Last Updated : 17 Nov, 2017 04:01 PM

 

Published : 17 Nov 2017 04:01 PM
Last Updated : 17 Nov 2017 04:01 PM

புண்ணியம் நிறைந்த கார்த்திகை... ஒவ்வொரு நாளும் திருநாளே!

கார்த்திகை மாதம் என்பது புண்ணியம் நிறைந்த மாதம் என்று போற்றப்படுகிறது. இந்த மாதத்தில், முக்கியமான, விரதம் அனுஷ்டிக்கும் நாட்கள், பூஜைக்கு உகந்த நாட்கள் நிறையவே அமைந்துள்ளன. இந்த மாதத்தின் முக்கிய தினங்கள் குறித்து சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார் விளக்கி உள்ளார்.

இன்று 17-ம் தேதி வெள்ளிக்கிழமை கார்த்திகை மாதம் பிறந்துவிட்டது. வெள்ளிக்கிழமை எனும் அருமையான நாளில் மாதப் பிறப்பு தொடங்கியிருப்பது விசேஷம். இந்த நாளில், அம்பாளை வணங்கிப் பிரார்த்திப்பது நல்ல பலன்களைத் தரும்.

18-ம் தேதி சனிக்கிழமை. அமாவாசை. நாளை மிக முக்கியமான நாள். முன்னோருக்கு ஆராதனை செய்யும் நாள். அதாவது தர்ப்பணம் முதலான காரியங்களை மறக்காமல் செய்ய வேண்டும். அடுத்து மகான் ஸ்ரீதர ஐயாவாள் வீட்டுக் கிணற்றில் கங்கையே பிரவாகமெடுத்து வந்த கதை தெரியும்தானே. அந்த நாள்... கார்த்திகை மாத அமாவாசை தினத்தில்தான். எனவே, கும்பகோணம் திருவிசநல்லூரில் உள்ள அவரின் இல்லத்துக்குச் சென்று கிணற்றில் நீராடுவது விசேஷம். இயலாதவர்கள், நாளைய தினம் வீட்டில் குளிக்கும் போது, அந்த மகானை மனதில் நினைத்துக் கொண்டு தண்ணீரை விட்டுக் கொள்ளுங்கள். அதுவே மிகப்பெரிய புண்ணியத்தைத் தரும்.

அதேபோல் நாளை 18-ம் தேதி அமாவாசை தொடங்கி, சஷ்டி வரையிலான நாட்களில் விரதம் இருந்து முருகக்கடவுளை தரிசித்தால், கடந்த கந்தசஷ்டியின் போது விரதமிருந்த பலனும் புண்ணியமும் கிடைக்கும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

19-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, அனுஷ நட்சத்திர நன்னாள். காஞ்சி மகாபெரியவரின் நட்சத்திர நாள். எனவே மகாபெரியவருக்கு ஆராதனைகளும் பூஜைகளும் செய்வது நற்பலன்களையும் நற்சிந்தனைகளையும் வழங்கும்.

20-ம் தேதி சோம வாரம். திங்கட்கிழமை. கார்த்திகை சோம வாரம் மிகமிகச் சிறப்பான நாள். சிவாலயங்களில் சங்காபிஷேகம் நடைபெறும். 20-ம் தேதி, 27-ம் தேதி, 4-ம் தேதி, 11-ம் தேதி என எல்லா திங்கட்கிழமைகளிலும் 108 அல்லது 1008 சங்குகளைக் கொண்டு சிவனாருக்கு அபிஷேகம் நடைபெறும்.

21-ம் தேதி மூல நட்சத்திரம். அனுமனின் ஜன்ம நட்சத்திரம். இந்த நாளில், ஆலயம் சென்று அனுமனைத் தரிசித்து, அவருக்கு வெற்றிலை மாலை சார்த்தி வழிபடலாம்.

22-ம் தேதி சுக்ல சதுர்த்தி. இதுவும் சங்கடஹர சதுர்த்திக்கு நிகரானதுதான். விநாயக வழிபாடு செய்யுங்கள்.

