Published : 01 Jan 2018 10:41 AM
Last Updated : 01 Jan 2018 10:41 AM

தினமும் திருப்பாவை பாடுவோம்!

திருப்பாவை - 17

அம்பரமே தண்ணீரே சோறே யறஞ்செய்யும்

எம்பெருமான்! நந்தகோபாலா! எழுந்திராய்

கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!

எம்பெருமாட்டி! யசோதா! அறிவுறாய்

அம்பரமூடறுத் தோங்கி உலகளந்த

உம்பர் கோமானே உறங்கா தெழுந்திராய்

செம்பொற் கழலடி செல்வா! பலதேவா!

உம்பியும் நீயுமுறங்கே லோரம்பாவாய்!

அதாவது, கடந்த பாடலில் நந்தகோபனின் வாயில்காப்போனிடம் அனுமதி பெற்று, மாளிகையின் உள்ளே சென்றவர்கள், கண்ணனின் தகப்பனாகிய நந்தகோபன் தாயார் யசோதா, தமையன் பலராமர் ஆகியோரைத் துயிலெழுப்புகிறார்கள்.

நந்தகோபன் தாராள மனம் படைத்தவர். தம்மை நாடி வருவோருக்கு உடுத்த உடையும் உண்ண உணவும் அருந்துவதற்கு நீரும் கொடுத்து உபசரிப்பவர்.

அவர் ஆயர்குலத்துக்கே தலைவர். அவரை துயிலெழ வேண்டுகிறார்கள். பின்னர் கண்ணனின் தாயார் யசோதாபிராட்டியை துயிலெழுப்புகின்றனர். ஆயர்குலப் பெண்களின் குலவிளக்காம் யசோதை... கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே என்கிறார் ஆண்டாள்.

அதாவது, கொடி போன்ற ஆயர்குலப் பெண்களுக்கு கொடியின் அடிபாகம் சிறிது வாடினாலும் கூட, மேல் பாகமான கொழுந்துப் பகுதியும் வாடிவிடும் அல்லவா! அதேபோல், ஆயர்குலப் பெண்களுக்கு ஏதாவது குறை ஏற்பட்டால், குலக்கொழுந்தாக விளங்கும், குலவிளக்காக விளங்கும் யசோதாபிராட்டியும் மிகவும் வாடிவிடுவாராம்! அவ்வளவு இரக்க சுபாவம் கொண்டவள் யசோதா எனப் போற்றுகிறாள் ஆண்டாள்.

எனவே யசோதையிடம் தங்களது கோரிக்கையை ஆண்டாள் சொல்கிறாள். கண்ணனை எழுப்ப வேண்டிக் கொள்கிறாள். மேலும் வானத்தைக் கிழித்துக் கொண்டு, மூவுலகங்களையும் அளந்தவன் திரிவிக்ரமனான (வாமன) கண்ணனே துயிலெழுவாய். பலதேவா (பலராமர்) உன் பொன்னடி பதித்ததால் அல்லவா, கண்ணன் வந்து ஆயர்பாடியில் உதித்தான். எனவே நீயும் உன் தம்பியான கண்ணனும் துயிலெழுவீர்களாக...! என்று ஆண்டாளும் பிற பெண்களும் துயிலெழுப்புகின்றனர்.

ஆண்டாள், கண்ணபிரானை மற்றும் போற்றாமல், அவனுடைய சகோதரனையும் தாயாரையும் கூடப் போற்றுகிறாள். கொண்டாடுகிறாள். எனவே ஆண்டாளைப் போல, குடும்பத்தில் உள்ள எல்லா உறவுகளின் அன்பையும் மதிப்பையும் பெறுவதற்கும் பகவானின் பேரருளைப் பெறுவதற்கும் திருப்பாவையின் இந்தப் பாடலை தினமும் பாடுங்கள். குடும்ப உறவுகள் மேம்படும். குதூலம் என்றைக்கும் நிறைந்திருக்கும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x