Published : 15 Jan 2018 10:06 am

Updated : 05 Feb 2018 12:01 pm

 

Published : 15 Jan 2018 10:06 AM
Last Updated : 05 Feb 2018 12:01 PM

ஜோதிடம் அறிவோம்! 5: இதுதான்...இப்படித்தான்..! செவ்வாய் தோஷமும் சின்னச்சின்ன பரிகாரங்களும்!

5

பஞ்சபூத தத்துவத்தின் அடிப்படையிலான பரிகாரங்களை, கடந்த அத்தியாயத்தில் சொல்லியிருந்தேன்,

இப்போது இன்னும் சில பரிகாரங்களைப் பகிர்ந்து கொள்கிறேன்.


முன்னதாக ஒரு விஷயம்...

இந்தத் தொடரை வாசிக்கும் ஒரு சிலர் “ எனக்கு ஜோதிடத்தில் பெரிய அளவில் நம்பிக்கை இல்லை, ஏதோ நீங்கள் சொல்ல வருகிறீர்கள் அதையும் படித்துதான் பார்ப்போமே” என்பவர்களுக்கு இந்தப் பதிவு நிச்சயம் சிந்திக்க வைக்கும்.

விஞ்ஞானபூர்வமாக 1610 ல் கலிலியோ செவ்வாயைக் கண்டுபிடித்தார். ஆனால் 1659 ல் வானியல் ஆய்வாளர் Drew என்பவர் செவ்வாயைப் பற்றி முழுமையானத் தகவல்களை வெளியிட்டார்.

அதாவது, செவ்வாய் சிவப்பு நிற கிரகம், பூமியை ஒத்த நில மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு போன்ற தகவல்களை உலகுக்குத் தந்தார்,

இதை ஜோதிடம் என்னும் வானவியல் கலை, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏன் யுகங்களைக் கடந்தும் கூட தங்கள் ஞான திருஷ்டியால் இவை அனைத்தையும் அறிந்து சொல்லியிருந்தது.

“ செவ்வாய் சிவப்பு நிற கிரகம், அதன் நிலம் காரத்தன்மை கொண்டது, பூமியை ஒத்து இருப்பதால் சக தன்மை என்னும் பொருளில் சகோதர கிரகம் என்று சொல்லலாம். சூரியனிடம் இருந்து வரும் பெரும் பாதிப்புகளை தடுத்து பூமியைக் காப்பதால், எதிர்த்துப் போராடும் குணாதியசத்தை வைத்து, போர் கிரகம் என்ற பெயர் இதற்கு அமைந்தது என சொல்லிக்கொண்டே போகலாம்,

மீண்டும் பரிகாரத்திற்கு வருவோம்.

நம் உடலில் உள்ள ரத்தம், செவ்வாயைக் குறிக்கும்.

திருமணப் பொருத்தத்தின் போது செவ்வாய் தோஷம் ஏன் பார்க்கப்படுகிறது தெரியுமா. அறிவியல் ரீதியாக ஒவ்வொருவரின் ரத்தமும் வேறுபட்ட வகையில் ( Blood group) இருக்கும்.

இந்த வகை ரத்தம், இந்த வகைக்கு மட்டுமே சேரும் என்பது பொது விதி.

உதாரணமாக:— ஆணுக்கு A குரூப் என்றால், பெண்ணுக்கு A அல்லது AB யாக இருக்க வேண்டும்,

ஆணுக்கு B குருப் என்றால், பெண்ணுக்கு B அல்லது AB வகை ரத்தம் இருக்க வேண்டும்.

மாறாக, ஆணுக்கு A வகை என்றால், பெண்ணுக்கு O - B யாக இருக்கக்கூடாது,

ஆணுக்கு B வகை என்றால், பெண்ணுக்கு O- A ஆக இருக்கக்கூடும் கூடாது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கபட்டுள்ளது,

அதாவது இணைய வேண்டிய ரத்தங்கள் இணையும் போது பிறக்கும் குழந்தை முழு ஆரோக்கியத்தோடு பிறக்கும்; வளரும்.

மாறாக இணையக்கூடாத ரத்தங்கள் இணையும்போது, குழந்தை பாக்கியம் இல்லாமல் போகவும் அல்லது பாதிப்புள்ள குழந்தை பிறக்கவும் வாய்ப்புள்ளது.

எனவே, ஜோதிட நம்பிக்கை இல்லாதவர்கள் உங்களுக்கு வர இருக்கும் ரத்த வகை அறிந்து மணம் முடித்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான, மன நிறைவான வாழ்க்கையை அதன் மூலம் அமைத்துக்கொள்ளுங்கள்.

இன்னும்சிலபரிகாரங்கள்:-

ஜாதகத்தில் செவ்வாய் பலம் இழந்தவர்கள், முடிந்த அளவு ரத்ததானம் தாருங்கள், அற்புதமான பலன்களைக் காண்பீர்கள்.

செவ்வாய்க் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம் தருவது. உங்கள் கிரகத்துக்கும் அதன் மூலமாக உங்களுக்கும் பலம் கொடுக்கும். பலன் பெறுவீர்கள்!

உங்கள் சகோதர உறவுகளுக்கு பிரதிபலன் பாராமல் உதவி செய்யுங்கள். சகோதர பந்தத்தை ‘நாம ஒரே ரத்தம்’ என்று சொல்லுகிறோம், இல்லையா. ஆகவே சகோதர உறவுக்குச் செய்யப்படும் உதவி, உங்கள் வாழ்வை இன்னும் வளரச் செய்யும்; மலரச் செய்யும்!

சந்தர்ப்பம் கிடைக்கிற தருணங்களிலெல்லாம், சிவப்புநிற ஆடைகளை தானம் தாருங்கள்,

அம்மன் ஆலயங்களில் ( சக்தி வடிவான தெய்வம்)

குங்கும அர்ச்சனை செய்யுங்கள். முடிந்த அளவு ஒவ்வொரு செவ்வாய்கிழமைகளிலும் செய்து வாருங்கள், செவ்வாயால் உண்டான தோஷங்கள் அனைத்தும் விலகும்,

வீட்டு வாசலில் சிவப்பு மிளகாய், எலுமிச்சை பழத்தோடு சேர்த்து கட்டி வையுங்கள். திருஷ்டியும் விலகும். தீயசக்தியும் அண்டாது. தோஷங்களும் விலகும்!

இவை அனைத்தும் நல்ல நல்ல பலன்களை வாரி வழங்குவது உறுதி!

இன்னொரு விஷயம்...

பெண்களுக்கு கணவனைக் குறிக்கும் கிரகம் செவ்வாய், எனவே செவ்வாய் பலம் அடைந்தால் கணவன் பலம் அடைவதாக அர்த்தம்.

அப்படியொரு பலத்தை நான் பெற்று, அதன் மூலம் கணவர் பலம் பெறுவது எவ்விதம்?

அடுத்துப் பார்ப்போம்!

- தெளிவோம்

(இதன் அடுத்த அத்தியாயம் வருகிற 17.1.18 புதன் அன்று வெளிவரும்)


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x