Published : 08 Jan 2018 09:43 AM
Last Updated : 08 Jan 2018 09:43 AM

தினமும் பாடுவோம் திருப்பாவை!

திருப்பாவை - 24

அன்றிவ்வுலக மளந்தாய்! அடிபோற்றி

சென்றெங்குத் தென்னிலங்கைச் செற்றாய்! திறல் போற்றி

பொன்றச் சகட முதைத்தாய்! புகழ்போற்றி

கன்றுங்குணிலா வெறிந்தாய்! கழல் போற்றி

குன்று குடையா வெடுத்தாய்! குணம் போற்றி

வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி

என்றென்றுன் சேவகமே யேத்திப் பறை கொள்வான்

இன்றுயாம் வந்தோ மிரங்கே லோரெம்பாவாய்!

அதாவது, மகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூவடி மண் வரமாகப் பெற்ற வாமனன், மூவுலகங்களையும் ஈரடியால் அளந்த திருவிக்கிரமனாக உருவெடுத்தார். அந்த

உலகளந்த பெருமாளின் திருவடிகள் வாழ்க!

தேடி வந்த பகைவர்களை அழிப்போம் என்றில்லாமல், பகைவரை தேடிச் சென்று, இலங்கைக்குச் சென்று, அசுரர்களை அழித்து நல்லோரைக் காத்தாய். உனது திருத்திறன் போற்றி! உனது தோள்களின் வலிமை வாழ்க!

கம்சனால் ஏவப்பட்டு தன்னைக் கொல்ல வந்த சகடாசுரனை தாம் சிறுபாலகனாக தமது தொட்டிலில் படுத்திருந்தபடியே, ஒரே உதையாய் உதைத்து, வண்டின் உருவில் வந்த சகடாசுரனை அழித்தவனே! உனது புகழ் போற்றுதற்கு உரியது அன்றோ! உனக்குப் போற்றி!

காத்தர்சுரன் எனும் அசுரனையும் கன்று வடிவில் வந்த வத்சாகரன் எனும் அசுரனையும் அழித்தவனே! உனது கழல் வாழ்க! அதாவது, காத்தாசுரன் விளாங்கனி வடிவில் மரத்தில் மறைந்திருந்தான். வத்காசுரன் எனும் அசுரன் இளங்கன்று வடிவில் கண்ணனது பசுக்கூட்டத்தில் கலந்திருந்தான். ஆநிரை மேய்க்க கண்ணன் சென்ற போது, இரண்டு அசுரர்களும் கண்ணனை அழிக்கத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், கண்ணன் கன்று வடிவில் இருந்த வத்காசுரன் அசுரனின்

கால்களைப் பிடித்து, விளாங்கனி வடிவில் மரத்தில் மறைந்திருந்த காத்தாசுரன் மீது வீசியெறிந்து, இருவரையும் மாய்த்தான். அவ்வாறு செய்த கண்ணனின் கழல் வாழ்க!

கோவர்த்தன மலையை தனது பிஞ்சுக் கைகளால் தூக்கி நிறுத்தி, இந்திரனால் ஏவப்பட்ட மழை வெள்ளத்திருந்து கோபியர்களையும் பசுக்களையும் காப்பாற்றிய குணம் வாழ்க!

பகைவர்களை வெல்லும் வேல் எனும் ஆயுதம் தாங்கியிருக்கும் உன் கையில் உள்ள வேல் வாழ்க!

உனது புகழைப் பாடுவதும் உனக்கு சேவை செய்வதுமே எங்களது தொழிலாகக் கொண்டுள்ளோம். எங்களுக்கு மனம் இரங்கி உனது பறையைத் தந்து அருள்புரிவாயாக என்று இன்று நாங்கள் உனது வாசல் வந்துள்ளோம் என்கிறாள் ஆண்டாள்.

அதாவது, சதுர்யுகங்களில் ஸ்ரீபகவானது பராக்கிரம கருணா தயாள ஸ்வரூபம் பேசப்படுகிறது இங்கே! க்ருத யுகத்தில் ஸ்ரீமகாபலிச் சக்கரவர்த்தியிடம் மூவடி மண் வேண்டி, உலகளத்தல், த்ரேதா யுகத்தில் ஸ்ரீராமனது புஜ வலிமை, அசுரர்களை அழித்தல். தோள் கண்டார், தோளே கண்டார் தொடு கழல் கமல மன்னர் தாள் கண்டார் தாளே கண்டார் என்பார் கம்பநாட்டாழ்வார். துவாபர யுகத்தி, கண்ணனது வீரம், மனிதர்களை மட்டுமல்லாது ஐந்தறிவு ஜீவன்களான ஆடுமாடுகளையும் காப்பது போன்ற குணம்.

இந்தத் திருப்பாவைப் பாடலைப் பாடுங்கள். பகவான் நாராயணனை நினைக்கும் போதெல்லாம் பாடுங்கள். இந்தப் பாடலை பாடும் போதெல்லாம் அவனை நினைத்துக் கொள்ளுங்கள். சின்னதான கஷ்டம் வந்தாலும் ஓடிவந்து உங்களைக் காத்தருள்வான் என்பது உறுதி என்கிறாள் ஆண்டாள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x