Last Updated : 13 Feb, 2018 11:29 AM

 

Published : 13 Feb 2018 11:29 AM
Last Updated : 13 Feb 2018 11:29 AM

மாசி அமாவாசை தர்ப்பணம்... முன்னோர் ஆராதனை மறக்காதீங்க!

மகத்தான மாசி மாதத்தின் அமாவாசை நாளில், முன்னோர் ஆராதனையை மறக்காமல் செய்வோம். தர்ப்பணம் முதலான காரியங்கள் செய்து, பித்ருக்களின் ஆசியைப் பெறுவோம்! மாசி அமாவாசை வரும் 15.2.18 வியாழக்கிழமை.

அமாவாசை என்பது முன்னோருக்கான நாள். நம் பித்ருக்களை வழிபடுவதற்கான அற்புதமான நாள். மாதந்தோறும் வருகிற அமாவாசையில், தர்ப்பணம் முதலான காரியங்கள் செய்து, முன்னோரை ஆராதித்து, அவர்களை வணங்கினால், நாமும் நம் சந்ததியினரும் வளமுடன் வாழ்வோம் என்பது உறுதி. முக்கியமாக, பித்ரு சாபம் இல்லாமல், பெருமகிழ்வுடன் வாழலாம் என்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்!

அமாவாசை, கிரகணம், புரட்டாசி மகாளயபட்ச காலம், தமிழ் மாதப் பிறப்பு என மொத்தம் 96 வகையான தர்ப்பணங்கள் உள்ளன என்கிறார்கள் ஆச்சார்யர்கள். இந்த 96 தர்ப்பணங்களையும் செய்ய முடியாவிட்டாலும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை முதலான காலங்களிலேனும் அவசியம் தர்ப்பணம் செய்து, முன்னோரை வணங்கச் சொல்கிறது தர்ம சாஸ்திரம்!

மாசி என்பது மகத்தான மாதம். வேதம் கற்றுக் கொள்ளுதல், கலைகளைக் கற்றறிதல், உபநயனம் முதலான விஷயங்களுக்கான அற்புதமான மாதம் மாசி மாதம். இந்த மாசி மாதத்தில் நாம் எது செய்தாலும் இரட்டிப்புப் பலன்கள் உண்டு என்பது உறுதி!

மாசி மாதம் இன்று (13.2.18) பிறந்துள்ளது. மாசிச் செவ்வாய் என்பது அற்புதமான கிழமைகளில் ஒன்று. மாசிச் செவ்வாயில், பிறந்துள்ள அதேவேளையில், மாசியில் வரும் மகா சிவராத்திரி நன்னாளும் இன்றைய தினம் வந்துள்ளது கூடுதல் சிறப்பு. அதுமட்டுமா. மாசிச் செவ்வாயில், மாசிப் பிறப்பு, மகா சிவராத்திரி நன்னாள் மட்டுமின்றி இன்றைய தினம் பிரதோஷமும் கூட!

இப்படியொரு ஆரம்ப அமர்க்களமான மாசி மாதத்தில் வருகிற 15.2.18 வியாழக்கிழமை அன்று அமாவாசை. அன்று முன்னோர்களை ஆராதிப்போம். நம் பித்ருக்களை நினைத்து, இயலாதவர்களுக்கு நம்மால் முடிந்த அளவில், உணவுப் பொட்டலம் வழங்குவோம். காலில் செருப்பு இல்லாதவர்களுக்கு காலணி வாங்கித் தருவோம். இயன்றதைச் செய்வோம். அதில் முன்னோர் குளிர்ந்து போவார்கள். நமக்கும் நம் சந்ததியினருக்கும் பலமாக, பக்கபலமாக இருந்து ஆசி வழங்குவார்கள் என்பது உறுதி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x