Published : 31 Mar 2015 11:01 am

Updated : 31 Mar 2015 11:01 am

 

Published : 31 Mar 2015 11:01 AM
Last Updated : 31 Mar 2015 11:01 AM

வெட்டிவேரு வாசம் 29- ‘அரோகரா... அரோகரா... ஆற்காடு கிச்சிலி அரோகரா!’

29

எனது விடலைப் பருவ நாட்களில் திடீரென்று கடைகளில் அரிசி இருப்பு பூஜ்யமாகி விட்டது. மண்டி, மார்க்கெட் என்று எங்கு போனாலும் அரிசி கிடைக்காமல் மக்கள் தவித்தார் கள். பல நாட்கள் பன்னும், ரொட்டியும், ரவா உப்புமாவும்தான் உணவு.

வாரத்தில் ஒரு நாள் ‘லாரி வந்திருக்கு’ என்று தெருவில் யாராவது அறிவிப்பார் கள். வீடே பரபரக்கும். அவசரமாகப் பையும், காசுமாக ஓடுவேன்.

சாலையில் எங்காவது லாரி நின்று கொண்டிருக்கும். அருகில் காக்கிச் சட்டை டிரைவர் கையில் துண்டுச் சீட்டு களுடன் கடவுளாகக் காட்சி அளிப்பார். நூறு, இருநூறு பேர் முட்டி மோதி ‘எனக்கு… எனக்கு’ என்று கையேந்து வார்கள். நானும் கூட்டத்தில் நுழைந்து ‘அண்ணே… அண்ணே…’ என்று யாசிப் பேன். அதிர்ஷ்டம் இருந்தால் ஒரு சீட்டு கிடைக்கும். அதில் ‘ஃபுட் கார்ப்பரேஷன் ஆஃப் இண்டியா’ ஸ்டாம்ப் அடிக்கப்பட்டு, 2 அல்லது 3 என்று எழுதப்பட்டிருக்கும்.

சீட்டு கிடைத்துவிட்டால், கோட்டை யைப் பிடித்த பெருமை! அதைக் கடையில் நீட்டினால், கடைக்காரர் சீட்டில் இருக்கும் எண் அளவுக்கான அரிசியை அளந்து கொடுப்பார். படிக்கு ரூ.1.50 விலை.

அடுத்த தவணை அரிசிக்கு இன் னொரு வாரம் காத்திருக்கவேண்டும். இந்தக் கூத்து மாதக்கணக்கில் தொடர்ந் தது. வயல்களுக்கு என்ன ஆயிற்று? தமிழ்நாட்டில் மட்டும் அரிசிக்கு ஏன் இவ் வளவு பஞ்சம்? பதிலே இல்லாத பல கேள்விகள் மண்டைக்குள் சுழன்றன.

தேர்தல் வந்தது. ஆளுங்கட்சியான காங்கிரஸும், வளர்ந்துகொண்டிருந்த திராவிட முன்னேற்றக் கழகமும் மோதின.

‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அரிசிக்குப் போராட்டம் இருக்காது. ரூபாய்க்கு மூன்று படி லட்சியம், ஒரு படி நிச்சயம்!’’ என்று தி.மு.க. தலைவர் பேரறிஞர் அண்ணா வாக்குறுதி அளித் தார்.

‘தி.மு.க. தேர்தலில் ஜெயித்தால், அரிசிப் பஞ்சம் இருக்காதாமே!’ என்று மக்கள் வீதிகளிலும், வீட்டு முற்றங்களி லும் வியப்புடன் பேசினார்கள். அப்படி நேர்ந்தால், நான் விளையாடுவதை விட்டுவிட்டு, பையைத் தூக்கிக்கொண்டு தெருத் தெருவாக அலைய வேண்டி இருக்காதே!

அண்ணா ஆட்சிக்கு வரவேண்டும் என்று மனதார விரும்பினேன். ஓட்டுப் போட வயது பற்றாது. ஆனால், என்னால் ஏதாவது செய்யமுடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்கினேன்.

