Published : 31 Jan 2024 04:25 PM
Last Updated : 31 Jan 2024 04:25 PM

தொன்மை வாய்ந்த அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் பிப்.2-ல் குடமுழுக்கு - அவிநாசியில் விழாக்கோலம்

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில்

திருப்பூர் மாவட்டத்தில் தொன்மை வாய்ந்த அவிநாசி லிங்கேஸ்வரர் கோயில் குடமுழுக்கு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருப்பதால், அவிநாசி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

கொங்கு மண்டலத்திலுள்ள ஏழு சிவஸ்தலங்களில் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரர் நாயனார் தேவார பதிகம் பாடி உயிருடன் மீண்டும் உயிர்ப்பித்து எழச் செய்த திருத்தலமாகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில். இக்கோயிலின் குடமுழுக்கு விழா கடந்த வாரம் 24-ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து, நாள்தோறும் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

புதுப்பாளையம், ராயம்பாளையம் சன்னை மிராஸ்தாரர்கள், தைப்பூச பழநி யாத்திரை குழுவினர், பல்வேறு பகுதி பொதுமக்கள் எடுத்து வந்த காவிரி தீர்த்தக் குடம் திருவீதி உலா நடைபெற்றது. அவிநாசி வீர ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து குதிரை, காளை மாடு உள்ளிட்டவைகளுடனும் வாணவேடிக்கை, கைலாய வாத்தியம் முழங்கவும் புறப்பட்ட தீர்த்தக்குட ஊர்வலம் மேற்கு, வடக்கு, கிழக்கு ரத வீதிகள் வழியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் நிறைவடைந்தது. இதில் சிறுவர்கள், பெரியவர்கள், சிவனடியார்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அவிநாசியில் நடந்த தீர்த்தக்குட யாத்திரை.

இதையடுத்து, சிறப்பு யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. வரும் பிப்.2-ம் தேதி வெள்ளிக்கிழமை வரை எட்டு கால யாக பூஜை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வாக 2-ம் தேதி காலை 9.15 மணி முதல் 10.15 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம், இரவு 8 மணிக்கு சுவாமி திருவீதி உலா உள்ளிட்டவை நடைபெறுகின்றன.

ஏ.சக்திவேல்

8 லட்சம் அர்ச்சனைகள்: அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ஏ.சக்திவேல் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: கொங்கு நாட்டில் தொன்மை வாய்ந்த அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் வரும் 2-ம் தேதி குடமுழுக்கு நடைபெற உள்ளது. இது மூவேந்தர்கள் மற்றும் விஜயநகர பேரரசால் போற்றப்பட்ட கோயில் ஆகும். கோயில் திருப்பணிகள் மும்முரம் அடைந்துள்ளன.

அனைத்து பூஜைகளும் முறைப்படி நடக்க உள்ளன. எந்தவிதத்திலும், எவ்வித குறையும் இன்றி குடமுழுக்கு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளோம். வரும் 4 நாட்களுக்கு யாகசாலை முறைப்படி நடைபெறும். யாகசாலைக்கு தனிப்பட்ட குழு அமைத்து 79 குண்டங்கள், 8 லட்சம் அர்ச்சனைகள் நடைபெற உள்ளன. அனைத்து பணிகளும் நிறைவுறும் தருவாயில் உள்ளன.

சென்னை சில்க்ஸ் நிறுவனத்தினர் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் திருமாளிகை பத்தி மண்டபத்தை, தூண்கள் உட்பட அதன் தன்மை மாறாமல் புனரமைத்துள்ளனர். வளாகத்தில் கல்தடம் போட்டுள்ளோம். அதேபோல், அனைத்து கதவுகளுக்கும் மராமத்து பணிகள் நடந்து முடிந்துள்ளன.

தோரண வாயில் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. பக்தர்கள் எந்த நேரத்திலும் வழிபடும் அளவுக்கு, அனைத்து கதவுகளுக்கும், சேஃப்டி கேட் போடப்பட்டுள்ளது. மின் இணைப்பு பணிகளும் நவீன முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பகல் நேரத்தில் எப்படி கோயில் ஜொலிக்கிறதோ, அதேபோல் இரவு நேரத்திலும் விளக்குகள் மூலமாக ஜொலிக்கும்.

கும்பகோணத்தில் இருந்து கொடிமரம் வந்து கொண்டிருக்கிறது. குடமுழுக்கு நிறைவுற்றதும், கோயில் வளாகத்தில் சோலார் பேனல் பொருத்தப்பட உள்ளது. அதன்மூலமாக, கோயிலின் மின் தேவை 60 சதவீதம் நிறைவேறும். 20 ஆண்டுகளானாலும், அதன் வண்ணம் மாறாத வகையில் பெயிண்டிங் செய்யப்பட்டுள்ளது. அரசமர விநாயகருக்கு பீடம் பொருத்தும் பணி விரைவில் தொடங்கும். தவத்திரு குமரகுருபர சுவாமிகள், சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் ஆலோசனைப்படி செயல்பட்டு வருகிறோம்.

மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யாக சாலை பணிகள்.

பார்க்கிங், கழிவறை வசதிகளும் விரிவாக செய்யப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் உட்பட பலரும் பங்கேற்பதால், மாவட்ட போலீஸார் சார்பில் விரிவான ஏற்பாடுகளும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும் என்று, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அவிநாசியில் உள்ள அவிநாசி லிங்கேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற உள்ள குடமுழுக்கு, நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வரும் 2-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்படுகிறது. பதிலாக 3-ம் தேதி பணிநாளாக அறிவிக்கப்படுகிறது.உள்ளூர் விடுமுறை தினத்தன்று அரசு அவசர வேலைகளை கவனிக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள கருவூலம், சார்நிலை கருவூலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x