Published : 13 Jan 2018 08:20 PM
Last Updated : 13 Jan 2018 08:20 PM

திருப்பாவை... வேதத்துக்கு வித்து!

திருப்பாவை - 30

வங்கக்கடல் கடைந்த மாதவனைக் கேசவனைத்

திங்கள் திருமுகத்துச் சேவிழையார் சென்றிறைஞ்சி

அங்கப் பறைகொண்டவாற்றை அணிபுதுவைப்

பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன

சங்கத்தமிழ் மாலை முப்பதும் தப்பாமே

இங்கிப் பரிசுரைப்பாரீரண்டு மால்வரைத்தோள்

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலில்

எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய்!

அதாவது, இப்பாடல் பலஸ்ருதி எனப்படும் பாடலின் தொகுப்பாகும். கடந்து இருபத்தி ஒன்பது பாடல்களில், ஆண்டாள் விடியற்காலையில் உறங்கும் ஆயர்குலப் பெண்களை எழுப்பி, நோன்பு நோற்க அழைப்பது போல், ஜீவாத்மாவைத் தட்டி எழுப்பி பரமாத்ம அனுபவம் பெற அழைத்து, அதன் பிறகு கண்ணபிரானுடன் உடனிருந்தவர்களை எழுப்புகிறாள்.

கடைசியாக கண்ணனையும் எழுப்பி அவனருளால் அவனது பறைகளை வேண்டிப் பெற்று, இறுதியாக 29வது பாசுரத்தின் வழியாக, அவனது பறை மட்டும் போதாது. அவனுடைய கருணானுபவத்தைப் பெற அனைத்துப் பிறவிகளிலும் அவனுடைய அடியார்களாகவே இருந்து அவனுக்கு அடிமைத் தொண்டு செய்யவேண்டும் என விண்ணப்பிக்கிறாள்.

இவ்வாறு மார்கழி மாதம் முழுவதும் நோன்பு இருப்பவர்களுக்கு கிடைக்கும் பலன்களைப் பற்றி இந்தப் பாடலில் விவரிக்கிறாள் ஆண்டாள்!

பாற்கடலில் மந்தரமலையை மத்தாகக் கொண்டு, வாசுகி எனும் பாம்பை கயிறாகக் கொண்டு, தாமே கூர்மாவதாரம் எடுத்து, மத்தைத் தாங்கும் பாத்திரமாக திருப்பாற்கடலடியில் இருந்து, பாற்கடலைக் கடைந்து, திருமகள், கற்பக விருட்சம், அமிர்தம் ஆகியவை கிடைக்கச் செய்தவன் மாலவன்! அவன் கேசி என்கிற அசுரனை வதம் செய்ததாலும் அழகான சுருள்சுருளான கேசத்தை உடையன் என்பதாலும் கேசவன் எனப் பெயர் பெற்றான்.

அப்படி புகழ் வாய்ந்த கேசவனை இறைஞ்சி, பூரண சந்திரனைப் போன்ற குளிர்ச்சியான ஒளி பொருந்திய பெண்கள் பறை பெற்றனர். இவ்விதமாக இவர்கள் பறை கொண்ட நிகழ்ச்சியை புதுவை நகர் எனும் அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்து, பசுமையும் குளிர்ச்சியும் பொருந்திய தாமரை மணி மாலை அணிந்த பெரியாழ்வார் எனும் பட்டர்பிரானின் திருமகளாய் ஆண்டாள் எனும் கோதை நாச்சியார் அருளிய தேனினும் இனிய சங்கத் தமிழ் பாசுரங்கள் முப்பதும் இந்தக் காலத்தில் (நோன்பிருக்கும் காலத்தில்) பாடுபவர்கள், பாடிப் பிரார்த்தனை செய்பவர்கள், சங்கு, சக்கரம் இரண்டு கைகளிலும் அபய வரதம் என மற்ற இரண்டு கைகளையும் கொண்ட, திருமகளை தன் திருமார்பிலே என்றுமே இருத்தியிருக்கும் திருமாலின் பேரருள் அனைவருக்கும் கிடைத்து, பேரின்ப வாழ்வு பெறுவார்கள் என்று உறுதியுடன் சொல்கிறாள் ஆண்டாள்!

அவதாரக் காலத்தில் அவதரிக்கும் பேறு பெற்ற கோபியர் மிகவும் முயன்று நோன்பு நோற்றார்கள். கலியுகத்தில் பூமாதேவி ஸ்ரீஆண்டாளாக அவதரித்து, கிருஷ்ணானுபவத்தில் மூழ்கி, தாமே தம்மை ஒரு கோபிகையாக பாவித்து நோன்பைப் பின்பற்றினாள்.

அவ்வாறு முயற்சியில் ஈடுபடும் இல்லாத நமக்கு இந்தப் பாசுரங்களைக் கற்றுணர்ந்த மாத்திரத்திலேயே அதே பலன் ஸித்திக்கும் என்கின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்!

