Last Updated : 20 Oct, 2017 11:03 AM

 

Published : 20 Oct 2017 11:03 AM
Last Updated : 20 Oct 2017 11:03 AM

எதிரிகள் தொல்லை... இனி இல்லை! - சங்கடம் தீர்க்கும் சஷ்டி!

சம்பளமும் பதவியும், காசும் பணமும் இருந்து என்ன... துர்குணமும ஆணவமும் இருந்துவிட்டால், அழிவு நிச்சயம் என்பதை ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு கதையின் மூலமாக விளக்குகின்றன புராணங்கள். கர்வத்துடன் ஒருவர் இருந்தால், எல்லோராலும் வெறுக்கப்பட்டு, அவர் மரணத்தை அடைவார் என்பதற்கு உதாரணமாகத் திகழ்வதுதான் கந்த சஷ்டி சரிதம்!

தட்சன், காசிபன் இருவருமே சிவனாரின் வரத்தை வாங்கிக் கொண்டு, அசுரத்தனமான செயல்களில் ஈடுபட்டனர். தட்சன், சிவனாருக்கே மாமனாரானான். அகந்தையாலும் ஆணவத்தாலும் தட்சன், சிவபெருமானிடம் இருந்து உருவான வீரபத்திரரால் கொல்லப்பட்டான். அந்த தட்சனே அடுத்த பிறவியில் சூரபத்மனாகப் பிறந்தான் என்கிறது புராணம்! அதாவது தட்சனாக இருந்த போது தந்தை சிவனார் அழிக்க, சூரபத்மனாக மறுபிறவி எடுக்க, மைந்தன் முருகப் பெருமானால் கொல்லப்பட்டான்!

அடுத்து, காசிபனும் தவம் புரிந்து சிவனாரிடம் பல வரங்களைப் பெற்றான். அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாயை எனும் பெண்ணின் அழகில் மயங்கி, தன் தவ வலிமையை இழந்தான். இதைத் தொடர்ந்து காசிபனும் மாயை எனும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனிதத் தலையுடைய சூரபத்மனும், இரண்டாம் சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்கமுகமுடைய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகமுடைய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டுருவத்தில் இணைந்து ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் அசுரப் பெண்ணுமாகப் பிறந்ததாகச் சொல்கிறது புராணம். இவர்கள் அனைவருமே உருவத்தால் வேறானாலும் குணத்தால், துர்குணங்களுடன், அலட்டலும் கர்வமுமாகத் திரிந்தனர்!

இவர்களுள் சூரபத்மன் சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாகப் பெற்றான். ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால்தான் தனக்கு அழிவு வர வேண்டும் என வரம் கேட்டான். வரத்தையும் பெற்றான்!

உலக மக்களுக்கும் தேவாதி தேவர்களுக்கும் இன்னல்களையும் துன்பத்தையும் கொடுப்பதே வேலையாகக் கொண்டார்கள், இந்த  அசுரக் கூட்டத்தினர். அசுரர்களின் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவனாரிடம் முறையிட்டனர். ஈசனும் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் பார்வதியின் தொடர்பின்றி, தனது நெற்றிக் கண்களைத் திறக்க அவற்றிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது சேர்த்தான். அந்த தீப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளாகத் தோன்றின. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் பாலூட்டிச் சீராட்டி வளர்த்தனர். இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களைக் கொண்டது என்கின்றன ஞானநூல்கள்!

பிரணவ சொரூபியான முருகனிடம் காக்கும் கடவுள் முகுந்தன், அழிக்கும் கடவுள் ருத்ரன், படைக்கும் கடவுள் கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடங்குவார்கள். மேலும் முருகப் பெருமான் சிவாக்னியில் தோன்றியவர் என்பதால் ஆறுமுகமே சிவம், -சிவமே ஆறுமுகம் என்பார்கள்!

அதையடுத்து, அசுரர்களை அழிக்க நினைத்த முருகன் முதலில் சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என அனைத்து சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள்... சூரபத்மன்!

கருணாமூர்த்தியான முருகனும் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்தார். தன் விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டி அருளினார். அதைப் பார்த்தவுடனேயே சூரனின் ஆணவம் மறைந்தது. ‘உன்னை பயமுறுத்த கடலாய் மாறினேன். அந்தக் கடலின் வடிவாகவே இங்கு தங்குகிறேன். உன்னை வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுமே, ஆணவம் நீங்கி, உன் திருவடியே கதி என சரணமடையும் புத்தியைப் பெற அருள்வாய்!’ என வேண்டினான்.

இன்றைக்கும் திருச்செந்தூர் கடலில் நீராடி, செந்தூர் ஆண்டவரைத் தரிசித்தால் நம் ஆணவமெல்லாம் பறந்தோடும். எதிரிகள் தொல்லையே களைந்தோடும் என்பது ஐதீகம்!

சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் என்று சொல்வார்கள். அப்படி வேல் வாங்கி, சூரசம்ஹாரம் செய்து, இந்திராதி தேவர்களையும் மக்களையும் காத்தருளினார் கந்தவேள். இதனால் மகிழ்ந்த தேவர்கள், தங்கள் இனத்தைச் சேர்ந்த தெய்வானையை முருகப்பெருமானுக்கு மணம் முடித்து வைத்தார்கள்! அதாவது, முதல் நாள் சூரசம்ஹாரம். அடுத்த நாள்... திருக்கல்யாணம்!

கந்தசஷ்டி விரதமிருங்கள். ஆலயங்களில் நடைபெறும் சூரசம்ஹார வதம் வைபவத்தை தரிசியுங்கள். இயலாதவர்கள், இந்த நாளில், முருகப்பெருமானுக்கு செவ்வரளி மாலை சார்த்தி கண்ணாரத் தரிசித்து, மனதார வழிபடுங்கள். நம் கவலையெல்லாம் தீர்த்து வைப்பான் கந்தகுமாரன். எதிரிகளையெல்லாம் பந்தாடிவிடுவான் பாலகுமாரன்!

முருகா சரணம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x