Published : 30 Dec 2017 10:26 AM
Last Updated : 30 Dec 2017 10:26 AM

தினமும் திருப்பாவை பாடுவோம்!

திருப்பாவை - 15

எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ

சில்லென்றழையேன் மின் நங்கைமீர் போதர்கின்றேன்

வில்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்

வல்லீர்கள் நீங்களே நானேதானாயிடுக

ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடைய

எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந் தெண்ணிக்கொள்

வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க

வல்லானை மாயனை பாடேலோ ரெம்பாவாய்!

அதாவது, அண்டை வீட்டுப் பெண்ணை அழைத்துக் கொண்டு, மற்றொரு வீட்டின் முற்றத்துக்கு வருகிறார்கள். அந்த வீட்டுப் பெண் கிளி போன்று இனிமையாகப் பேசுபவள். எனவே செல்லமாக ‘ஏய் புள்ளே’ என்கிற தொனியில், எல்லே இளங்கிளியே இன்னும் உறங்கிக் கொண்டா இருக்கிறாய் என்கின்றனர்.

அதைக் கேட்ட அந்தப் பெண், தற்போது யாராவது இயற்கைக்குப் புறம்பாக புகழ்ந்து பேசினால், ‘ஐஸ் வைக்காதே’ என்று கூறுகிறோமே. அதேபோல, பெண்களே! என்னை குளிர்ச்சி பொருந்திய வார்த்தைகளால் அழைக்காதீர்கள். இதோ... நானே வருகின்றேன் என பதில் சொல்கிறாள்.

வந்தவர்களோ, நீ வாய்மொழியில் தேர்ந்தவள், வல்லவள் என்பது எங்களுக்குத் தெரியும். இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என வாயினால் மட்டுமே கூறுவாய். நீ பேச்சில் வல்லவள் என்று கூறுகின்றனர்.

இதைக் கேட்ட உள்ளே இருக்கும் தோழி, நான் ஒன்றும் வல்லவள் அல்ல. நீங்கள்தான் வல்லவர்கள்தான் என்று சொல்கிறாள். இப்படியே பேசிக் கொண்டிருந்துவிட்டு, உள்ளே இருக்கும் தோழி, தாம் இறங்கி வந்து, ‘சரி போங்கள். நீங்கள் கூறியபடியே நானே பேச்சில் வலிமையானவளாகிவிட்டுப் போகிறேன் என ஒப்புக் கொள்கிறாள்.

துயிலெழுப்ப வந்த பெண்களே! எங்களிடம் உனக்கு என்ன மன வேறுபாடு? சீக்கிரம் எழுந்து வா எனக் கூறுகின்றனர்.

மீண்டும் உள்ளே இருக்கும் பெண் எல்லோரும் வந்துவிட்டார்களா எனக் கேட்கிறாள். துயில் எழுப்ப வந்த பெண்களே! வந்தவர்களை நீயே எழுந்து வந்து எண்ணிப் பார்த்துக் கொள். வலிமையான யானையைக் கொன்றவன் கண்ணன். தீயவர்களை அழிக்கும் ஆற்றல் படைத்தவன். மாயச் செயல்கள் பலவற்றைப் புரிபவன். மாய உருவம் கொண்டு, அதில் தன்னை அழிக்க வந்த பல அசுரர்களை அழித்தவன். அவனை நினைத்துப் பாடி, பாவை நோன்பு நோற்க எழுந்து, விரைந்து வருவாயாக! என அழைக்கிறாள்.

‘எல்லே’ இளங்கிளியே ‘ஏய் புள்ளே’ ‘எல்லே’ முதலான சொற்களின் மறு சொல்லாக, ஏலேய் எனும் வார்த்தை உருவாயிற்று. இந்தச் சொல், குறிப்பிட்ட சில பகுதிகளில் இன்றைக்கும் வழக்கத்தில் உள்ளது.

ஆண்டாள் அன்பொழுக, பக்தி கமழப் பாடிய இந்தப் பாடலை தினமும் பாடுங்கள். மங்கல காரியங்கள் இனிதே நிகழும். தடைப்பட்ட காரியங்கள் விரைவில் நடந்தேறும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x