Published : 05 Jan 2024 03:18 AM
Last Updated : 05 Jan 2024 03:18 AM

80 ஆண்டுகளாக தொடரும் ஆன்மிக சேவை: பக்தியை பரப்பும் செல்லூர் பஜனை குழுவினர்!

மதுரை செல்லூர் வீதிகளில் பக்தி பாடல்கள் பாடிச் செல்லும் பஜனை குழுவினர்.

மதுரை: சிறுவர்கள், இளைஞர்களிடையே பக்தியை பரப்பும் அரும்பணியை 80 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகின்றனர் செல்லூர் பஜனை மடக்குழுவினர். மதுரை செல்லூர் ஆர்எஸ் நாயுடு தெருவில் வெங்கடேசப் பெருமாள் கோயில் உள்ளது. அதற்கு அடுத்த தெருவில் பஜனை மடம் உள்ளது. சுமார் 80 ஆண்டுகள் பழமையான பஜனை மடத்தில் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இந்த பஜனை மடத்தில் உள்ள குழுவினர் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் வீதிகளில் பஜனை பாடல்கள் பாடி ஆன்மிக மணம் பரப்பிவருகின்றனர். சிறுவர்களையும், இளைஞர்களையும் பக்தி மார்க்கத்தில் அழைத்துச் செல்லும் அரும்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பஜனை மடத்தைச் சேர்ந்த விட்டல் பாகவதர் பேரன் வெங்கடேசன் (75) கூறியதாவது: செல்லூர் பஜனை மடத்துக்கு என்று பல சிறப்புகள் உள்ளன. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியின்போது 10 நாட்களும் பஜனை பாடிய சிறப்புகள் உள்ளன. ஆரம்பத்தில் வைகை ஆற்றங்கரையோரம் இருந்தது. சாலை விரிவாக்கத்தின்போது அகற்றப்பட்டதால் செல்லூர் நாட்டாண்மைக்காரர் மற்றும் அவரது பங்காளிகள் சேர்ந்து ஆர்எஸ் நாயுடு தெருவில் பஜனைமடம் விநாயகர் கோயில் கட்டினர்.

எங்களது பாட்டனார் காலத்தில் மன்னார்சாமி நாயுடு, திருமலைசாமி நாயுடு, ராமசாமி, ஓடுகால் நாயுடு ஆகியோர் பஜனை குழுவை ஏற்படுத்தினர். அவரது பேரப்பிள்ளைகள் தற்போது வழிநடத்தி வருகின்றனர்.

பஜனையில் பெருமாள் குறித்த பக்தி பாடல்கள், பெருமாள் திருநாமங்கள், ராமநாமம், திருப்பாவை பாடல்களை பாடுவோம். நான் கடந்த 5 ஆண்டுகளாக இப்பணியில் ஈடுபட்டுள்ளேன்.

விட்டல் பாகவதர் பேரன் வெங்கடேசன்

பாலச்சந்தர், திருப்பதி உட்பட 20-க்கும் மேற்பட்டோர் பஜனை குழுவில் உள்ளனர். மார்கழி மாதம் முழுவதும், புரட்டாசி மாதத்தில் 4 சனிக்கிழமைகளிலும் பஜனை பாடுவோம்.

தற்போது அதிகாலை 6.30 மணிமுதல் காலை 8.15 வரை இப்பகுதியில் உள்ள முக்கிய வீதிகள் மற்றும் கோயில்கள் வழியாக பஜனை பாடி வருகிறோம். தற்போது சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் என ஏராளமானோர் பஜனை குழுவில் இணைந்து பாடல்களை பாடி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x