‘கன்றிழந்த தலைநாடு தோற்கன்றுக்கு இரங்குமாப்

போலே இப்பாசுரங் கொண்டு புக நமக்கும் பலிக்கும்’

அதாவது, கன்றினை இழந்த பசு, இறந்த கன்றின் தோலை உரித்து அதில் வைத்து அடைத்து, கன்று போல் செய்து வைத்தால், தனது கன்று என நினைத்து, அதற்கும் பால் சொரியுமாம். அதுபோல கோபியரின் மகத்துவமும் ஆண்டாளின் ஏற்றமும் நமக்கு இல்லாவிட்டாலும் அவர்களின் சம்பந்தம் உடைய இப்பாசுரங்களைப் பாடுவதால் மட்டுமே கூட அவர்களுக்கு அருளியது போல, பகவான் நமக்கும் அருள்வான்!

திருமால் மந்தரமலையை மத்தாக நாட்டி, வாசுப் பாம்பினை கயிறாகத் திரித்து, மத்தாக நாட்டி,, வாசுகிப் பாம்பினை கயிறாகத் திரித்து, மத்தைத் தாங்கும் பாத்திரமாக, கூர்மாவதாரமும் எடுத்து, தமது முதுகில் மத்தைத் தாங்கி அதாவது மந்தரமலையை தாங்கி, பாற்கடலை கடைந்து, லக்ஷ்மிதேவியை அடைந்து, பூரிப்படைந்தது போல், தமது அடியார்களான தொண்டர்களின் ஜீவன் புகுந்துள்ள சரீரத்துக்கு ஒரு நெகிழ்வும் வராதபடி, சம்சாரமாகிய இந்தக் கடலை, தனது சங்கல்பமாகிய மந்தரமலையை நாட்டி, அருள் எனும் பக்திக் கயிற்றால் சுற்றி, காத்து ரட்சிக்கும் தன் கைகளால், கடைந்து பிராட்டியைப் பெற்றது போல், நம்மைக் காப்பாற்றி மகிழ்ச்சி அடைந்து அருள்புரிவார் என்பது உட்பொருள்!

வேதம் இறைவனை வழிபடும் முறைகளைத் தெரிவிக்கிறது/. யாகம், தவம் மூலமாக இறை வழிபாட்டைப் பேசுகிறது வேதம்.. ஆனால் திருப்பாவை, தூயோமாய் வந்து நாம், தூமலர் தூவித்தொழுது, வாயினால் பாடி, மனதினால் சிந்திக்க, செய்யாதன செய்யோம், தீக்குறளைச் சென்றோதோம், மெல்ல எழுந்து அரியென்று என்றும் கேசவனைப் பாடவும் என்றும்! சென்று நாம் சேவித்து மனத்துக்கினியானைப் பாட, கள்ளந்தவிர்த்து கலந்து என்றும், போற்றியாம் வந்தோம், அடிபோற்றி, திறல் போற்றி, புகழ் போற்றி, கழல் போற்றி, வேல் போற்றி என்றெல்லாம் கலியுகத்தில் நாம சங்கீர்த்தனத்தை பிரதானமாக்கிக் கொண்டு (கலெள நாம சங்கீர்த்தனம்) மற்றை நாமங்களை மாற்றச் சொல்லி, இறைவா, நீ தாராய் பறை என வேண்டி, கூடியிருந்து குளிர்ந்து எங்கும் திருவருள் பெற்று, உய்ய வழியாக அமைகிறது.

வேள்வி, யாகம், தவம் இல்லாத சாதாரண எளிய வழிபாட்டு முறையை விளக்குகிறது. இவ்வாறு இறைவழிபாட்டை எளிமையாக, இலகுவாக, நளினமாக உரைத்ததால், திருப்பாவை... வேதத்துக்கு வித்தாக அமைகிறது. எனவேதான் கோதைத் தமிழ் வேதத்துக்கே வித்து என்று போற்றுகின்றனர் ஆச்சார்யர்கள்.

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்

வேத மனைத்துக்கும் வித்தாகும் - கோதை தமிழ்

ஐயைந்தும் மைந்தும் அறியாத மானிடரை

வையம் சுமப்பதும் வம்பு

என்பது ஆன்றோர் வாக்கு!

ஐயைந்தும் ஐந்தும் அதாவது திருப்பாவை முப்பது பாடல்களையும் தெரியாத (கற்றுணராத, தினந்தோறும் பாடாத, அதன்படி அவன் அடிபணியாத மனிதர்களை) பூமாதா சுமப்பது வீண் எனக் கூறுகிறார்கள்!

எனவே, நாமும் தூயோமாய் வந்து, தூமலர்த் தூவி, தொழுது, வாயினால் திருப்பாவையைப் பாடி, மனதினால் அவனுடைய திருவடியை நினைத்து, நமது பாவங்கள் அனைத்தும் தீயினில் இட்ட தூசாக, இருந்த இடம் தெரியாமல் போய் மிகவும் பரிசுத்தமாகி (திரிகரண சுத்தி - மனம், வாக்கு, காயம்) அவனுடைய சரணத்தில், அடைக்கலம் புகுந்து இம்மையிலும் மறுமையிலும் அவனின் பேரருளைப் பெற்று வாழ்வோம்!

ஸ்ரீஅழகர் திருவடிகளே சரணம்! ஆண்டாள் திருவடிகளே சரணம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x