Published : 31 Dec 2017 01:36 AM
Last Updated : 31 Dec 2017 01:36 AM

தினமும் திருப்பாவை பாடுவோம்!

திருப்பாவை - 16

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய

கோயில் காப்பானே கொடித்தோன்றும் தோரண

வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்

ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தாள்

தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்

வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா! நீ

நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்!

 

கடந்த பாடல்களில் திரு ஆயர்பாடியில் நோன்பு நோற்க, பாவையர்களை துயிலெழுப்பி பின்னர் அவர்கள் அனைவருடனும் சேர்ந்து, ஆயர்பாடியில் உள்ள கண்ணனின் திருமாளிகைக்குச் சென்று, அவனைத் துயிலெழுப்புவது போன்று இந்தப் பாடல் அமைந்துள்ளது.

ஆண்டாளால் எழுப்பிவிடப்பட்ட பெண்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கண்ணனை எழும்பும் பொருட்டு, அவன் வசிக்கும் நந்தகோபனுடைய திருமாளிகையை அடைந்தனர்.

அங்கே, மாளிகையின் மேல்தளத்தில் வண்ணக்கொடிகள் வரிசையாக பறந்து கொண்டிருந்தன. அதுவே கண்ணனின் மாளிகைக்குத் தோரணம் கட்டியது போல் இருந்ததாம். தோரண வாயிலுக்கு என காவலாளி இருந்தான். அவனிடம் அனுமதி பெற்று, மணிகள் பொருந்திய வாயில்கதவுக்கு அருகில் சென்றால், அங்கும் துவாரபாலகர்கள் (வாயில்காப்போர்) இருந்தனர்.

அவர்களிடம் மணிக்கதவுகள் இரண்டும் ஒன்றோடு ஒன்று நேசம் மிக்கதாக இணைந்து ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதாவது, கதவுகள் இடைவெளி இல்லாமல் இரண்டு பகுதிகளும் ஒட்டியுள்ளதை நயமாக கூறுகிறாள் ஆண்டாள்.

நாங்கள் ஆயர்சிறுமியர் எல்லாம் கண்ணனின் புகழைப்பாடி பக்தியுடன் பறைசாற்ற தூயமனதுடனும் தூய்மையாக நீராடியும் வந்திருக்கிறோம். எனவே தாழ் திறந்து எங்களை அனுமதியுங்கள். நாங்கள் கண்ணனுக்கு திருப்பள்ளியெழுச்சி பாடி, அவனை எழுப்பப் போகிறோம். மேலும் அவன் நேற்றே எங்களிடம் கூறிவிட்டான். எனவேதான், வந்திருக்கிறோம்.

ஆகவே, வாயிற்காப்போனே! நீ உன் வாயால் முடியாது என மறுத்துக் கூறாமல், மணிக்கதவைத் திறந்து நாங்கள் கண்ணனைத் துயிலெழுப்ப அனுமதிப்பாயாக! என வேண்டுகிறாள்.

கடந்த பாடல்களில் உறங்கிக் கொண்டிருந்த பாவையரை எழுப்பி, ஒன்றுதிரட்டி வந்த ஆண்டாள் இந்தப் பாடலில், கண்ணனின் திருமாளிகைக்கு முன்னே வந்து அவனையே துயிலெழுப்பப் போகிறாள்.

இந்தப் பாடலை, ஆண்டாள் அன்பும் காதலுமாகக் கசிந்துருகிய திருப்பாவைப் பாடலை, தினமும் கோயில் திறப்பதற்கு முன்னதாக, அதிகாலையில் வந்து நின்று பாடி வந்தால், உறக்கம் கலைந்ததும் திருமால் (திருப்பள்ளியெழுச்சியானதும்) வேண்டுவனவற்றை நமக்குத் தந்தருள்வார் என்பது உறுதி!

மற்ற நேரங்களில், வேண்டுவதை விட, விடியற்காலையில் சுப்ரபாத வேளையில் வேண்டுவது சாலச் சிறந்தது என்கிறாள் ஆண்டாள்!

மகாபாரதத்தில், தன் கால்மாட்டில் அமர்ந்திருந்த தர்மபுத்திரருக்கு, தான் கண்விழித்ததும் கண்ணன் அருளியதை இங்கே ஒப்புமைப்படுத்திப் பாருங்கள். திருப்பாவைப் பாடலின் மகத்துவத்தை உணர்ந்து பாடத் தொடங்குங்கள். சகல செளபாக்கியங்களையும் உங்களுக்கும் உங்கள் இல்லத்தார் அனைவருக்கும் வாரி வழங்கி அருள்வார் திருமால்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x