Last Updated : 01 Nov, 2017 12:44 PM

 

Published : 01 Nov 2017 12:44 PM
Last Updated : 01 Nov 2017 12:44 PM

கைப்பிடி அரிசியேனும் வழங்குங்கள்; பஞ்சமில்லா வாழ்வு தருவார் ஈசன்! நவ. 3ம் தேதி ஐப்பசி அன்னாபிஷேகம்!

நவம்பர் 3 : ஐப்பசி அன்னாபிஷேகம்

‘உன்னை உக்காரவைச்சு, ஒருவாய் சாதம் போடணும். அதுபோதும் எனக்கு’ என்று நம்மைப் பெற்றவர்களிடம் நெக்குருகிச் சொல்வோம். உணவிடுவதை சாதாரணமான விஷயமாக எடுத்துக் கொள்ளமுடியாது. உணவின் முக்கியத்துவத்தை சாஸ்திரங்கள் வெகு ஆழமாகவே எடுத்துரைக்கின்றன.

தானத்தில் சிறந்தது அன்னதானம் எனும் முதுமொழியும் நாம் உணர்ந்ததுதான். இங்கே... இந்த வேகமான உலகில், போதும் என்று எதையும் சொல்லவே மாட்டோம். உடை, சம்பளம், வீடு, வாசல், நகை, பணம்... என எல்லாமே இன்னும் இன்னும் வேண்டும் என்கிற உலகாயத சிந்தனையில், ஒருகட்டத்தில்... ‘போதும்...போதும்’ என்று சொல்கிற ஒரே விஷயம்... உணவுதான்.

மேலும் ‘அன்னமயம் ப்ராணமயம் ஜகத்’ என்றொரு சம்ஸ்கிருதச் சொல் உண்டு. அதாவது நம்மை உயிருடன் உலகில் இயங்கச் செய்வதில் உணவுக்கு பெரும்பங்கு உண்டு என்று அர்த்தம். ’வயிறாரச் சாப்பிட்டேம்பா...’ என்று பல தருணங்களில், சொல்லி மகிழ்வோம்; நெகிழ்வோம்.

மனிதர்களுக்குள்ளேயே இத்தனை உன்னதங்கள் உணவு விஷயத்தில் உண்டென்றால், உலகுக்கே படியளக்கும் இறைவனுக்கும் நமக்குமான பந்தம், உணவு விஷயத்தில் எத்தகையது என்று யோசியுங்கள்.

உலகுக்கே படியளக்கும் சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யும் அற்புதமான விழாவே அன்னாபிஷேகப் பெருவிழா. ஒவ்வொரு ஐப்பசி மாத பெளர்ணமி நாளில் நடைபெறுகிறது அன்னாபிஷேக வைபவம். வருகிற 3.11.17 வெள்ளிக்கிழமை நாளில், சிவாலயங்களில் கோலாகலமாக நடைபெறுகிறது, அன்னாபிஷேகத் திருவிழா.

“அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ” என்கிறது சாமவேதம். அதாவது, எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவிலும் இருக்கிறான் என்று பொருள். வாழ்வுக்கு அச்சாணியாகத் திகழ்வது அன்னம். இந்த அன்னம் என்பது பிரம்ம சொரூபமாகவும் விஷ்ணு அம்சமாகவும் சிவ சரீரமாகவும் திகழ்கிறது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். இதில், முக்கியமானவரும் முதன்மையானவரும் சிவபெருமான் என்று போற்றுகிறார்கள் ஆன்றோர்கள்.

அதனால்தான் படியளக்கும் பரமசிவன் என்று ஈசனையும் அன்னபூரணி என்று பார்வதிதேவியையும் சொல்லிப் பூரிக்கிறார்கள் பக்தர்பெருமக்கள். திருக்கரத்தில் கரண்டியுடன் அன்னம்பாலிக்கும் கோலத்தில் காட்சி தரும் அன்னபூரணி, தன்னை நாடி வரும் பிள்ளைகளான நமக்கு, உணவுக்குப் பஞ்சமில்லாத நிலையைத் தந்தருள்கிறாள் என்பது ஐதீகம்.

சிவரூபங்களில் ஒன்றான லிங்கத் திருமேனிக்கு, பெளர்ணமி நிறைந்தநாளில், அன்னத்தால் அபிஷேகித்து, அலங்கரித்து, லிங்கத்தை நிறைக்கும் ஒப்பற்ற வைபவத்தைக் கொண்டாடி, நன்றி தெரிவித்து, வணங்கி மகிழ்கிறார்கள் பக்தர்கள்.

