Last Updated : 13 Jan, 2024 07:46 AM

1  

Published : 13 Jan 2024 07:46 AM
Last Updated : 13 Jan 2024 07:46 AM

அயோத்தியில் பல வகை பிரசாதம், அன்னதானம்: தமிழ்நாடு உட்பட பல மாநில பக்தர்கள் சேவை செய்ய வருகை

புதுடெல்லி: அயோத்தி புதிய கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யும் விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் பல்வேறு வகை பிரசாதமும் வழங்கப்பட உள்ளது. இதற்காக தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநில பக்தர்கள் சேவை செய்யத் தயாராகி வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயில் ஜனவரி 22-ல் பக்தர்களின் வழிபாட்டுக்கு திறக்கப்படுகிறது. முழுவதுமாக கட்டி முடிந்த, கோயிலின் தரைதளத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். அப்போது கோயில் கருவறையில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.

இதையொட்டி ஆயிரக்கணக்கிலான பக்தர்கள் அயோத்தியில் குவியத் தொடங்கியுள்ளனர். இவர்களுக்காக பல்வேறு வகை பிரசாதமும் அன்னதானமும் தொடர்ந்து வழங்கப்பட உள்ளது. ஆந்திராவின் திருப்பதியில் உள்ள வெங்கடாஜலபதி கோயில் சார்பில் 1 லட்சம் லட்டுகள் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது. இதன் எடை சுமார் 45 டன்கள் ஆகும்.

மகராஷ்டிராவின் நாக்பூரை சேர்ந்த பிரபல சமையல் கலைஞர் விஷ்ணு மனோகர், சுமார் 7,000 கிலோ அல்வாவை பிரசாதமாக ஜனவரி 22-ல் விநியோகிக்க உள்ளார். அவர் தனது குழுவினருடன் அயோத்திக்கு முன்னதாக வந்து இதனை தயாரிக்க உள்ளார்.

உ.பி.யின் மதுராவிலுள்ள கிருஷ்ணஜென்மபூமி கோயில் அறக்கட்டளை சார்பில் 200 கிலோ லட்டுகளை பிரசாதமாக வழங்க உள்ளனர். இதன் தயாரிப்புக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உதவியை பெற உள்ளனர்.

குஜராத்திலும் உ.பி.யின் வாரணாசியிலும் தேவ்ரஹ் பாபா சந்த் சமிதி எனும் ஆன்மிக அமைப்பு செயல்படுகிறது. இதன் சார்பில் உலர்பழங்களை மட்டும் பயன்படுத்தி லட்டு தயாரித்து பிரசாதமாக வழங்க உள்ளனர். நீர் கலக்காத இந்த லட்டுகள் நீண்டநாட்களுக்கு கெடாமல் இருக்கும் என கூறப்படுகிறது. இவைஅட்டைப் பெட்டியில் சிறப்பு அழைப்பாளர்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளன. மேலும் வெளி மாநிலங்களுக்கும் கூரியரில் அனுப்பி வைக்கப்பட உள்ளன.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை சார்பிலும் சிறப்பு பிரசாதம் தயாராகி வருகிறது. இதன் சார்பில் பசுவின் நெய்யில் தயாரிக்கப்படும் லட்டுகள் ஐந்து வகையாக பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது. இப்பணிக்கு உதவிட நாடு முழுவதிலும் இருந்து விஎச்பி தொண்டர்கள் அயோத்தி வரவுள்ளனர்.

இதுபோல் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் அயோத்தி வந்து பிரசாதங்கள் தயாரித்து விநியோகிக்க ராமர் கோயில் அறக்கட்டளையிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

அயோத்தி வந்து குவியும் பக்தர்களுக்கு ஜனவரி 15 முதல் மார்ச் வரை ராமர் கோயில் அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இதில் 56 வகை உணவுகள் பரிமாறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலும் தொண்டு செய்வதற்காக நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து விஎச்பி தொண்டர்களும் நிர்வாகிகளும் அயோத்திக்கு வந்தவண்ணம் உள்ளனர். இந்த அன்னதானம் ராமர் கோயில் அறக்கட்டளை அலுவலகம் அமைந்த ராம்கோட் பகுதியில் நடைபெற உள்ளது.

மதுரை பக்தர்கள்: தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து சில தனிப்பட்ட ராம பக்தர்கள் வந்து அயோத்தியில் தங்கி அன்னதானம் செய்ய உள்ளனர். இவர்கள் தங்கள் பெயரை வெளியிட விரும்பவில்லை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x