Published : 08 Mar 2024 06:14 AM
Last Updated : 08 Mar 2024 06:14 AM

வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்கள் திரண்டனர் - வனத்துறையினர் கண்காணிப்பு

பூண்டி வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் பக்தர்களிடம் பிளாஸ்டிக் கவர்கள் இருக்கிறதா என சோதனை செய்த வனத்துறை ஊழியர்கள்.

கோவை: மகா சிவராத்திரியை முன்னிட்டு, வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்கள்திரண்டுள்ளதால், மலையில் தற்காலிக முகாம் அமைத்து வனத்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையை அடுத்த பூண்டியில்மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் உள்ளது. 7-வது மலை உச்சியில் சுயம்பு லிங்கமாக வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

ஒவ்வோர் ஆண்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு மார்ச் முதல் ஏப்ரல் மாதம் வரை வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்து வருகிறது.

இந்நிலையில், கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த ஆர்.நாகராஜன் என்பவர் ரிட் மனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, வெள்ளியங்கிரி மலை ஏற பிப்ரவரி முதல் மே மாதம் வரை அனுமதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் முதல் வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது. மேலும், இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவில்மலை ஏற வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 35,000-க்கும் மேற்பட்டவர்கள் வெள்ளியங்கிரி மலை ஏறியுள்ளனர். நேற்று முன்தினம் மட்டும் 1,800-க்கும் மேற்பட்டோர் மலை ஏறி இறங்கியுள்ளனர்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாள்களுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏற வருவார்கள். மொத்தம் 7 மலைகளை கொண்ட வெள்ளியங்கிரி மலையின் 2, 4, 6 ஆகிய மலைகளில் மூன்று நாள்களுக்கு வனத்துறையினர் முகாம் அமைத்து கண்காணிக்க உள்ளனர்.

மலை ஏற வரும் பக்தர்களுக்கு வழிகாட்டவும், தீ தடுப்பு மேலாண்மை செய்யவும் 24 மணிநேரமும் முகாமில் வனத்துறை ஊழியர்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.

மலையடிவாரத்தில் வனத்துறை உள்ளிட்ட தன்னார்வலர்கள் 70 பேர் வரையிலும், மலையில் கண்காணிப்பு முகாம்களில் 20-க்கும்மேற்பட்டோரும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

பக்தர்கள் மலைப் பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துசெல்ல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மலையில் பிளாஸ்டிக் குடிநீர்பாட்டில்களை வீசுவதை தடுக்கும்வகையில், மலை ஏற வரும் பக்தர்களிடம் ரூ.20 பெற்றுக்கொண்டு பாட்டிலில் ஸ்டிக்கர் ஒட்டப்படும். கீழே இறங்கிவந்ததும், பிளாஸ்டிக் குடிநீர் பாட்டிலை கொடுத்து 20 ரூபாயை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இந்த சீசன் முழுவதும் சுமார் 1 லட்சம் முதல் 2 லட்சம் பேர் வரை மலை ஏற வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x