Last Updated : 05 Oct, 2017 10:07 AM

 

Published : 05 Oct 2017 10:07 AM
Last Updated : 05 Oct 2017 10:07 AM

நீங்கள் மனம் அல்ல!

ஒருவர் மருத்துவரிடம் சென்று, “எனது தலையில் குரல்கள் கேட்கின்றன” என்று சொன்னால், அவர் நிச்சயமாக மனநோய் மருத்துவரிடம் செல்வதற்குப் பரிந்துரைக்கப்படுவார். ஆனால், நம்மில் பெரும்பாலானவர்கள் ஒரு குரலையோ பல குரல்களையோ தலையில் கேட்டுக்கொண்டேதான் இருக்கிறோம். தன்னிச்சையாக நமது தலையில் ஓடிக்கொண்டிருக்கும் எண்ணங்கள் பற்றித்தான் சொல்கிறேன். ஆனால், அதை நம்மால் நிறுத்த முடியும் என்பதை நாம் உணரவேயில்லை. அவை புலம்பல்களாக, உரையாடல்களாக உள்ளன.

நீங்கள் தனக்குத்தானே பேசிக்கொண்டிருக்கும் ‘பைத்தியக்காரர்’களைத் தெருவில் எதிர்கொண்டிருப்பீர்கள். அவர்கள் பேசுவது வெளியில் சத்தமாகக் கேட்கும். ஆனால், நாமோ யாரும் கேட்காமல் உள்ளே பேசிக்கொண்டிருக்கிறோம். அவர்களுக்கும் நமக்கும் பெரிய வித்தியாசமில்லை.

அசைபோடும் மனம்

கட்டளையிடுதல், ஊகித்தல், தீர்ப்பளித்தல், ஒப்பிடுதல், குறைகூறுதல், விரும்புதல், வெறுத்தல் போன்றவற்றை மனம் செய்துகொண்டே இருக்கிறது. நீங்கள் எந்தச் சூழ்நிலையில் இருக்கிறீர்களோ எப்போதும் அதற்குத் தொடர்புடையதாக இந்தக் குரல் இருக்க வேண்டுமென்ற அவசியம்கூட இல்லை. அந்தக் குரல் சமீபத்தில் நடந்த விஷயத்தையோ கடந்த கால நிகழ்வையோ அல்லது வருங்காலச் சூழ்நிலைகளையோகூட அசைபோடலாம். இந்தக் குரல், காரியங்கள் தவறாகப் போய், எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் கற்பனைகளையும் செய்யும்.

இதைத்தான் கவலை என்று சொல்வார்கள். சில சமயங்களில், இந்தக் குரலுடன் திரைப்படக் காட்சிகளைப் போன்ற காட்சிகளும் இடம்பெறும். இந்தக் குரல், தற்போதைய சூழலுக்கு ஏற்றதாக இருந்தாலும், அது கடந்த காலத்தை விளக்குவதாகவே இருக்கும். அது ஏனென்றால், இந்தக் குரல் உங்களுடைய வரையறைக்குட்பட்ட மனதைச் சேர்ந்தது. அந்த மனம் உங்களுடைய கடந்த காலப் பதிவுகள், நீங்கள் வாழும் சமூக, கலாச்சாரத் தாக்கங்களின் தொகுப்பாக இருக்கும். அதனால், நீங்கள் நிகழ்காலத்தைக் கடந்த காலப் பார்வையுடன் பார்த்தே தீர்மானிப்பீர்கள். அது முற்றிலும் ஓர் உருக் குலைந்த பார்வையை உங்களுக்குக் கொடுக்கும்.

அந்தக் குரல், பல சமயங்களில் அந்த நபருக்கே மிக மோசமான எதிரியாக இருப்பதற்குத்தான் சாத்தியம் அதிகம். நம்மில் பெரும்பாலானோர் தங்கள் தலைக்குள் இருக்கும் இந்தக் கொடூரனால் தொடர்ந்து தாக்கப்படுவதும், தண்டனைபெறுவதமாகத் தங்களுடைய சக்தியையெல்லாம் இழந்துகொண்டிருக்கிறார்கள். இது சொல்ல முடியாத துயரம், மகிழ்ச்சியின்மை, நோய்களுக்கான காரணமாகவும் இருக்கிறது.

நம் மனத்திலிருந்து நாம் விடுதலையடைய முடியும். இது உண்மையான சுதந்திரமாக இருக்கும். இதற்கான முதல்படி இதுதான். தலைக்குள் ஒலிக்கும் குரலை முடிந்தவரையில் கவனிக்கத் தொடங்குங்கள். தொடர்ந்து ஒரே வகைமையில் வரும் சிந்தனைகள், பல ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒலித்துகொண்டிருக்கும் கிராமஃபோன் பதிவுகள் போன்றவற்றைக் கவனியுங்கள். இதைத்தான் நான், “எண்ணுபவரைக் கவனியுங்கள்” என்று சொல்கிறேன். உங்கள் தலைக்குள்ளிருக்கும் குரலுக்குச் சாட்சியாக இருங்கள்.