’’ஐப்பசி மாதப் பெளர்ணமி நாளில், அனைத்து சிவாலயங்களிலும் மாலை வேளையில் நடைபெறுகிறது அன்னாபிஷேக விழா. பெளர்ணமி நன்னாளில், சந்திர பகவான் தன் பதினாறு கலைகளுடன் பூரணசோபையுடன் திகழ்வதாக ஐதீகம். அன்றைய தினம், அவனுடைய கலை அமிர்த கலை. இந்தநாளில், சந்திரனையே பிறையாகச் சூடிக் கொண்டிருப்பவனை, அன்னத்தால் குளிர்வித்து, அன்னத்தால் வணங்குவது மகா புண்ணியம்’’ என்கிறார் திருப்பட்டூர் பாஸ்கர் குருக்கள்.

’’ஐப்பசி மாதம் அறுவடை முடிந்த காலம். அதையடுத்து மீண்டும் விதைத்து, தை மாத அறுவடைக்கு ஆயத்தமாகும் காலம்தான் ஐப்பசி மாதம். எனவே அறுவடை முடிந்து, விளைந்ததை விற்று, கையில் காசும் பொருளும் நிறைந்திருக்கும் தருணம் இது. எனவே, பூமியைச் செழிக்கச் செய்து, எல்லோருக்கும் உணவு தந்த இறைவனுக்கு, அந்த உணவையே ஆடையாக, நகையாக, ஆபரணமாக அணிவித்து, அழகு பார்க்கும் வைபவம், சோழர்கள் காலத்தில் இருந்தே உள்ளது. சோழ நாடு சோறுடைத்து என்பார்கள். எனவே பொன்னாய் விளையச் செய்த பூமிக்குக் காரணகர்த்தாவான சிவனுக்கு, அன்னப்படையல், அன்னாபிஷேகம் செய்து நன்றி தெரிவிக்கிறார்கள் மக்கள்’’ என்கிறார் கல்வெட்டு ஆய்வாளர் குடவாயில் பாலசுப்ரமணியன்.

’’சிவன் பிம்ப ரூபியானவர். பக்தர்களாகிய நாம், பிரதி பிம்ப ரூபிகள். பிம்பம் திருப்தி அடைந்தால், பிரதி பிம்பம் திருப்தி பெறும் என்கிறது சாஸ்திரம். அன்னம் பாலிக்கும் அன்னபூரணி தேவியான உமையவளை, தன் வாம பாகத்தில் கொண்டு, மாதொருபாகனாக, அன்னம் பாலிக்கும் அந்த அன்ன பூரணியை தனது வாம பாகத்திலேக் கொண்ட அந்த மாதொருபாகனுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டால், உலகில் உணவுக்குப் பஞ்ச நிலை வராது என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்’’ என்கிறார் சென்னை நங்கநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் பாலாஜி வாத்தியார்.

வருகிற 3ம் தேதி அன்னாபிஷேக விழா. மகாலக்ஷ்மி குடிகொண்டிருக்கும் வெள்ளிக்கிழமை நாளில், சுக்கிர பலம் கூடியிருக்கும் அருமையான வேளையில், சந்திர பலம் பூரணமாக நிறைந்திருக்கும் முக்கியமான தருணத்தில், சிவனாருக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்துக்கு, நம்மால் முடிந்த அரிசியை வழங்குவோம். நாம் வழங்கும் அரிசியானது, சாதமாகி, சிவசொரூபனுக்கு உடையாகி, அலங்கரிக்கப்பட்டு, அந்த அன்னத்தைக் கொண்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக, உணவாக வழங்கப்படுவது நமக்கு மிகுந்த புண்ணியத்தைத் தரவல்லது என்கிறார்கள் ஆச்சார்யர்கள்!

அன்னாபிஷேகத்துக்கு, இயன்றதை வழங்குங்கள். ஒருகைப்பிடி அரிசியேனும் வழங்குங்கள். அன்னாபிஷேக தரிசனத்தை கண்ணாலும் மனதாலும் கண்டு உணருங்கள். வாழ்வில் யோகமும் ஞானமும் பெறுவீர்கள். வீட்டில் தரித்திர நிலையே அண்டாது. எப்போதும் உணவுக்குப் பஞ்சமிருக்காது!

அன்னாபிஷேகப் ப்ரியனே சரணம்...

ஐங்கரனின் தந்தையே போற்றி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x