Last Updated : 06 Feb, 2018 11:03 AM

 

Published : 06 Feb 2018 11:03 AM
Last Updated : 06 Feb 2018 11:03 AM

தாயே நீயே துணை! 4: ‘இந்தக் குழந்தை காளிகாம்பாள் பிரசாதம்!’

அம்மன் அற்புதங்கள்... தலங்கள்!

சக்தி வழிபாடு என்பதே மிகவும் மகத்துவம் கொண்டது. அதிலும் சக்தி எனும் அம்பிகைக்கு உரிய நன்னாளில், அவள் குடிகொண்டிருக்கும் ஆலயங்களுக்குச் சென்று அவளை வணங்கி வழிபடுவது இன்னும் பலன் தரக்கூடியது. பலம் வழங்கக்கூடியது என்கிறார்கள் ஸாக்த உபாஸகர்கள். இன்னும் குறிப்பாக, ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்த அம்மன் கோயில்கள் ரொம்பவே சக்திமிக்கவை என்று போற்றப்படுகின்றன.

சக்திபீடங்களுக்கெல்லாம் தலைமை பீடம் என்று போற்றப்படுவது காஞ்சி மாநகரம். இங்கே உள்ள காமாட்சி அம்பாளே, சக்திபீடங்களின் தலைமைபீடம், சக்தீபீடங்களின் தலைவி என்றெல்லாம் புகழப்படுகிறாள்.

காமாட்சி அம்பாள் சந்நிதியில், ஸ்ரீசக்ரத்தைப் பிரதிஷ்டை செய்தார் ஆதிசங்கரர். இந்த ஸ்ரீசக்ரத்தில், லலிதா சகஸ்ரநாமத்தை இயற்றிய வாக்தேவதைகள் எண்மர், எழுந்தருளி வியாபித்திருக்கின்றனர் என்பதாக ஐதீகம்!

அதேபோல், மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலிலும் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. கோயில் நகரம் கும்பகோணம் அருகில் உள்ள பாஸ்கரராஜபுரம் தலத்திலும் அம்பாள் சந்நிதியில் ஸ்ரீசக்ரப் பிரதிஷ்டை செய்யப்பட்டு அங்கே அதன் சக்தி, அருள் வழங்கிக் கொண்டிருக்கிறது.

ஆந்திராவின் ஸ்ரீசைலம் பிரம்மராம்பிகா சந்நிதியிலும் புதுக்கோட்டை ஸ்ரீபுவனேஸ்வரி அம்மன் கோயிலிலும் மகாமேரு பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.

திருச்சி திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி அம்பாள் சந்நிதியில் இன்னொரு சிறப்பாக, அம்பாளின் ஒரு காதில், ஸ்ரீசக்ர தாடங்கமும் இன்னொரு காதில் சிவசக்ர தாடங்கமும் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது என்கிறார் திருப்பட்டூர் பாஸ்கர குருக்கள்.

இத்தனை பெருமைகளும் சக்தியும் கொண்ட ஸ்ரீசக்ரம், சென்னை பாரிமுனை காளிகாம்பாள் கோயிலிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆதிசங்கரர் இங்கே வந்து, இந்த ஸ்ரீசக்ரத்தைப் பிரதிஷ்டை செய்து அருளியுள்ளார். எனவே, காளிகாம்பாளின் அருள்ராஜ்ஜியம், இன்றளவும் தொன்றுதொட்டு, எங்கெல்லாமோ பரவியிருக்கிறது என்கிறார்கள் காளிகாம்பாள் பக்தர்கள்.

ஸ்ரீசக்ரநாயகியாய் கொலுவிருந்து, பக்தர்களின் துக்கங்களையும் வாட்டங்களையும் போக்கி, அவர்களின் வாழ்க்கைச் சக்கரத்துக்கு அச்சாணியாக இருந்து அருள்பாலித்து வருகிறாள் காளிகாம்பாள். அதுமட்டுமா? ஸ்ரீசக்ர காளிகாம்பாளுக்கு, காளிகாம்பாள் கோயிலுக்கு இன்னொரு சிறப்பும் இருக்கிறது. அதாவது, சந்நிதியில் ஸ்ரீசக்ரம் கொண்ட காளிகாம்பாளின் தேரும் ஸ்ரீசக்ரத் தேராகவே அமைக்கப்பட்டிருப்பது, இந்தக் கோயிலின் தனிச்சிறப்புகளில் ஒன்று. அதாவது ஸ்ரீசக்ரமே இங்கு தேராக அமைந்துள்ளது. சக்ரராஜ விமானம் என்று சொல்லப்படும் இந்தத் தேர், கிண்ணித் தேர் என்றும் அழைக்கப்படுகிறது.

