Published : 01 Nov 2023 04:22 PM
Last Updated : 01 Nov 2023 04:22 PM

மேலும் 2,000 கோயில்களில் ஒருகால பூஜைக்காக ரூ.40 கோடி வைப்பு நிதி: முதல்வர் ஸ்டாலின் வழங்கல்

மேலும் 2,000 கோயில்களில் ஒருகால பூஜை மேற்கொள்ள ரூ.40 கோடி வைப்பு நிதிக்கான காசோலையை  முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை: ஒருகால பூஜை திட்டத்தினை மேலும் 2,000 திருக்கோயில்களுக்கு விரிவுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் தலா 2 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 40 கோடி ரூபாய்க்கான காசோலையினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநரிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.1) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத் துறை மூலம் செயல்படுத்தப்படும் ஒருகால பூஜை திட்டத்தினை விரிவுப்படுத்தும் வகையில் நிதி வசதி குறைவாக உள்ள 2,000 திருக்கோயில்களில் ஒருகால பூஜை மேற்கொள்வதற்கு ஏதுவாக ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் தலா 2 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 40 கோடி ரூபாய்க்கான காசோலையினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யும் விதமாக தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஆர்.அம்பலவாணனிடம் வழங்கினார்.

இந்து சமய அறநிலையத் துறையின் நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள நிதி வசதி குறைவாக உள்ள ஒரு கால பூஜை கூட செய்திட இயலாத திருக்கோயில்களுக்கு உதவும் வகையில் ஒரு கால பூஜைத் திட்டம் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு திருக்கோயிலின் பெயரிலும் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து கிடைக்கப்பெறும் வட்டித் தொகையிலிருந்து பூஜை செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்நிலையில், விலைவாசி உயர்வின் காரணமாக பூஜை செலவினத்துக்கு பற்றாக்குறை ஏற்பட்ட நிலையை ஈடுகட்டும் வகையில் 2021 – 2022 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், “12,959 திருக்கோயில்களுக்கு ஒரு கால பூஜைத் திட்டத்தை செயல்படுத்த ரூ.130 கோடி நிலை நிதி ஏற்படுத்தப்படும்“ என அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஒருகால பூஜை நடைபெறும் 12,959 திருக்கோயில்களுக்கு ஏற்கெனவே வைப்பு நிதியாக ஒவ்வொரு கோயிலுக்கும் வழங்கப்பட்டிருந்த ஒரு லட்சம் ரூபாயை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி அரசு மானியமாக ரூ.130 கோடிக்கான காசோலையினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யப்பட்டது. மேலும், 2022-2023 ஆம் ஆண்டில் கூடுதலாக 2,000 திருக்கோயில்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு அரசு மானியமாக 40 கோடி ரூபாய்க்கான காசோலை தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யப்பட்டது.

2023-2024 ஆம் ஆண்டுக்கான இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை மானியக் கோரிக்கையில் "ஒருகால பூஜைத் திட்டத்தின் கீழ் நிதிவசதியற்ற 15,000 திருக்கோயில்கள் பயன்பெற்று வருகின்றன. இத்திட்டம், கூடுதலாக 2,000 நிதி வசதியற்ற திருக்கோயில்களுக்கு இவ்வாண்டு விரிவுப்படுத்தப்படும். இதற்கான அரசு மானியமாக ரூ.30 கோடியும் பொதுநல நிதியாக ரூ.10 கோடியும் வழங்கப்படும். இத்திட்டத்தில் சேர்க்கப்படும் 2,000 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாத உதவித் தொகை ரூ.1,000 வழங்கப்படும்" என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழக முதல்வர், ஒருகால பூஜை திட்டத்தினை மேலும் 2,000 திருக்கோயில்களுக்கு விரிவுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் தலா 2 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 40 கோடி ரூபாய்க்கான காசோலையினை தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் வைப்பு நிதியாக முதலீடு செய்யும் விதமாக தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரிடம் இன்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர்சிவ்தாஸ் மீனா, ஆணையர் க.வீ.முரளீதரன், கூடுதல் ஆணையர் அ.சங்கர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x