Published : 17 Aug 2023 06:04 AM
Last Updated : 17 Aug 2023 06:04 AM

ஆடி அமாவாசையையொட்டி நீர்நிலைகளில் நீராடி முன்னோருக்கு தர்ப்பணம்: கோயில் குளங்கள், கடற்கரைகளில் ஏராளமானோர் குவிந்தனர்

ஆடி அமாவாசையை ஒட்டி, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளத்தில் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த உறவினர்கள். படம்: ம.பிரபு

சென்னை: ஆடி அமாவாசையையொட்டி தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்க சென்னையில் கோயில் குளங்கள், கடற்கரைகளில் ஏராளமான மக்கள் குவிந்தனர்.

அமாவாசை நாளில் விரதம் இருந்தால் முன்னோரின் ஆசி, அருள் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. இதில் ஆடி, புரட்டாசி, தை ஆகியமாதங்களில் வரும் அமாவாசையானது கூடுதல் சிறப்பு வாய்ந்தது. அதன்படி இந்தஆண்டு ஆடி மாதத்தில் 2 அமாவாசை வந்தது. ஆடி மாதம் 1-ம் தேதியில் (ஜூலை 17) முதல் அமாவாசையும், ஆடி 31-ம் தேதியான நேற்று (ஆக. 16) 2-வது அமாவாசையும் வந்தது.

ஆடி அமாவாசையன்று முன்னோர் பூமிக்கு வருவதாகவும், இந்த நேரத்தில் அவர்களை வரவேற்று திதி, நீர்க்கடன் செய்தால், அவர்களது ஆசி கிடைத்து, நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி,நம் தலைமுறை காக்கப்படும் என்பது இந்துக்களின் ஐதீகம். எனவே, அந்நாளில் ஆறு, குளம், கடல் போன்ற புனித நீர்நிலைகளில் நீராடி, முன்னோருக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று ஆடி அமாவாசை என்பதால், சென்னையில் மெரினா கடற்கரை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்,சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் குளக்கரைகளில் ஏராளமானோர் திரண்டு,எள், நீர் விட்டு முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதனால், ஏராளமானபுரோகிதர்களும் கோயில் குளங்கள், மெரினா கடற்கரை உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்திருந்தனர்.

அங்கு, அதிகாலை முதலே பொதுமக்கள்நீர்நிலைகளில் நீராடி முன்னோருக்குதர்ப்பணம் கொடுத்தனர். மேலும், வீடுகளில்சிறப்பு படையலிட்டு வழிபட்டனர். முன்னோர் நினைவாக அன்னதானம், ஆடைதானம் வழங்கினர். நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்ய முடியாதவர்கள் ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்கி, அருகில் உள்ள சிவன் கோயிலில் வழிபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x