Published : 14 Dec 2017 12:12 PM
Last Updated : 14 Dec 2017 12:12 PM

சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள்: கன்னி

தோல்வி என்பது வெற்றிக்கான ஏணிப்படிதான் என்பதை உணர்ந்த நீங்கள், கடின உழைப்பாளிகள். இதுவரை உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்து உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற சனி பகவான் இப்போது 19.12.2017 முதல் 26.12.2020 வரை உள்ள காலக்கட்டங்களில் சுக வீடான 4-ம் வீட்டில் அமர்வதால் ஓரளவு நிம்மதியே தருவார். உங்கள் ராசிக்கு ஐந்து மற்றும் 6-ம் வீட்டுக்கு அதிபதியாக சனி அமைவதால் மனைவி கை ஓங்கும். பூர்வீகச் சொத்தை சீர்திருத்தம் செய்வீர்கள். அர்த்தாஷ்டமச் சனியாக அமர்வதால் எடுத்த வேலையைக் கொஞ்சம் போராடி முடிக்க வேண்டி வரும். அத்தியாவசியச் செலவுகளும் அதிகரிக்கும்.

சொத்து வாங்குவது, விற்பதில் வில்லங்கம் வந்து விலகும். குடும்பத்தில் அவ்வப்போது சண்டை, சச்சரவு வந்து நீங்கும். முன்பின் தெரியாதவர்களிடம் அநாவசியப் பேச்சைத் தவிர்ப்பது நல்லது. தாயாரின் ஆரோக்கியத்தில் அக்கறைக் காட்டுவது நல்லது. வழக்கில் அவசரம் வேண்டாம். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் வந்து நீங்கும். உணவில் உப்பை குறைத்துக் கொள்ளுங்கள். புளித்த ஏப்பம், அல்சர் வரக்கூடும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வாகனத்தின் ஓட்டுநர் உரிமத்தை சரியான நேரத்தில் புதுப்பிக்கத் தவறாதீர்கள். போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை இயக்க வேண்டாம்.

சின்னச் சின்ன அபராதத் தொகை செலுத்த வேண்டி வரும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். சனி பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால் வெளியிடங்களில் சுத்திகரிக்கப்படாத தண்ணீரை குடிக்க வேண்டாம்.

சனி பகவான் உங்களின் 6-ம் வீட்டை பார்ப்பதால் மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். நிலுவையிலிருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். சனி பகவான் 10-ம் வீட்டை பார்ப்பதால் புது பொறுப்புகளும் உங்களை நம்பித் தரப்படும். 19.12.2017 முதல் 18.01.2019 மற்றும் 12.08.2019 முதல் 26.9.2019 வரை கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் சனி பகவான் செல்வதால் சமூகத்தில் உங்களின் அந்தஸ்து ஒரு படி உயரும். தங்க நகைகள் சேர்க்கை உண்டாகும். சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் 19.01.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.9.2019 முதல் 24.2.2020 மற்றும் 17.7.2020 முதல் 20.11.2020 வரை சனி செல்வதால் பெருந்தன்மையாக பேசி காரியம் சாதிப்பீர்கள்.

குடும்பத்தில் அமைதி நிலவும். 25.2.2020 முதல் 16.7.2020 மற்றும் 21.11.2020 முதல் 26.12.2020 வரை சனி பகவான் உங்களின் ராசிக்கு விரயாதிபதியாகிய சூரியனின் உத்திராடம் நட்சத்திரம் முதல் பாதத்தில் செல்வதால் சொத்து பிரச்சினை சுமூகமாக முடிவடையும். 29.4.2018 முதல் 11.9.2018 மற்றும் 12.8.2019 முதல் 13.9.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாவதால் விலையுயர்ந்த தங்க நகைகளை கவனமாக கையாளுங்கள். சனி பகவான் 10.5.2019 முதல் 11.8.2019 மற்றும் 27.7.2019 முதல் 13.9.2019 மற்றும் 17.7.2020 முதல் 16.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் வக்கரிப்பதால் இக்காலக்கட்டத்தில் நிதானமாக முடிவுகள் எடுப்பது நல்லது. 02.5.2020 முதல் 16.7.2020 வரை உத்திராடம் நட்சத்திரத்தில் சனி வக்கிரமாகிச் செல்வதால் தாய்வழி உறவினர்களுடன் உரசல் போக்கு வந்து போகும்.

மாணவ, மாணவிகளே! தேர்வில் வெற்றி பெற வேண்டுமென்ற எண்ணமிருந்தால் மட்டும் போதாது. ஓயாது படித்து விடைகளை எழுதி பாருங்கள். மற்றவர்களின் சிபாரிசின் பேரிலும், அதிகம் செலவு செய்தும் எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேர வேண்டி வரும். கலை, விளையாட்டுப் போட்டிகளில் பரிசு, பாராட்டுப் பெறுவீர்கள்.

கன்னிப் பெண்களே! ஃபேஸ் புக், டிவிட்டரை கவனமாகப் பயன்படுத்துங்கள். சிலர் உங்களுடைய பெயருக்கு கலங்கம் விளைவிக்க முயற்சிப்பார்கள். புதிய நண்பர்களை தவிர்ப்பது நல்லது. காதல் விவகாரத்தில் எச்சரிக்கையாக இருங்கள். தாயாரைத் தவறாகப் புரிந்துக் கொள்ள வேண்டாம்.

அரசியல்வாதிகளே! உங்களால் பயனடைந்தவர்களே உங்களுக்கு எதிராக செயல்படுதல் போன்றவை நிகழும். ரகசியங்களை வெளியிட வேண்டாம். எதிர்கட்சியினரை கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுப்பீர்கள்.

கலைத்துறையினரே! சுய விளம்பரத்தை விட்டு விட்டு யதார்த்தமான படைப்புகளைத் தரப்பாருங்கள். விமர்சனங்களும், கிசுகிசுக்களும் வந்தாலும் தளர வேண்டாம்.

வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி லாபம் சம்பாதிப்பீர்கள். மற்றவர்களை நம்பி பெரிய முதலீடுகள் செய்ய வேண்டாம். பங்குதாரர்களுடன் மோதல்கள் வரும்.

உத்தியோகத்தில் பணிகளைப் போராடி முடிக்க வேண்டி வரும். சக ஊழியர்களை அரவணைத்துப் போக வேண்டும். அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம்.

இந்த சனி மாற்றம் பேச்சை குறைத்து செயலில் வேகம் காட்டி வெற்றி பெற வைக்கும்.

பரிகாரம்: புதுக்கோட்டை மாவட்டம், மலையடிப்பட்டி எனும் ஊரில் வீற்றிருக்கும் ஸ்ரீரங்கநாதரையும் அருள்மிகு கமலவல்லியையும் திருவாதிரை நட்சத்திரம் நடைபெறும் நாளில் அல்லது ஏதேனும் ஒரு சனிக்கிழமைகளில் நெய்விளக்கேற்றியும், துளசி மாலை அணிவித்தும் வணங்குங்கள். வாழ்வு சிறக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x