24-ம் தேதி சஷ்டி. கந்தக் கடவுளுக்கு உரிய நன்னாள். வேலவனை வழிபடுங்கள். அதேபோல் அன்றைய தினம் வாஸ்து பகவானுக்கு உரிய நாளும் கூட! வாஸ்து பூஜை செய்வது இல்லத்தை செழிப்பாக்கும்!

25-ம் தேதி சனிக்கிழமை, திருவோண நட்சத்திர நாள். சனிக்கிழமையும் திருவோணமும் திருமாலுக்கு உகந்த நாள். எனவே பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசி மாலை சார்த்தி, வேண்டிக் கொள்ளுங்கள். சகல ஐஸ்வர்யமும் கிடைக்கப் பெறலாம்.

29-ம் தேதி ஏகாதசி. இந்த நாளில், விரதம் மேற்கொண்டு திருமாலை வணங்கி வழிபடுங்கள்.

டிசம்பர் 1-ம் தேதி பகவான் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி திருநாள். அந்த மகானை மனதாரப் பிரார்த்திப்போம். அன்றைய தினம் பிரதோஷம். சிவாலயம் சென்று வழிபடுங்கள்.

2-ம் தேதி காலை பரணி தீபம். காலையில் விளக்கேற்றி வழிபட்டால் எமபயம் விலகும். மாலையில் திருக்கார்த்திகை தீபம். வீடு முழுவதும் ஒளியால் நிறைந்திருக்க... சுபிட்சம் நிச்சயம். இன்னொரு முக்கியமான விஷயம்... கார்த்திகையில் வரும் கிருத்திகை நட்சத்திர நாள் ரொம்பவே சாந்நித்தியம் நிறைந்தது. அனைவரும் தீபம் ஏற்றி வழிபடுவது விசேஷ பலன்களைத் தரும். குறிப்பாக கிருத்திகை நட்சத்திரக் காரர்கள், அவசியம் வழிபடுங்கள்.

3-ம் தேதி சர்வாலய தீபம். முதல் நாள் திருவண்ணாமலையில் மகாதீபம். இன்றைய நாளில், அனைத்து சிவாலயங்களிலும் தீபத் திருவிழா கொண்டாடப்படும். அதேபோல் வைஷ்ணவ ஆலயங்களிலும் தீபமேற்றி வழிபாடுகள் நடைபெறும். அன்று ஞாயிற்றுக்கிழமை. திருவெண்காடு கோயிலில் உள்ள அகோர வீரபத்திரருக்கு ருத்ராபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெறும். அன்று பெளர்ணமி என்பதால், அப்போது வழிபடுவது இன்னும் இன்னும் பலத்தையும் உரத்தையும் வழங்கும்!

5-ம் தேதி பரசுராமர் ஜெயந்தி. இந்த நாளில் அவரை வழிபடுவோம்.

6-ம் தேதி புதன் கிழமை சங்கடஹர சதுர்த்தி. விநாயக வழிபாடும் தரிசனமும் நற்பலன்களை வாரி வழங்கும்.

7-ம் தேதி வியாழக்கிழமை மகா அவதார் பாபாஜி அவதார நன்னாள். அந்த மகானை வணங்கித் தொழுவோம்.

13-ம் தேதி ஏகாதசி. பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட உகந்த நாள்.

14-ம் தேதி வியாழக்கிழமை காஞ்சி மகாபெரியவர் ஆராதனை . நடமாடும் தெய்வம் என்று போற்றிக் கொண்டாடும் மகானைத் தொழுவோம்.

15-ம் தேதி வெள்ளிக்கிழமை. பிரதோஷம்.

16-ம் தேதி தனுர் மாத பூஜை ஆரம்பம்.

ஒவ்வொரு நாளும், அந்த தினத்தை உணர்ந்து, அந்தந்த பூஜைகளை, நியமங்களை, வழிபாடுகளைச் செவ்வனே செய்யுங்கள். இன்னும் இன்னும் சிறப்புடனும் செழிப்புடனும் வாழ்வீர்கள் என்கிறார் பாலாஜி வாத்தியார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x