிக்கப்பட்ட கனியில்தான்.

கணிக்கொன்றைப் பூக்களின் பண்டிகை

குழந்தைகளைப் பெரியவர்கள் கண்களை மூடி அழைத்து வந்து நேரே கனி காண்பிப்பர். அன்று காணும் காட்சியானது அந்த வருடம் முழுவதும் நம் வாழ்வில் ஐஸ்வரியம் நல்கும் என்பது ஐதிகம். அதன்பின் குளித்து புத்தாடை அணிந்து மூத்தோர்களிடமிருந்து இளையவர்கள் கைநீட்டம் வாங்குவர். கைநீட்டங்களை அவர்களது கால்தொட்டு வணங்கி ஆசிபெற்று வாங்கிக்கொள்வர். அந்த வருடம் முழுவதும் கைநிறையப் பணமுடன் நாம் வளம் பல பெற்று வாழ்வோம் என்பது நம்பிக்கை. பின்னர் கோயில்களுக்குச் சென்று வழிபடுவர்.

அன்றைய தினம் வீடுகளில் பாயசத்துடன் உணவும் பரிமாறப்படும். சித்திரை மாதம் விஷு வருகிறது என்பதை நமக்கு முன்கூட்டியே ஞாபகப்படுத்துவது கணிக்கொன்றைப்பூதான். வேனல் காலத்திலும் இக்கொன்றை மரமானது மஞ்சள் நிறத்தில் பூத்துக்குலுங்கும். பார்ப்பதற்கு இலைகள் ஒன்றும் இல்லாமல் மஞ்சள் நிறப் பொன்கம்பளம் விரித்தாற்போல் காட்சிஅளிக்கும். இதைக் காணும் மக்களுக்குப் பண்டிகைப் புத்துணர்வு ஏற்படும். விஷுக்கனியின் ஒரு முக்கிய அம்சமே கணிக்கொன்றைப் பூதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x