Published : 20 Sep 2023 11:38 PM
Last Updated : 20 Sep 2023 11:38 PM

திருப்பதியில் கருட சேவை: மலையப்ப சுவாமிக்காக ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடி கொடுத்த மாலை திருமலை புறப்பட்டது

ஸ்ரீவில்லிபுத்தூர்: திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் வெள்ளிக்கிழமை நடைபெறும் கருட சேவையின் போது மலையப் சுவாமிக்கு அணிவிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடி கலைந்த மாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்கள பொருட்கள் இன்று (செப்.20) திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மூலவர் வடபத்ரசயனர் (பெரிய பெருமாள்) தினசரி பூஜையின் போது ஆண்டாள் சூடிய மாலை அணிந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அதேபோல் மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழா, ஶ்ரீரங்கம் ரெங்கநாதர் சித்திரை தேரோட்டம், திருப்பதி புரட்டாசி பிரம்மோற்சவத்தில் கருட சேவையின் போது பெருமாளுக்கு அணிவிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடி கலைந்த பூமாலை, பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்களப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படும்.

அதற்கு மறு சீராக ஆடிப்பூர தேரோட்ட திருவிழாவில் ஆண்டாளுக்கு அணிவிப்பதற்காக ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் மற்றும் மதுரை கள்ளழகர் உடுத்தி கலைந்த பட்டு வஸ்திரம் ஶ்ரீவில்லிபுத்தூருக்கு அனுப்பி வைக்கப்படும். ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தின் போது அணிவதற்காக திருப்பதி பெருமாள் உடுத்தி கலைந்த பட்டு வஸ்திரம் ஶ்ரீவில்லிபுத்தூருக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதன்படி இந்த ஆண்டு திருப்பதி பிரம்மோற்சவ விழாவில் மூலவர் வெங்கடேச பெருமாளும், உற்சவர் மலையப்ப சுவாமியும் அணிவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடி கலைந்த பூமாலை, கிளி, பட்டு வஸ்திரம் உள்ளிட்ட மங்களப் பொருட்கள் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

திருப்பதியில் புரட்டாசி பிரம்மோற்சவ திருவிழாவில் நாளை மறுநாள்(செப்டம்பர் 22) மலையப்ப சுவாமி மோகன அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். வெள்ளிக்கிழமை மாலை கருட சேவையின் போது ஆண்டாள் சூடி கொடுத்த மாலை அணிந்து மலையப்ப சுவாமி மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார். இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரம்மாண்ட மாலை தயார் செய்யப்பட்டு ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதன்பின் ஆண்டாள் உடுத்தி கலைந்த பூமாலை, பட்டு வஸ்திரம், கிளி ஆகியவை மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.வெங்கட்ராம ராஜா, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் செயல் அலுவலர் முத்துராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x