Last Updated : 25 Jan, 2018 06:37 PM

 

Published : 25 Jan 2018 06:37 PM
Last Updated : 25 Jan 2018 06:37 PM

வெற்றிவேல் முருகனுக்கு... 12: கண்டவராயன்பட்டி ஊருணியின் கதை!

பழநி பாதயாத்திரையின் முக்கிய அம்சம்… கண்டனூர் சாமியாடிச் செட்டியார்! பாதயாத்திரை தொடங்கிவிட்டால், பக்தர்கள் கூட்டம் கூட்டமாக நடந்து கொண்டிருக்கும் போது, வித்தியாசமான மாட்டுவண்டியைப் பலரும் பார்க்கலாம். கதவு முதலான வேலைப்பாடு கொண்ட, முழுவதும் அடைக்கப்பட்ட மாட்டுவண்டி அது. பாதயாத்திரையின் போது இந்த மாட்டுவண்டியில்தான் கண்டனூர் சாமியாடிச் செட்டியார் வருவார் என்கிறார்கள் பக்தர்கள்.

இது வம்சம் வம்சமாகத் தொடர்வது என்கிறார்கள் நகரத்தார் பெருமக்கள்.

சாமியாடி வம்சத்தின் 9வது தலைமுறையான சாமியாடி ஐயாவின் பெயர் பழ.பழனியப்பன். இவரிடம் ஒருமுறை பேசினேன். ‘’கிட்டத்தட்ட 300 வருஷத்துக்கு முன்னாடி தொடங்கிட்டதா சொல்லப்படுது. வாழ்க்கைல நாம எல்லாருமே ஒருதடவையாவது, ஒரேயொரு தடவையாவது... பழநிக்கு பாதயாத்திரையாப் போய், முருகப்பெருமானை தரிசனம் பண்ணிடணும். நம்மளோட முன் ஜென்மப் பாவங்களையெல்லாம் தீர்த்துவைப்பான். வினைகளையெல்லாம் போக்கிருவான் வேலவன்’’ என்று சொன்னார்.

விபூதி, நெற்றி, தோள்பட்டை முதலான இடங்களில் பூசிக்கொள்வோம். காலில் பூசிக்கொள்வோமா? பழநி பாதயாத்திரையின் போது, நடந்து வரும் பக்தர்கள் சிலருக்கு, கால் வீக்கமாகிவிடும். கொப்புளம் கூட வந்துவிடும். தவித்துப் போய்விடுவார்கள். அப்போது சாமியாடி செட்டியார் வண்டியைப் பார்த்துவிட்டு, விறுவிறுவென அவரிடம் சென்று, விபூதி வாங்கி, காலில் வீங்கிய இடத்தில், வலி இருக்கிற இடங்களில், கொப்புளம் வந்த பாதத்தில் தடவிக் கொள்வார்கள். அவ்வளவுதான்... வலி போன இடமும் தெரியாது. கொப்புளம் இருந்த இடமும் தெரியாது.

காரைக்குடி, கோட்டையூர், வேலங்குடி, பள்ளத்தூர், கண்டனூர், புதுவயல் என பல ஊர்களில் இருந்தும் வருபவர்கள் முதல் நாள் இரவு காரைக்குடி அருகில் உள்ள குன்றக்குடி கோயிலை ஒட்டியுள்ள பகுதிகளில், பெரும்பாலும் தங்கிவிடுவார்கள். அங்கே நிறைய மடங்களும் சத்திரங்களும் இருக்கின்றன. அந்த இடங்களில், அன்னதானம் நடந்துகொண்டே இருக்கும்.

அதேபோல், குன்றக்குடியில் ஏதோ தேர்த்திருவிழா போல கூட்டம் நிரம்பியிருக்கும். புதிதுபுதிதாக தற்காலிகமான கடைகள் முளைத்திருக்கும். இலவச மருத்துவ முகாம்களும் இருக்கும். பொதுவாகவே, வழிநெடுகவே, இலவச மருத்துவ முகாம்களைப் பார்க்கலாம். கால் வலி, ஒவ்வாமை, அலர்ஜி, ஜூரம் என உபாதைகளுக்கு அங்கே மருந்து வழங்குவார்கள்.

குன்றக்குடி அடிகளார் மடம், கோயிலுக்கு அருகில்தான் இருக்கிறது. அந்த சமயத்தில், பாதயாத்திரை தருணத்தில் அடிகளார் இருந்தால், பக்தர்களுக்குத் தரிசனம் தருவார். இவரைத் தரிசித்து, இவரிடம் விபூதிப் பிரசாதம் பெறுவதற்காகவே மிக நீண்ட க்யூவில் காத்திருப்பார்கள் பக்தர்கள்!

பொதுவாகவே, குன்றக்குடி மலை மீது ஏறி, அப்போது முருகப்பெருமானைத் தரிசிக்காமல், பழநி நோக்கியே யாத்திரை செய்வார்கள் பெரும்பாலான பக்தர்கள். பழநி மலைக்கு மாலையணிந்து விரதம் இருந்து யாத்திரை தொடங்கிவிட்ட பிறகு வேறு மலையில் ஏறக்கூடாது என்று சொல்கிறார்கள். ஆகவே பழநிக்கு சென்று முருகப்பெருமானைத் தரிசித்துவிட்டு, பிறகு அங்கிருந்து பஸ் பிடித்து குன்றக்குடி வந்து, இங்கே தரிசனம் செய்துவிட்டு, சிதறுகாய் உடைத்து யாத்திரையை நிறைவு செய்பவர்களும் உண்டு.

