Published : 01 Aug 2023 08:49 AM
Last Updated : 01 Aug 2023 08:49 AM

சங்கரன்கோவிலில் ஆடித்தபசு விழா - ஏராளமான பக்தர்கள் தரிசனம்

தென்காசி: சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் நேற்று ஆடித்தபசு விழா நடைபெற்றது.

இக்கோயில் தல புராணத்தின்படி ஹரியும், சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை மெய்ப்பிக்க வேண்டி கோமதி அம்பாள் தவமிருந்தார். அவரது தவத்தை மெச்சி சிவபெருமான் ஆடி மாதம் உத்திராடம் நாளில் சங்கரரும், நாராயணரும் இணைந்த சங்கரநாராயண திருக்கோலத்தை காட்டி அருளினார். அதுவே ஆடித்தபசு திருவிழா.

கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவில் 29-ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது. தபசுக்காட்சி நேற்று நடைபெற்றது. நேற்று காலை சங்கரலிங்க சுவாமி, சங்கரநாராயண சுவாமி மற்றும் கோமதி அம்பாளுக்கு அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு தங்கச்சப்பரத்தில் கோமதி அம்பாள் தபசு மேற்கொள்ள தபசு மண்டபத்துக்கு எழுந்தருளினார். மாலை 5 மணிக்கு மேல் சுவாமி சங்கரநாராயணர் திருக்கோலத்தில் தபசு காட்சிக்கு புறப்பட்டார். இரவு 7 மணிக்கு தெற்கு ரதவீதியில் ரிஷப வாகனத்தில் சங்கரநாராயண சுவாமி எழுந்தருளி காட்சி கொடுத்தார். அவரை கோமதி அம்பாள் 3 முறை வலம் வந்தார்.

அங்கு கூடியிருந்த பக்தர்கள் மற்றும் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைந்த பருத்தி, வத்தல் உள்ளிட்ட விளைபொருட்களை சப்பரத்தின் மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர், சுவாமி கோயிலுக்கும், கோமதி அம்பாள் தபசு மண்டபத்துக்கும் எழுந்தருளினர். இரவு யானை வாகனத்தில் சுவாமி சங்கரலிங்கர் திருக்கோலத்தில் புறப்பட்டார். இரவு 12.05 மணிக்கு கோமதி அம்பாளுக்கு சங்கரலிங்க சுவாமி காட்சி தந்தார். திரளான பக்தர்கள் தரிசித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x