Published : 04 Jan 2018 08:43 AM
Last Updated : 04 Jan 2018 08:43 AM

தினமும் திருப்பாவை பாடுவோம்!

திருப்பாவை - 20

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்

செப்பமுடையாய்! திறனுடையாய்! செற்றார்க்கு

வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்

செப்பென்ன மென்முலைச் செவ்வாயச் சிறுமருங்கல்

நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்

உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை

இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்!

அதாவது, சப்த ரிஷிகள், ஏகாதச ருத்திரர்கள் (பதினொரு ருத்திரர்கள்) த்வாதச ஆதித்யர்கள் (பனிரெண்டு சூரியர்கள்) அஸ்வினி தேவதைகள்ள் இருவர் ஆக மொத்தம் முப்பத்து மூவர் மற்றூம் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒருகோடி பேர் வீதம் முப்பத்து முக்கோடி தேவர்கள் என்பது தேவதைகளின் கணக்கு.

இதையே ஆண்டாள் முப்பத்து மூன்று தேவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டால், உடனே தாமாகவே முன்சென்று அவர்களின் துயரத்தைத் துடைப்பவன் நீ! எங்களைப் போன்ற சாமானிய பக்தர்களுக்கும் அதாவது உன்னைச் சேர்ந்தவர்களுக்கும் க்ஷேமத்தைக் கொடுப்பவனே! பக்தர்களுக்கு வரும் தீமையை அழிக்கும் திறன் பெற்றவனாயிற்றே நீ!

உன்னடியார்களைப் பகைத்துக் கொண்டவர்களுக்கு பயம் எனும் வெப்பத்தை ஏற்படுத்தும் தூய்மையானவனே! துயில் எழுவாய் என்கிறார்!

பயம் ஏற்பட்டால், உடல் வியர்க்கும். வெப்பம் ஏற்பட்டாலும் உடல் வியர்க்கும். எனவே பயத்தால் வெப்பம் ஏற்படுகிறது என்கிறார் ஆண்டாள்.

மேலும் பொற்கவசம் போன்ற வசீகரமும் மென்மையும் உடைய கொங்கைகளையும் சிவந்த உதடுகளையும் நுண்ணிடை ஒன்று இல்லையென்பது போல், அமைந்துள்ள மிக மெல்லிய இடையை உடைய நப்பின்னை நங்கையே! திருமகளே துயிலெழுவாய்.

நப்பின்னைப் பிராட்டியே! முகம் பார்க்கும் கண்ணாடி, விசிறி ஆகியவை நோன்புக்கு வேண்டிய உபகரணங்கள். அவற்றை கண்ணனுக்குத் தந்து, இப்போதே உடனே கண்ணனை அவன் தன் திருமுகம் பார்த்துக் கொண்டு வரச் சொல். அவனது திருமுகம் கண்ட பின்னரே, நீராடச் செல்லவேண்டும் என்று ஆண்டாள் சொல்கிறாள்.

இந்தப் பாடலை தினந்தோறும் பாடி வந்தால், நாராயணன் உடனே மனமிரங்குவான். துயரத்தைத் துடைக்க ஓடோடி வருவான்!

ஆதிமூலமே என கஜேந்திரன் அழைத்தபோது, முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் முந்திக்கொண்டு வந்து துயர்துடைத்தவன். திரெளபதி சரணாகதி என அழைத்ததும் அவளது மானம் காக்க துகில் கொடுத்தவன். ராமாவதாரத்தில், தன்னைக் காண வந்த முனிவர்களைப் பார்த்து , உங்களைக் காண நானல்லவோ வரவேண்டியிருக்க, நீங்கள் என்னை நாடி வந்தது ஏன் என வினவிய நயமாகட்டும். பகவான் தன் பக்தர்களுக்காக எத்தனை ஈடுபாட்டுடன் அவர்களின் துயர் துடைக்கக் காத்திருக்கிறார் என்பதை எவ்வளவு அழகாக எடுத்துச் சொல்கிறாள் ஆண்டாள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x