Published : 06 Feb 2018 12:11 pm

Updated : 06 Feb 2018 12:11 pm

 

Published : 06 Feb 2018 12:11 PM
Last Updated : 06 Feb 2018 12:11 PM

குருவே... யோகிராமா! 50: விசிறி சாமியார்!’

50

பகவான் யோகி ராம்சுரத்குமார் அற்புதங்கள்

இங்கே எந்த விஷயதையும் நாம் உணருவதே இல்லை. எல்லாவற்றையும் மேம்போக்காகவே பார்க்கிறோம். அன்பையும் நேசிப்பையும் கூட உணரத் தவறிவிடுகிறோம். உறவுகளையும் தோழமைகளையும் கூட உணருவதோ புரிந்துகொள்வதோ இல்லை. அதனால்தான் இத்தனை மன உளைச்சல்களுக்கும் வருத்தங்களுக்கும் ஆளாகிறோம். ஈகோ என்கிற விஷயத்தை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, ‘எனக்கு யாருமே அன்பு காட்டலை’, ‘எங்கிட்ட யாருமே பிரியமா நடந்துக்கலை’ என்றெல்லாம் புலம்புகிறோம்.


சக மனிதர்களுடனேயே சரிவரப் புரிந்து உணர்ந்து பழகாத நிலையில், கடவுளின் அருள் மட்டும் வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். சக மனிதர்களிடம் அன்பைக் கொடுத்து அன்பைப் பெற முடியாத போது, கடவுளிடம் பக்தியைக் கொடுத்து அருளைப் பெறுவது எவ்வகையில் நமக்கு சாத்தியம்?

உணருதல் என்பதே முக்கியம். சகலத்துக்கும் உணருதலே அவசியம். வாழ்தலில் உணருதல் பெரும்பங்கு வகிக்கிறது. தொடர்புகளில் உணருதல் முக்கிய அங்கம் வகிக்கிறது. அன்புடன் இருத்தலிலும் அன்பைப் பெறுவதிலும் உணருதலின்றி ஏதும் நிகழ்வதே இல்லை. அப்படியிருக்க... கடவுள் விஷயத்தில் எவ்வளவு உணரவேண்டும். அவரின் பேரருளைப் பெற எந்த அளவுக்கு உணர்ந்து, புரிந்து, தெளிந்து, நம்மை ஒப்படைக்கவேண்டும்?

பகவான் யோகி ராம்சுரத்குமார் , தன்னை உணருதலே கடவுளை உணருதல் எனும் நிலையை மிகத் தெளிவாக உணர்ந்து வைத்திருந்தார். ஒருகட்டத்தில், தன்னை உணர்ந்ததன் மூலமாக, கடவுளை உணர்ந்தார். கடவுளை உணர்ந்து கண்ட போது, தன்னை இன்னும் தெளிவுற உணர்ந்து கொண்டார்.

திருவண்ணாமலை எனும் புனித பூமியானது, காமகோடி வம்சத்தில் ஜனித்து, மகானாக அவதரித்த சேஷாத்ரி சுவாமிகளைக் கண்டு ஆராதித்தது. தங்கக்கை சுவாமிகள் என்று சொல்லி, நமஸ்கரித்தது. ஒருநாளில், சேஷாத்ரி சுவாமிகள் எங்கு இருக்கிறார்... என்ன செய்கிறார்... எவருக்கும் தெரியாது. ஆனால் இரவு 8 மணிக்கெல்லாம் அருணாசலேஸ்வரர் கோயிலின் கம்பத்து இளையனார் சந்நிதிக்கு வந்துவிடுவார்கள் பக்தர்கள். எங்கே இருந்தாலும் தினமும் அங்கே அந்த நேரத்துக்கு வந்துவிடுவார் சேஷாத்ரி சுவாமிகள்.

ஒருவர் இட்லி வைத்திருப்பார். இன்னொருவர் தயிர் சாதம் தருவார். இன்னொருவர் பிஸ்கட் பாக்கெட்டு வழங்குவார். அடுத்தவர், இனிப்புகளைக் கொடுப்பார். அதிலொன்று இதில் கொஞ்சம் என்று சாப்பிடுவார். பிறகு அங்கே அவருக்கென மெத்தை ஒன்று விரிக்கப்பட்டிருக்கும். உடல் முழுக்க அழுக்குடன், துணியெல்லாம் அழுக்குடன் இருக்கும் சுவாமிகள், அந்த மெத்தையில் படுப்பார். இரண்டு நிமிடத்தில் எழுந்திருப்பார். அந்த மெத்தை முழுக்க அழுக்கேறியிருக்கும். அந்த மெத்தை நீ நான் என்று போட்டி போட்டுக் கொண்டு எடுத்துக் கொள்வார்கள்.

