Last Updated : 04 Nov, 2017 11:23 AM

 

Published : 04 Nov 2017 11:23 AM
Last Updated : 04 Nov 2017 11:23 AM

குருவருளும் இறையருளும் தரும் புதுக்கோட்டை பிரகதாம்பாள்!

புதுக்கோட்டையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பெண் குழந்தைகள் பிறந்தால், பெரியநாயகி என்றும் பிரகதாம்பாள் என்றும் பெயர் வைப்பார்கள். இந்த ஊரின் நாயகி... பிரகதாம்பாள் அன்னை. சிற்ப அற்புதங்கள் நிறைந்த இந்த ஆலயத்தில், ஒவ்வொரு சந்நிதியிலும் அழகு ததும்பி நிற்கிற இறைத் திருமேனிகளைக் கண்குளிரத் தரிசிக்கலாம்.

இந்தத் தலத்து சிவனாரின் திருநாமம் - ஸ்ரீகோகர்ணேஸ்வரர். இவர் கோயில் கொண்ட பகுதியும், திருக்கோகர்ணம் என்றே அழைக்கப்படுகிறது. புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது இந்தத் திருத்தலம். இவரைத் தரிசிப்பதற்கு முன்னதாக இதே ஆலயத்தில் சந்நிதி கொண்டிருக்கும் கங்காதீஸ்வரரையும் தரிசிக்கலாம். ‘இந்தக் கோயிலுக்கு வந்து, சாமி கும்பிட்டுப் போனா, நம்ம குடும்பமே செழிக்கும்; நினைச்சதெல்லாம் நடக்கும்’ எனச் சொல்லிப் பூரிக்கின்றனர், பக்தர்கள்.

இந்த ஆலயத்தின் இன்னொரு அற்புதம்... ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி. சிவனாரது சந்நிதியின் கோஷ்டத்தில் இருந்தபடி அருள்வதுதானே, ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் வழக்கம்? ஆனால், இங்கே... ஸ்ரீவிநாயகப்பெருமானுக்கு அருகில் இருந்தபடி அருள்பாலிக்கிறார் ஸ்ரீதட்சிணாமூர்த்தி. ஆனைமுகனும் முழுமுதற் கடவுளுமான ஸ்ரீவிநாயகருடன், ஞானகாரகனாக ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி அருள்பாலிப்பதால், செட்டிநாடு எனப்படும் காரைக்குடி, திருச்சி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, தஞ்சாவூர் , பேராவூரணி, திருமயம் எனப் பல ஊர்களில் இருந்தெல்லாம் வியாழக்கிழமைகளில் வந்து வணங்கிச் செல்கின்றனர்!

குருப்பெயர்ச்சி நாளில், ஸ்வாமி மற்றும் அம்பாளுக்கு வஸ்திரம் சார்த்தி, ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து, முல்லைப் பூவால் மாலை அணிவித்து வழிபடுவது சிறப்பு. இதனால், சகல தோஷங்களும் விலகும்; எடுத்த காரியங்கள் வெற்றியைத் தேடித் தரும்; குருவின் பேரருள் கிடைக்கப் பெற்று, கல்வி-கேள்விகளிலும், தொழில் மற்றும் வேலையிலும் முன்னுக்கு வருவது உறுதி என சொல்கின்றனர் பக்தர்கள்!

அது புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலம். அப்போது, புதுக்கோட்டை மன்னருக்கு குருவருள் கிடைத்த தலமும் இதுவே! எனவே புதுக்கோட்டைக்கு வந்து, ஸ்ரீவிநாயகருடன் காட்சி தரும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை வணங்கி வளம் பெறுங்கள்! இறையருளையும் குருவருளையும் ஒருங்கே பெற்று உன்னதமான வாழ்வைப் பெறுங்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x