இன்னொரு விஷயம்... காரைக்குடியில் இருந்து பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் கண்டவராயன்பட்டியும் அங்கே உள்ள ஊருணியும் வெகு பிரசித்தம்.

இந்த கண்டவராயன்பட்டி ஊருணிக்குப் பின்னணியில் ஆகச்சிறந்த பக்தியும் தர்மமும் நிறைந்திருக்கிறது.

அதாவது, ஒருகாலத்தில் இந்தப் பகுதி காடாக இருந்ததாகச் சொல்கிறார்கள். பக்தர்களுக்கு வழிநெடுக உணவு கிடைத்தாலும் இந்தப் பகுதியில் உணவுக்கும் வழியில்லாமல் இருந்தது. இதையெல்லாம் அறிந்து உணர்ந்த கலிங்கப்பச் செட்டியார் எனும் அன்பர், என்ன செய்தார் தெரியுமா?

இந்த இடத்தை விலைக்கு வாங்கினார். அங்கே ஊருணி வெட்டி, எல்லோருக்கும் பயன்படும்படி செய்தாராம். அதுமட்டுமா? வருடம் தவறாமல், பாதயாத்திரையின் போது, இந்தப் பகுதியில் இலை போட்டு விமரிசையாக அன்னதானம் செய்தார்.

இதனால், இந்த ஊருணிக்கு கலிங்கப்பையா ஊருணி என்றே பெயர் அமைந்ததாகச் சொல்கின்றனர். இவருடைய பரம்பரையைச் சேர்ந்தவர்கள், இன்றைக்கும் வருடம் தவறாமல், இங்கே அன்னதானம் செய்து வருகின்றனர்.

காவடி பற்றி இங்கே இன்னொரு விஷயத்தையும் சொல்லவேண்டும்.

அதாவது, காவடி எடுக்கும் பக்தர்களுக்கு சில கட்டுப்பாடுகளும் விதிகளும் இருக்கின்றன. நகரத்தார் காவடியாக இருந்தாலும் சரி, நாட்டார் காவடியாக இருந்தாலும் சரி... வழியில் வேறு எங்கும் சாப்பிடக்கூடாது. காவடி தங்குகிற ஒவ்வொரு இடத்திலும், காவடி எடுத்துவரும் பக்தர்களுக்காகவே உணவு தயாராகும். அதையே சாப்பிடவேண்டும்.

அதேபோல, சிறுநீர் முதலான இயற்கை உபாதைக்குச் சென்று வந்தால், குளித்து விட்டுத்தான் காவடியைத் தொடவேண்டும் என்கிறார்கள் காவடி எடுத்து வரும் பக்தர்கள்.

ஒவ்வொரு இடத்திலும் காவடி தங்கும் இடத்தில், அங்கே காவடிக்கும் வேலுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்படும். முன்னதாக, பஜனைப் பாடல்கள் பாடப்படும். பாடல்களின் நிறைவாக, தீபாராதனை காட்டப்பட்டு, அன்னத்தை நைவேத்தியமாக்கி, பிறகு அதையே பக்தர்கள் சாப்பிடுகிறார்கள்.

பழநி திருக்கோயிலில், நகரத்தார் காவடி அன்பர்களுக்கு சிறப்பு மரியாதையும் விசேஷ தரிசனமும் உண்டு. நாட்டார் காவடி பக்தர்களுக்கும் இப்படியான மரியாதைகளும் தரிசனங்களும் கோயில் நிர்வாகத்தினரால் செய்யப்படுகிறது.

இன்னொரு முக்கியமான விஷயம்...

நகரத்தார் காவடி அன்பர்கள், தைப்பூசத்துக்கு ஏழு நாட்கள் முன்பு காரைக்குடி மற்றும் அருகில் உள்ள ஊர்களில் இருந்து யாத்திரையைத் தொடங்குகின்றனர். தைப்பூச நாளில் அங்கே சிறப்பு பூஜைகளைச் செய்துவிட்டு, மறுநாளும் தண்டாயுதபாணியை தரிசனம் செய்கின்றனர். தைப்பூசத்துக்கு இரண்டாம் நாள் அல்லது மூன்றாம் நாளில், பழநியில் இருந்து நடந்தே ஊர் திரும்புவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். கிட்டத்தட்ட 19 நாள் பாத யாத்திரை மேற்கொள்கின்றனர் என்று தெரிவிக்கிறார் ராமு எனும் முருக பக்தர்.

நாட்டார் காவடி அன்பர்கள், தைப்பூச நாள் தரிசனம், மறுநாள் தரிசனம் என்றெல்லாம் முடிந்ததும் தனி வாகனத்தில் வேன் அல்லது பஸ் மூலம் ஊருக்கு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

யாத்திரையாக வரும் பக்தர்கள், இடும்பன் சந்தியில் தரிசனத்தையும் வேண்டுதலையும் முடித்துவிட்டு, அடிவாரம் வந்து அப்படியே பழநிமலையை ஏறும்போது அவர்களின் பக்தியையும் பரவசத்தையும் பார்த்தால் மெய்சிலிர்த்துப் போய்விடுவோம்.

உண்மையான பக்தி, அப்படித்தான் பார்ப்பவரையும் பரவசத்தில் ஆழ்த்திவிடும்!

-வேல் வேல்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x