Last Updated : 07 Feb, 2024 04:43 PM

 

Published : 07 Feb 2024 04:43 PM
Last Updated : 07 Feb 2024 04:43 PM

மங்கலம்பேட்டை அருகே கோணாங் குப்பத்தில் மதங்களை கடந்து மனிதம் காக்கும் ‘புனித பெரியநாயகி அன்னை' தேவாலயம்

மங்கலம்பேட்டை அருகே கோணாங் குப்பத்தில் உள்ள புனித பெரியநாயகி அன்னை தேவாலயம்.

கடலூர்: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேமங்கலம்பேட்டை அடுத்துள்ள கோணாங் குப்பம் கிராமத்தில் மதங்களை கடந்து மனிதநேயத்தை காக்கும் புனித பெரியநாயகி அன்னை தேவாலயம் உள்ளது.

இந்த தேவாலய திருவிழாவின்போது அனைத்து மதங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வழிபடுகின்றனர். இத்தாலி நாட்டின் வெனிஸ் நகருக்கு அருகில் உள்ள காஸ்திலியோனே தெல்லே சதவியரே எனும் ஊரில் 1680-ல்பிறந்தவர் கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி.

கிறிஸ்தவ பாதிரியாரான இவர்,இந்தியாவுக்கு வந்திருந்தபோது தமிழ் நாட்டுக்கு வந்து தமிழ்மொழியை கற்றுத் தேர்ந்து, தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களை படித்து ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார்.

தமிழ் மொழியின் மீது கொண்ட பற்று காரணமாக தனது பெயரை ‘தைரியநாதன் எனும் வீரமாமுனிவர்’ என மாற்றிக் கொண் டார். இந்தியாவுக்கு வந்து இந்திய குடிமக்களோடு இரண்டற கலக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்திய துறவிகளின்ஆடைகளான காவி நிற ஆடையையும், இடுப்பில் கச்சையையும் தலைப்பாகையை யும் அணிந்தார். இவர் எழுதிய 'தேம்பாவணி' என்னும் தமிழ் காப்பிய நூல் புகழ் பெற்றது.

வீரமாமுனிவர்

ஆடு மேய்க்கும் சிறுவர்கள்: இவர், 17-ம் நூற்றாண்டின் தொடக்கத் தில் தனது பணித்தலத்தில் இருந்து இரு மாதா சொரூபங்களுடன் பழைய தென்னாற்காடு மாவட்டமான கடலூர் மாவட்டத்துக்கு வந்து, ஏலாக்குறிச்சிக்கு செல்லும் வழியில் மங்கலம்பேட்டை அடுத்த முகாசபரூர் சிற்றரசர்களான ஜமீன் பாளையக்காரர்களின் குடியாட்சிக்கு உட்பட்ட, ஆரியனூர் என்றழைக்கப்படும் கோணாங்குப்பத்துக்கு வந்தார்.

அங்குள்ள அடர்ந்த குறுங்காட்டை கடக்கும்போது, நெடுந்தொலைவு நடந்துவந்த களைப்பினால் அங்கிருந்த ஒரு ஆல மரத்தின் அடியில் மாதா சொரூபங்களை மார்பில் வைத்தவாறே தூங்கி விடுகிறார். அப்போது அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள் அவர் மார்பில் அணைத்தபடி வைத்திருந்த இரு மாதா சொரூபங்களின் அழகில் மயங்கி, ஒரு சொரூபத்தை அவருக்கு தெரியாமல் எடுத்துச் சென்றனர்.

பின்னர் அந்த சொரூபத்தை என்ன செய்வதென்று தெரியாமல் அச்சம் கொண்டு அங்குள்ள முட்புதர்களுக்கு இடையே யாருக்கும் தெரியாதவாறு மறைத்துவைத்தனர். உறக்கம் கலைந்து எழுந்தவீரமாமுனிவர் ஒரு மாதா சொரூபம் மட்டுமே இருப்பதைக் கண்டு அதிர்ச்சி யடைந்து தேடிப் பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை.

புனித பெரியநாயகி அன்னை சொரூபம்.

பின்னர் அருகில் உள்ள முகாசபரூர் ஜமீன் கச்சிராயர் எனப்படும் பாளையக்காரரை சந்தித்து, தான் கொண்டுவந்த மாதா சொரூபத்தில் ஒன்று காணாமல் போனதை கூறி கண்டுபிடித்து தர கேட்டுள்ளார். பாளையக்காரர், “நான் ஆட்களை விட்டு தேடிப் பார்க்கிறேன்“ என்று சொல்லிவிட்டு, “தனக்கு அதிகாரமும் செல்வமும் இருந்தாலும் ஆண் வாரிசு ஒன்று இல்லை“ என்று ஏக்கத்தோடு வீரமாமுனிவரிடம் அவர் கூறுகிறார்.

அதற்கு வீரமாமுனிவர் மாதாவின் மகிமைகளை எடுத்துச் சொல்லி “மாதாவிடம் வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் விருப்பப்படி வாரிசு கிடைக்கும்” என்று கூறி சென்று விட்டார்.

