Published : 06 Nov 2023 03:49 PM
Last Updated : 06 Nov 2023 03:49 PM

பக்தர்களையும், பறவைகளையும் ஈர்க்கும் ராமேசுவரத்தில் தீவுக்கு நடுவே அமைந்த கோதண்ட ராமர் கோயில்!

கோதண்ட ராமர் கோயில் அருகே உள்ள நீர்நிலையில் இரை தேடும் பிளமிங்கோ பறவைகள்.

ராமேசுவரம்: பக்தர்களை மட்டுமின்றி கண்டங்கள் தாண்டி வரும் பிளமிங்கோ பறவைகளையும் ராமேசுவரத்தில் தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள குட்டி தீவுக்கு நடுவே அமைந்த கோதண்ட ராமர் கோயில் ஈர்த்து வருகிறது. கடலுக்கு நடுவே ஏராளமான தீவுகள் அமைந்து இருப்பது இயற்கையானதுதான். ஆனால் ராமேசுவரத்தில் தனுஷ்கோடி செல்லும் வழியில் உள்ள குட்டித் தீவுக்கு நடுவே கட்டப்பட்ட ஒரு பழமை வாய்ந்த கோதண்ட ராமர் கோயில் கம்பீரமாக காட்சி அளித்து வருகிறது.

விபீஷணன் தன் சகோதரனும் இலங்கை மன்னனுமாகிய ராவணனிடம், சீதையைக் கவர்ந்து வந்திருக்கக் கூடாது என்றும், திரும்ப சீதையை ராமரிடமே ஒப்படைக் கும்படியும் கூறினார். ஆனால் ராவணன் விபீஷணனின் கருத்தை ஏற்க மறுத்தார். இதையடுத்து விபீஷணன் இலங் கையிலிருந்து வந்து ராமேசுவரத்தில் தங்கியிருந்த ராமரை சந்திக்கிறார். அங்கு விபீஷணனுக்கு ராமர் இலங்கை மன்னனாக பட்டாபிஷேகம் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து பன்னெடுங் காலத்துக்கு பிறகு இப்பகுதியில் கோதண்ட ராமர் கோயில் எழுப்பப் பட்டது என்பது பக்தர்களின் நம்பிக்கை. இந்த கோதண்ட ராமர் கோயில் ராமேசுவரத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் தனுஷ்கோடிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை யிலிருந்து 1கி.மீ. தூரத்தில் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் மூலவர் கோதண்டராமர், உற்சவர் ராமர், தீர்த்தம் ரத்னாகர தீர்த்தம். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கோயில் திறந்திருக்கும்.

விபீஷணர் பட்டாபிஷேகம்

ஒவ்வொரு ஆண்டும் ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா நடைபெறும் போது இந்த கோயிலில் விபீஷணர் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது. ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் ராமநாத சுவாமியையும், பர்வதவர்த்தினி அம்பாளையும் தரிசனம் செய்த பின்னர் கோதண்டராமர் கோயிலுக்கு சென்று வழிபடுகின்றனர்.

பக்தர்கள் மட்டுமின்றி ஆஸ்திரேலியா, ஐரோப்பிய கண்டங்களிலிருந்து பல்லா யிரம் மைல் தூரம் பறந்து கோதண்ட ராமர் கோயில் பகுதிக்கு பிளமிங்கோ பறவைகள் அதிக அளவில் வலசை வருகின்றன. இந்தப் பறவைகள் மூன்றிலிருந்து ஐந்து அடி உயரத்தில், இளம் சிவந்த கால்களுடன், பால் போன்ற வெண்மை நிறத்தில் உள்ளன. கோதண்ட ராமர் கடற்கரை பகுதிகளில் சுற்றித்திரியும் இப்பறவைகளை பார்வையிடு வதற்காக ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணி களும், பறவை ஆர்வலர்களும் வருகின்றனர்.

கோதண்ட ராமர் கோயில் செல்வதற்கு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையிலிருந்து தனுஷ்கோடி செல்லும் நகரப் பேருந்தில் செல்லலாம். ஆனால் பேருந்து நிறுத்தத்தில் இருந்து 1 கி.மீ. தூரம் நடந்தால்தான் கோயிலை அடைய முடியும். இந்த நகரப் பேருந்து கோதண்ட ராமர் கோயில் வரை சென்று வந்தால் பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு பயனுள் ளதாக அமையும் என்பதே அனைவரின் எதிர் பார்ப்பாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x