Last Updated : 23 Dec, 2017 07:44 PM

 

Published : 23 Dec 2017 07:44 PM
Last Updated : 23 Dec 2017 07:44 PM

25ம் தேதி தனுர் வியதி பாதம்! சிவ தரிசனம் மகா புண்ணியம்!

வரும் 25.12.17 திங்கட்கிழமை, தனுர் வியதி பாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்தநாளில், சிவாலயம் சென்று தரிசிப்பது மகா புண்ணியம் என்கிறது சாஸ்திரம். மேலும் இயலாதவர்களுக்கு உணவுப் பொட்டலம் வழங்குவதும் சிறப்பான பலன்களைத் தரவல்லது என்கிறார்கள்.

இந்த நாளில், தர்ப்பணம் செய்து முன்னோரை வணங்கி ஆராதிப்பது, இல்லத்தையும் உள்ளத்தையும் அமைதியாக்கும். ஆனந்தப்படுத்தும். வம்சம் தழைக்க வாழலாம் என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

அதாவது ஒரு வருடத்துக்கு மொத்தம் 96 தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது சாஸ்திரம். 12 மாதங்களின் பிறப்பு, 12 அமாவாசைகள், புரட்டாசியில் வரும் மகாளபட்ச 16 நாட்கள், கிரகணங்களின் போது செய்யப்படும் தர்ப்பணம் உள்ளிட்ட 96 தர்ப்பணங்கள் உள்ளன.

அப்படித் தொடர்ந்து 96 தர்ப்பணங்களைச் செய்பவர்கள் இந்த நாளில் தர்ப்பணம் செய்வது, பூரணத்துவத்தைக் கொடுக்கும். முன்னோரின் ஆசி பரிபூரணமாகக் கிடைத்து, வம்சம் தழைக்க வாழலாம் என்பது ஐதீகம்!

மேலும் இந்த நாளில், சிவாலயம் செல்வதும் சிவபெருமானுக்கு வில்வார்ச்சனை செய்வதும் சகல யோகங்களையும் தந்தருளும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

இன்னொரு விஷயம்... பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள், இன்றைய நாளில் சிவாலயம் செல்வதும் தரிசிப்பதும் இன்னும் விசேஷப் பலன்களை வழங்கும். நீங்கள் பூரட்டாதியா. உங்கள் வீட்டில் எவரேனும் பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் இருக்கிறார்களா. உங்களுக்குத் தெரிந்தவர்கள் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களாக இருக்கிறார்களா. உங்கள் குடும்பத்துடன் சிவாலய தரிசனம் செய்யுங்கள். உங்களுக்குத் தெரிந்தவரிடம் சொல்லி, அவரை தரிசனம் செய்யச் சொல்லுங்கள்.

தென்னாடுடைய சிவன்... எந்நாளும் காத்தருள்வார் என்பது உறுதி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x