Published : 17 Jan 2024 06:12 AM
Last Updated : 17 Jan 2024 06:12 AM

அயோத்தி ராமர் கோயிலில் பூஜை தொடங்கியது: 108 அடி உயர வாசனை ஊதுபத்தி ஏற்றப்பட்டது

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கான பூஜைகள் நேற்று தொடங்கின. 50 கி.மீ. தூரத்துக்கு மணம் பரப்பும் 108 அடி உயர வாசனை ஊதுபத்தி, கோயில் வளாகத்தில் ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த அறக்கட்டளை செய்து வருகிறது.

இசைக் கருவிகள்: திறப்பு விழா ஏற்பாடுகள் குறித்து அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் கூறும்போது, “ஜனவரி 22-ம் தேதி அயோத்தி கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும். இதற்கான பூஜை வழிபாடுகள் 16-ம்தேதி (நேற்று) தொடங்கின. 22-ம் தேதி வரை தொடர்ந்து பூஜைகள் நடைபெறும். இந்த வழிபாட்டின்போது நாட்டின் அனைத்து மாநிலங்களை சேர்ந்த இசைக் கருவிகளும் இசைக்கப்படும். 23-ம் தேதி முதல் பொதுமக்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்’’ என்றார்.

ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை வட்டாரங்கள் கூறியதாவது: ராமர் கோயிலில் சிலையை பிரதிஷ்டை செய்ய ஜன.16 முதல் 22-ம் தேதி வரை 7 நாட்கள் தொடர்ந்து பூஜைகள் நடைபெறும். ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை உறுப்பினர் அனில் மிஸ்ராவும், அவரது மனைவியும் இந்த வழிபாடுகளில் தொடர்ந்து பங்கேற்பார்கள்.

ஜனவரி 22-ம் தேதி நடைபெறும் 7-வது நாள் பூஜையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார். அவர் சிறப்பு விருந்தினராக இருப்பார். பிரதான பூஜை, வழிபாடுகளில் அனில் மிஸ்ரா தம்பதியினரே பங்கேற்பார்கள்.சிலை பிரதிஷ்டையின்போது கோயில் கருவறைக்குள் பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் நிருத்ய கோபால் தாஸ், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், அனில் மிஸ்ரா தம்பதியர் உள்ளிட்டோர் அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே, கோயில் வளாகத்தில் 108 அடி உயர பிரம்மாண்டமான வாசனை ஊது பத்தியை, கோயில் அறக்கட்டளை நிர்வாகி மகந்த் நிருத்ய கோபால் தாஸ் நேற்று ஏற்றி வைத்தார். இந்த வாசனை ஊது பத்தியின் மணம் 50 கி.மீ. சுற்றளவு வரை பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊது பத்தியின் எடை 3,610 கிலோ. அகலம் மூன்றரை அடி. குஜராத்தின் வடோதராவில் இருந்து அயோத்தி கோயிலுக்கு இந்த ஊதுபத்தி கொண்டு வரப்பட்டுள்ளது.

மாட்டு சாணம், நெய், வாசனை திரவியங்கள், மலர் களில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்கள், மூலிகைகளை கொண்டு இது தயாரிக்கப்பட்டுள் ளது. அடுத்த ஒன்றரை மாத காலத்துக்கு இது தொடர்ந்து எரியும் என்று அறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர்.

குழந்தை ராமருக்கு ஆடை: மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த பாரம்பரிய கைவினைஞர்கள் மறுவாழ்வு அறக்கட்டளை சார்பில் குழந்தை ராமருக்கு தேவையான ஆடைகள் நெய்யப்பட்டுள்ளன. இந்த ஆடைகளை நிர்வாகிகள் அறக்கட்டளை உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் லக்னோவில் நேற்று வழங்கினர் .

யோகி ஆதித்யநாத் கூறும் போது, "புதிய அயோத்தி உருவாகிறது. அனைத்து இந்தியர்களும் அயோத்திக்கு வருகை தர விரும்புகின்றனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் அயோத்தியில் உருவாக்கப்படும்" என்றார்.

ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், கோவா, சத்தீஸ்கர், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் ஜனவரி 22-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்று மதுக்கடைகள், இறைச்சி கடை களை திறக்கவும் அந்த மாநில அரசுகள் தடை விதித்துள்ளன.

காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திரர் பங்கேற்பு: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்கிறார்.

உத்தர பிரதேசம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்கிறார். இதற்காக அவர் வரும் 21-ம் தேதி அயோத்திக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x