வருடந்தோறும் வைகாசி மாதத்தில், இங்கே பிரம்மோத்ஸவ விழா பத்துநாள் விழாவாக விமரிசையாக நடந்தேறும். அப்போது ஒன்பதாம் நாள் இரவில்... வெண்கலக் கிண்ணிகளால் நிறைந்திருக்கும் திருத்தேர், மின்னொளியில் தகதகக்க... அங்கே ஆயிரம்கோடி சூரியப் பிரகாசத்துடன் காட்சி தரும் காளிகாம்பாளின் உத்ஸவ மூர்த்தத்தைத் தரிசிக்கக் கண் கோடி வேண்டும்.

ஆகவே மற்ற தலங்களை விட, காளிகாம்பாள் எல்லோருக்கும் இஷ்ட தெய்வமாகவும் காரியங்கள் யாவற்றையும் ஈடேற்றித் தரும் அன்னையாகவும் போற்றிக் கொண்டாடப்படுவதற்கு இதுபோன்ற பல சக்திமிக்க விஷயங்கள் காரணமாக இருக்கின்றன.

காளிகாம்பாள் குடிகொண்டிருக்கும் அந்தப் பகுதியில் பிறந்து, வளர்ந்த பெண் அவர். தற்போது திருமணமாகி வேறு ஊர், வேறு மாநிலம் என்று சென்றுவிட்டார். கல்யாணமாகி, பனிரெண்டு வருடங்களாகிவிட்டன. ஆனாலும் குழந்தை பாக்கியம் இல்லை எனும் குறையுடன் வாழ்ந்து வந்தார்.

பனிரெண்டு வருடங்கள் கழித்து, ஊருக்கு வந்தவர், காளிகாம்பாள் சந்நிதிக்கு வந்தவர்... ‘உன் காலடில பிறந்து வளர்ந்தவ நான். என்னை இப்படித் தவிக்கவிடலாமா. ஒரு குழந்தை கொடு. ஒரேயொரு குழந்தை கொடு. உன் சந்நிதி இருக்கிற இந்த ஏரியாலதான், நான் குழந்தையா ஓடியாடி விளையாடிருக்கேன். இப்ப எனக்கு ஒரு குழந்தை இல்ல. அந்த பாக்கியத்தை எனக்குக் கொடு. எல்லாத்தையும் கொடுத்திருக்கே. இந்த குழந்தை வரத்தையும் கொடு’ என்று சொல்லி வெடித்துக் கதறினார். அம்பாளுக்கு அணிவித்த எலுமிச்சை மாலையில் இருந்த எலுமிச்சையை சாறாக்கி, குடித்தார். அங்கே உள்ள அம்பாளிடம் பூஜிக்கப்பட்ட சிகப்பு நிற ரக்ஷையை கைமணிக்கட்டில் கட்டிக் கொண்டார். பிறகு வடக்கே உள்ள குடியிருக்கும் ஊருக்குச் சென்றார்.

அடுத்த ஆறாம் மாதம், சென்னையில் வந்து கர்ப்பவதியாக வந்திறங்கினார். ஏழாம் மாதத்தில் விமரிசையாக நடந்தேறியது சீமந்தவிழா.

அதையடுத்து, ஒன்பதாவது மாத நிறைவில், ஓர் தை வெள்ளிக்கிழமையில்... அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இது அம்பாள் பிரசாதம்... அம்பாள் குழந்தை என்றே சொல்லிச்சொல்லிப் பூரித்து, புளகாங்கிதத்துடன் வளர்த்து வருகிறது அந்தக் குடும்பம்!

இன்னும் இன்னும் எத்தனையெத்தனையோ பேருக்கு அருள் வழங்கியிருக்கிறாள் அன்னை காளிகாம்பாள். இன்னும் இன்னுமாக வழங்கிக் கொண்டே இருக்கிறாள்.

‘தாயே நீயே துணை’ என்று காளிகாம்பாளை முழுவதுமாகச் சரணடையுங்கள். என் இந்த வாழ்க்கையை நீதான் பாத்துக்கணும் என்று அவளிடம் முறையிடுங்கள். காளிகாம்பாள் இருக்க கவலை எதற்கு என்று சிலிர்ப்புடன் சொல்கிறார்கள் பெண்கள்!

-தரிசனம் தொடரும்

தொடர்புக்கு : ramji.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x