மனமின்மைக்கான பயிற்சி

அந்தக் குரலைக் கேட்கும்போது, நடுநிலையுடன் கேளுங்கள். அதைத் தீர்மானிக்கவோ, கண்டிக்கவோ முயலாதீர்கள். ஒருவேளை, நீங்கள் அப்படிச் செய்தால், அந்தக் குரல் உங்கள் புறவாசல் வழியாக மீண்டும் வரும். சீக்கரமே, இந்தக் குரல் இருக்கிறது, இதை நாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம், கவனித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை உணரத் தொடங்குவீர்கள். இதன்மூலம் இந்த எண்ணங்கள் எல்லாம் உங்களுடையது அல்ல; ஒரு பழக்கத்தின் தொகுப்பு என்ற தெளிவு கிடைக்கும். உங்களுடைய இருப்பு என்பது இந்த எண்ணங்கள் அல்ல. அது தொடர்ந்து இரைச்சலிடும் இந்த மனதுக்கு அப்பாற்பட்டது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

இந்த சாட்சிபூர்வ நிலை நிஷ்டை நிலை அல்ல. இங்கே பூரணமான விழிப்பு உள்ளது. மனதால் அடையாளப்படுத்தப்பட்ட இருப்பை மீறிய பிரக்ஞை செயல்படத் தொடங்குகிறது. நீங்கள் முழுக்க நிகழ்கணத்தில் வாழத் தொடங்குகிறீர்கள். உங்களது உடலின் ஆற்றலும் உங்களது விழிப்புணர்வுடன் சேர்ந்து மேம்படுகிறது. மனதில் எழும் எண்ணங்களை உங்களோடு அடையாளப்படுத்தி அதற்கான ஆற்றலைத் தருவதைப் படிப்படியாக நிறுத்திவிடுகிறீர்கள்.

படிப்படியாக எண்ணங்களுக்கு இடையே இடைவெளி வரும். அது மனம் நீங்கிய இடைவெளி. அந்த இடைவெளியில் மிகுந்த அமைதியும் நிச்சலனமும் இருக்கும். தொடர்ந்த பயிற்சியின்மூலம் இந்த அமைதியை ஆழமானதாக மாற்ற முடியும். இன்னும் சொல்லப்போனால், இந்த ஆழத்துக்கு முடிவேயில்லை. உங்களின் ஆழ்மனதிலிருந்து மகிழ்ச்சியை உணர்வீர்கள். இருத்தலின் மகழ்ச்சி அது.

தமிழில் என்.கௌரி

 

05chsrs_ekhart ஏகார்ட் டோல்

கனடாவில் வசிக்கும் ஏகார்ட் டோல், மேற்கு நாடுகளில் செல்வாக்கு மிக்க ஆன்மிக ஆசிரியராக விளங்குபவர். ஜெர்மனியில் பிறந்து பிரிட்டனில் உயர்கல்வி படித்தவர். 29 வயதில் இவரது அகத்தில் ஏற்பட்ட மாற்றம் இவரது அதுவரையிலான மனநெருக்கடிகளுக்கும் துயரத்துக்கும் முடிவுகட்டியது. மனிதனின் பெரும்பாலான துயரங்களுக்கு அவனது மனம்தான் காரணம் என்று கூறுகிறார் ஏகார்ட் டோல்.

மனதை ஒரு திறமையான கருவி போல் பயன்படுத்துவதன் மூலம் முழுமையான ஆனந்தத்தை எப்போதும் உணர்வதற்கான எளிய பயிற்சிகள் பற்றியும் இவர் எழுதியுள்ளார். மனம் இறந்த காலத்திலும் எதிர்காலத்திலும் மட்டுமே உயிர்த்திருப்பதாகக் கூறும் இவர், தற்கணத்தில் வாழும் வழிமுறைகள் மூலம் புதிய பரிணாமத்துக்கு மனிதகுலம் தயாராக முடியும் என்பதில் நம்பிக்கையுள்ள ஆசிரியர் இவர். இவர் எழுதிய ‘தி பவர் ஆப் நவ்’, ‘எ நியூ எர்த்’ நூல்கள் மேற்கத்திய வாசகர்களிடம் செல்வாக்கு பெற்றவை.

தன் மீது தாக்கம் செலுத்திய மெய்ஞானிகளாக பகவான் ரமணர், ஜே. கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x