Published : 04 Jan 2024 06:00 AM
Last Updated : 04 Jan 2024 06:00 AM

அயோத்தி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தி.நகரில் உள்ள வெங்கடேஸ்வர பெருமாள் கோயிலில் ராமர் சிலை திறப்பு

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னை தியாகராய நகரில் உள்ள வெ ங்கடேஸ்வர பெருமாள் கோயிலில் 10 அடி உயர ராமர் சிலை நேற்று திறக்கப்பட்டது. திறப்பு விழாவில் ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை நிறுவனர் கே .பராசரன், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் சங்கர், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளூர் ஆலோசனை குழு தலைவர் சேகர் ரெட்டி, விஷ்வ இந்து வித்யா கேந்திரா தலைவர் எஸ்.வேதாந்தம், தமிழ்நாடு விஷ்வ இந்து பரிஷத் மாநில தலைவர் ஆர்.ஆர்.கோ பால்ஜி, உபன்யாசகர் வேளுக்குடி கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சென்னை: அயோத்தி ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னை தியாகராய நகரில் உள்ள வெங்கடேஸ்வர பெருமாள் கோயிலில் 10 அடி உயரத்துக்கு ராமர் சிலை திறக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராம ஜென்ம பூமியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலில் கும்பாபிஷேகம் மற்றும் 'பால ராமர்' சிலையின் 'பிராண பிரதிஷ்டை' நிகழ்ச்சி வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளதாக ராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை அறிவித்துள்ளது.

இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னை தியாகராய நகரில் உள்ள வெங்கடேஸ்வர பெருமாள் கோயிலில் 10 அடி உயரத்துக்கு ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இச்சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு தமிழ்நாடு மற்றும்புதுச்சேரி உள்ளூர் ஆலோசனைக் குழு தலைவர் ஏ.ஜெ.சேகர் ரெட்டி தலைமை தாங்கினார். ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை நிறுவனர் மற்றும் அறங்காவலர் உறுப்பினரும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான கே.பராசரன், விஷ்வ இந்து வித்யா கேந்திரா தலைவர் எஸ்.வேதாந்தம் ஆகியோர் பங்கேற்றனர். பகவான் ராமரின் சிலையை பராசரன் திறந்து வைத்தார்.

முன்னதாக, விழாவில் வரவேற்புரையாற்றிய திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழக, புதுச்சேரி ஆலோசனைக் குழு தலைவர் சேகர் ரெட்டி, ‘‘ராமபிரான் பிறந்த இடத்தில் கோயில் அமைத்து சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது. அந்த கோயில் அமைவதற்கு உச்ச நீதிமன்ற மூத்தவழக்கறிஞர் பராசரன் பல ஆண்டுகள் போராடி இந்துக்களின் கனவை நிறைவேற்றி உள்ளார்.

அயோத்தியில் ராமர் கோயில் அமைத்த பிரதமர் மோடி மற்றும் அதற்காக போராடிய அனைவரையும் நன்றியுடன் நினைவுகூருகிறோம்’’ என்றார்.

விழாவில் பேசிய மூத்த வழக்கறிஞர் பராசரன், ‘‘வேள்விக்குடி என்பதுதான் வேளுக்குடி என மருவியுள்ளது. அங்கு நிறைய வேள்விகள் செய்யப்பட்டுள்ளன. அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இங்கு ராமர் சிலை திறக்கப்படும் இந்த விழாவில் பங்கேற்பதில் பெருமை கொள்கிறேன்’’ என்று தெரிவித்தார்.

வேதாந்தம் தனது உரையில், ‘‘ராமஜென்ம பூமி போராட்டம் 500 ஆண்டுகள் நடைபெற்றது. இதில், நான் 50 ஆண்டுகள் பங்கேற்றுள்ளேன். ராமாயணத்தில் கல் மீது ராமபிரான் பாதம் பட்டதும் அகல்யாவுக்கு விமோசனம் கிடைக்கிறது.

அதேபோல, பராசரன் மீது ராமரின் பார்வை பட்டதும் ராமஜென்ம பூமிக்கு விமோசனம் கிடைத்தது. அயோத்தியில் நடக்கும் ராமர் பிரதிஷ்டைக்காக இங்கும் விழா எடுக்கப்படுவது பாராட்டுக்குரியது’’ என்றார்.

உபன்யாசகர் வேளுக்குடி கிருஷ்ணன் பேசும்போது, ‘‘உலகம் முழுவதும் ராமர் கோயில்கள் இருந்தாலும், ராமர் அவதரித்த தலமான அயோத்தி இன்னும் சிறப்பு வாய்ந்தது. தான் அவதரிக்க அயோத்தியைத்தான் ராமர் தேர்வு செய்துள்ளார். எனவே, அங்கு கோயில் கட்டிவழிபடுவது சிறப்பு’’ என்றார்.

விழாவில், திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் சங்கர், தமிழ்நாடு விஷ்வ இந்து பரிஷத் மாநில தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வெங்கடேஸ்வர பெருமாள்கோயிலில் இன்று (ஜன.4) தொடங்கி 26-ம் தேதி வரை தினமும் மாலை சிறப்பு பஜனை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x