Last Updated : 27 Dec, 2023 06:50 PM

 

Published : 27 Dec 2023 06:50 PM
Last Updated : 27 Dec 2023 06:50 PM

திருஉத்தரகோசமங்கை மரகத நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

திருஉத்தரகோசமங்கை மரகத நடராஜர் சன்னதியில் நடைபெற்ற ஆருத்ரா தரிசனம்.

ராமநாதபுரம்: பிரசித்தி பெற்ற திருஉத்தரகோசமங்கை மரகத நடராஜர் சன்னதியில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கையில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ஆதி சிதம்பரம் என அழைக்கப்படும் மங்களநாதர் சுவாமி உடனுறை மங்களேஸ்வரி கோயிலில் மரகத நடராஜருக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. ஆறு அடி உயரமுள்ள ஒற்றை பச்சை மரகத கல்லால் ஆன நடராஜர் சிலை ஒலி, ஒளி, மேள தாளங்களால் பாதிப்படையாமல் இருக்கவும், மத்தளம் ஒலித்தால் மரகதம் உடையும் என்பதற்கேற்ப, இங்கு ஆண்டு முழுவதும் மரகத நடாஜர் சிலை சந்தனம்பூசி பாதுகாக்கப்படுகிறது.

ஆண்டுக்கு ஒருமுறை ஆருத்ரா தரிசன விழாவிற்கு முந்தைய நாள் இக்கோயிலில் மட்டும் சந்தனக்காப்பு களையும் அபிஷேகம் நடைபெறுகிறது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் மரகத நடராஜர் சந்தனக்காப்பு இன்றி திருமேனியாய் காட்சி அளிப்பதால் அதை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

ஆருத்ரா தரிசன விழா: இந்தாண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா, கடந்த 18-ம் தேதி காப்பு கட்டுடன் தொடங்கியது. அதனையடுத்து நேற்று மரகத நடராஜர் திருமேனி மீது பூசப்பட்ட சந்தனக்காப்பு களையும் அபிஷேகம் காலை தொடங்கி, தொடர்ந்து பால், தயிர், இளநீர், சந்தனம், திருமஞ்சனம், மஞ்சள், திருநீர், மூலிகை என 32 வகையான மகா அபிஷேகம் நடைபெற்றது.

அதனையடுத்து திருமேனியான நடராஜரை கண்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர். வழக்கத்தைவிட இந்தாண்டு பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால் நான்கு ரத வீதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

இரவு 9 மணி முதல் தேவார இசை, பண்ணிசையும், இரவு 10 மணிக்கு கூத்தர் பெருமான் கல்தேர் மண்டபம் எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு மேல் மரகத நடராஜருக்கு ஆருத்ரா மகா அபிஷேகம் நடைபெற்றது. மகா அபிஷேகத்தை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். அதன்பின் நள்ளிரவில் தரிசனம் நிறுத்தப்பட்டு, நடராஜர் சிலைக்கு புதிதாக சந்தனக்காப்பு பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அதனையடுத்து அதிகாலை அருணோதய காலத்தில் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. அதன்பின் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று ஆருத்ரா தரிசன நடராஜரை தரிசித்தனர். பின்னர் காலை 10 மணிக்கு கூத்தர் பெருமான் திருவீதி உலாவும், மாலை 5 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம், இரவு மாணிக்க வாசக சுவாமிகளுக்கு காட்சி கொடுத்து சிறப்பு நாதஸ்வரத்தோடு பஞ்சமூர்த்தி புறப்பாடு, வெள்ளி ரிஷப சேவையுடன் விழா நிறைவு பெற்றது. ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.தங்கதுரை தலைமையில் ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பக்தர்கள் அவதி: நேற்றிரவு ஏராளமான பக்தர்கள் கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் வந்திருந்தனர். அதனால் வாகனம் நிறுத்தம் செய்யப்பட்டிருந்த வராஹி அம்மன் கோயில் பகுதி நிறைந்துவிட்டதால், ராமநாதபுரம் செல்லும் சாலைகளின் இரு ஓரங்கள், நான்கு ரத வீதிகளில் நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை போலீஸாரும் சரி செய்யாததால் ராமநாதபுரம் - சாயல்குடி சாலையில் நீண்ட நேரம் வாகனங்கள் செல்லமுடியவில்லை.

விவிஐபிக்களை தவிர மற்ற பக்தர்கள் கோயில் கிழக்கு ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அப்பகுதியில் எங்கு பார்த்தாலும் சாலை அமைக்க கொட்டப்பட்டிருந்த கூர்மையான ஜல்லி கற்கள் சிதறிக்கிடந்ததால் பக்தர்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். முதியவர்களை மற்றவர்கள் தூக்கிச்செல்லும் நிலை இருந்தது. பக்தர்களுக்கான வசதிகளை கோயில் நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகமும் செய்யத் தவறிவிட்டன.

மேலும் கோயில் நிர்வாகத்திடம் சிறப்பு அனுமதிச்சீட்டு பெற்று வந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் விவிஐபி நுழைவுவாயிலில் அனுமதிக்கவில்லை என போலீஸாரிடம் சண்டையிட்டு தடுப்புகளை தள்ளிவிட்டு கோயிலுக்குள் சென்ற சம்பமும் அடிக்கடி நடைபெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x