கனவில் வந்த மாதா: அதே நினைவில் பாளையக்காரர் உறங்கச் செல்ல, அச்சிந்தனை கனவாய் வெளிப்பட்டு, கனவில் மாதா வந்தார். “கச்சிராயரே நான் கானகத்தில் தனித்து இருக்கிறேன். எனக்கொரு திருக்கோயில் அமைத்துக் கொடுத்தால் உன் குலம் விளங்க ஒரு ஆண்மகனை தருவேன்” என்று அருள்வாக்கு கூறினார்.

மறுநாள் காலை எழுந்த கச்சிராயர் புது தெம்பும் புத்துணர்ச்சியும் பெற்றவராக தனது ஆஸ்தான ஜோதிடரை அழைத்து கேட்க, ஜோதிடரோ, “கானகத்தில் இருப்பதுஒரு தேவதை. அதற்கு ஒரு ஆலயம் கட்டி வழிபாடு செய்தால் தங்களுக்கு ஆண் மகவு இல்லாத குறை நீங்கும்” என்று கூறியுள்ளார். தமது ஆட்களுடன் அன்னையைத் தேடி ஆரியனூர் குறுங் காட்டுக்கு சென்றார் கச்சிராயர்.

ஆட்கள் முட்புதர்களை அப்புறப்படுத் தும்போது ஒரு இடத்தில் மாதா சிலை கிடைத்தது. அந்த மாதா சொரூபத்தை பக்தி பரவசத்துடன் தன் கையில் ஏந்தி முத்தமிட்ட கச்சிராயர் மாதா சொரூபத்தை அங்கு (கோணாங்குப்பம் பகுதி) வைத்து சிறிய அளவில் கோயில் கட்டி வணங்கி வந்தார். சில மாதங்களில் அவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது.

வீரமாமுனிவர் மீண்டும் வருகை: இந்நிலையில் மீண்டும் தன் பணி நிமித்தமாக ஆரியனூர் பகுதிக்கு வந்த வீரமாமுனிவர் காட்டில் தான் தவறவிட்ட சொரூபத்தை வைத்து மக்கள் வழிபாடு செய்வதை கண்டு மகிழ்ச்சியடைந்தார். பின்னர் அங்கேயே தங்கிய வீரமாமுனிவர் முகாசபரூர் பாளையக்காரர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஆதரவுடன் அப்பகுதியில் பெரிய தேவாலயத்தை கட்டினார்.

மேலும் இந்த ஆலயத்தில் வைக்கப்பட வேண்டிய சொரூபத்துக்காக மேரி மாதாவை தமிழ் பெண் போல வரைந்து,அதை பிலிப்பைன்ஸில் உள்ள மணிலா என்ற இடத்திலிருந்து பெற்றுத்தர வேண்டும் என்று அங்குள்ள ஆயருக்கு கூறி, மணிலாவில் இருந்து வரவழைக்கப்பட்ட சொரூபத்துக்கு ‘புனித பெரியநாயகி அன்னை’ என்று தமிழ் பெயர் இட்டு ஆலயத்தில் அமைத்தார்.

இந்த தேவாலயம் கட்டும் பணிக்காகஇங்கு தங்கியிருந்தபோது தேம்பாவணியின் சில பகுதிகளை எழுதியுள்ளார். தேம்பா வணி நூலிலும் புனித பெரியநாயகி மாதா பற்றி பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

முகாசபரூரைச் சேர்ந்த இந்து பாளை யக்காரர்களால் கட்டி எழுப்பப்பட்டுள்ள இந்த திருத்தலம் தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் முக்கிய மானதாகும்.

வேளாங்கண்ணிக்கு அடுத்தபடியாக கிறிஸ்தவர்களுக்கு முக்கியமான வழி பாட்டுத் தலமாக விளங்கும் புனித பெரிய நாயகி மாதாவை தரிசிக்க சென்னை, வேளாங்கண்ணி, நாகர்கோவில், திருச்சி, சேலம், சின்னசேலம், மேல்நாரியப்பனூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதி களில் இருந்தும் கர்நாடகம், கேரளம், ஆந்திரம்,

புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவ மக்கள், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த இந்துக்கள், முஸ்லீம்கள், என அனைத்து மதத்தைச் சார்ந்தகளும் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

இந்த தேவாலயத்தின் ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 14-ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 23-ம் தேதி தேர்திருவிழாவுடன் நிறைவு பெறும். தேர்த்திருவிழாவில் பாளையக்காரர் வரிசை தட்டுகளுடன் சென்று படையல் செய்த பிறகு தான் தேர் பவனி தொடங்கும்.

இந்த ஆண்டும் இவ்விழா சிறப்புடன் நடந்து முடிந்துள்ளது. இந்த நிகழ்வுகள் மதங்களை கடந்துமனித நேயத்தை இணைக்கும் நிகழ்வுக ளாக இன்றும் திகழ்ந்து வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x