அந்தத் திருவண்ணாமலை, பகவான் யோகி ராம்சுரத்குமாரின் நடமாட்டத்தையும் செயல்களையும் பார்த்தது. ஆரம்பத்தில்... பைத்தியம் என்று சொன்னது. அவர் வந்தால்... நூறடி தள்ளி நின்றது. நின்றவர்கள் ஓடிப்போனார்கள். ஆனால், ஒருகட்டத்தில், பகவான் யோகி ராம்சுரத்குமார் பைத்தியம் இல்லை என்பதை தெரிந்துகொண்டார்கள். ‘அவரு சாமியாருப்பா’ என்று சொல்லிக் கொண்டார்கள். ‘யோகி’ என்று விமர்சித்தார்கள். பக்தர்களின் மனப்புழுக்கத்தையெல்லாம் ஆற்றுகிற வகையில் பகவான் கையில் வைத்திருந்த விசிறியைப் பார்த்துவிட்டு, ‘விசிறி சாமியார்’ என்று அழைக்கத் தொடங்கினார்கள்.

திருவண்ணாமலைக்கு ஒதுக்குப்புறத்தில் உள்ள ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகில் உள்ள புன்னைமரத்தடி, கொஞ்சம் கொஞ்சமாகப் பிரபலமாகிவிட்டது. ரயிலடி சென்றால் புன்னைமரத்தைப் பார்க்கலாம். புன்னைமரத்தைப் பார்க்கும் போது, மரத்தடியில் உட்கார்ந்திருக்கும் விசிறி சாமியாரைப் பார்க்கலாம் என்று திருவண்ணாமலையில் பலராலும் பேசப்பட்டது.

ஒருகட்டம் வரை, புன்னைமரத்தடி சாமியார் என்றும் ஒருசிலர் சொன்னார்கள். ஆனால் விசிறி சாமியார் என்பது காற்றடிக்கும் திசையெங்கும் பரவியது. உணவுப் பொட்டலங்களுடனும் பழங்களுடனும் ஆடைகளுடனும் சால்வைகளுடனும் பகவான் யோகி ராம்சுரத்குமாரைத் தேடி வரத் தொடங்கினார்கள். அவரைத் தரிசித்து நமஸ்கரித்தார்கள்.

பகவான் யோகி ராம்சுரத்குமார், ராமநாமம் சொல்லிக் கொண்டே இருந்தார். வந்தவர்களைப் பார்த்து புன்னகைத்தார். ‘My Father Blessings' ’ என் தகப்பன் உன்னை ஆசீர்வதிக்கிறான்’ என்று ஆசி வழங்கினார். அவரின் வார்த்தை, திருவாக்காயிற்று. அவரின் பார்வை, அருட்பார்வையாய் சக்தியை பரவச் செய்தது. அவரின் மெளனமும் கூட, மிகப்பெரிய ஆசீர்வாதம் என்று சிலாகித்துக் கொண்டாடினார்கள்.

புன்னை மரத்தடியில், அருணாசலேஸ்வரர் கோயிலில், ரமணாஸ்ரமம் செல்லும் வழியில், கிரிவலப் பாதையில், பேருந்து நிலையத்தில் என பகவான் யோகி ராம்சுரத்குமாரைப் பார்த்து வணங்கினார்கள். தடாலென்று விழுந்து நமஸ்கரித்தார்கள்.

‘யாரோ விசிறி சாமியார்னு ஒருத்தர். திருவண்ணாமலைல இருக்கார். அங்கே இங்கே சுத்திட்டிருப்பார். அவர் ஆசீர்வாதம் பண்ணினா, நல்லாருப்போம்னு எல்லாரும் சொல்றாங்க’ என்று பல ஊர்க்காரர்களும் பேசிக்கொண்டார்கள்.

முக்கியமாக, தென் மாவட்டங்களில், மதுரையைத் தாண்டி உள்ள ஊர்களில், பகவான் யோகி ராம்சுரத்குமாரைப் பலரும் பேசிக் கொண்டார்கள். திருவண்ணாமலைக்கு வந்து அவரைத் தேடினார்கள். பார்த்துவிட்டு வணங்கினார்கள். வணங்கும்போது பிரார்த்தனை செய்தார்கள். அந்தப் பிரார்த்தனையில், வியாபாரம் சம்பந்தமான, தேக ஆரோக்கியம் சம்பந்தமான வேண்டுதல்களே நிறைய இருந்தன.

எல்லா வேண்டுதல்களையும் கேட்டுக் கொண்டு, ‘என் தகப்பன் ஆசீர்வதிக்கிறான்’ என்று கைதூக்கி ஆசீர்வதித்தார். விசிறப்படாமலேயே, அவரின் கை விசிறி, எத்தனையோ பேரின் மனப்புழுக்கங்களை, விசிறியால்... விளாசித் தள்ளினார் பகவான் யோகி ராம்சுரத்குமார்! தன் பக்தர்களை, குளிரப்படுத்தினார்.

விசிறி சாமியார்... வெளியுலகுக்கு இன்னும் இன்னுமாகத் தெரிந்தார். தினமும் பக்தர்கள் வந்து தரிசித்தபடி இருந்தார்கள்!

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜெயகுரு ராயா.

- ராம்ராம் ஜெய்ராம்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம் படிப்பதற்கு...


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author