எங்கள் தெருவில் தி.மு.க. சார்பில் ஒரு தேர்தல் அலுவலகம் திறக் கப்பட்டிருந்தது. அதனைக் கடந்து பள்ளிக்குச் செல்லும்போது எல்லாம் அதன் பொறுப்பாளர் என்னைப் பார்த்துப் புன்னகைப்பார். நானும் அகலமாகப் புன்னகைப்பேன். ரூபாய்க்கு படி அரிசி வழங்கப்போகும் கட்சியைச் சேர்ந்தவர் அல்லவா அவர்? ஒருநாள் என்னை அழைத்தார்.

‘‘தம்பி. டெய்லி இஸ்கோல் உட்டு வந்தவுடனே அண்ணாவுக்கு ஓட்டுப் போடுங்கன்னு நாலஞ்சி தெரு சுத்தி கோஷம் போடறியா? மிட்டாய் தர்றேன்..’’ என்றார்.

இப்படி ஒரு வாய்ப்புக்காகத்தானே ஏங்கிக்கொண்டிருந்தேன். மகிழ்ச்சியுடன் தலையசைத்தேன்.

மாலை 5 மணிக்கெல்லாம் போய் விட்டேன். அங்கே ஏற்கெனவே 25 சிறுவர்கள் கூடியிருந்தார்கள். கையில் பேனர் பிடித்திருந்தார்கள். அவற்றில் விதம் விதமான வாக்கியங்கள். என் கையிலும் ஒரு பேனர். ‘உங்கள் ஓட்டு உதயசூரியன் சின்னத்துக்கே!’

சிறுவர்களின் ஊர்வலம் தொடங் கியது.

’பக்தவச்சல அண்ணாச்சி...’ என்று ஒருவர் உரக்கக் கத்துவார். நாங்கள் உடனே ‘பச்சரிசி என்னாச்சி?’ என்று கூவ வேண்டும். பக்தவத்சலம்தான் அப்போதைய ஆளுங்கட்சி முதல் அமைச்சர். இதே ரீதியில், ‘அரோகரா... அரோகரா... ஆற்காடு கிச்சிலி அரோ கரா...’, ‘கோவிந்தா… கோவிந்தா... குதிரைவாலி கோவிந்தா...’, ‘காசு இங்கே, அரிசி எங்கே?’ ‘சூரியச் சின்னத் தைப் பாத்து போடுங்கம்மா ஓட்டு...’ என்றெல்லாம் பிரச்சார வாக்கியங்கள்.

சிறுவர்களின் கீச்சுக் குரல் கோஷ ஊர்வலம் மாலை 5 முதல் 7 வரை அத்தனைத் தெருக்களிலும் செல்லும். வீட்டுக்கு வீடு பெண்கள் முகத்தில் சிரிப்புடன் எங்களைப் பார்ப்பார்கள். சைக்கிளில் செல்லும் ஆண்கள் ‘நல்லாக் கத்துங்கடா...’ என்று ஊக்குவிப்பார்கள். தினம் ஏதோ ஒரு வீட்டில் மோர். சில சமயம் ஜில்லென்று கலர் சோடா.

ஊர்வலம் தேர்தல் அலுவலகத்தை அடைந்ததும் மிட்டாய் கொடுப்பார்கள். இரண்டு நாட்கள் வாங்க மறுத்தேன். சுயவிருப்பத்தின் பேரில் ஊர்வலத்தில் கலந்துகொண்டதால், வாங்குவதை இழுக்காகக் கருதினேன். மூன்றாவது நாள் பொறுப்பாளர் பாக்கெட்டில் உள்ளங்கை நிறைய மிட்டாய்களைத் திணித்துவிட்டார்.

தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. முதல் அமைச்சர் அண்ணா தனது வாக்குறுதிப்படி ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி கொடுத்தார். அதன் பின் தமிழ்நாட்டில் அரிசிப் பஞ்சமே வர வில்லை. அப்போது ஆட்சி இழந்த காங்கிரஸும் அதன் பிறகு ஜெயிக்கவே இல்லை.

என்ன செய்கிறோம் என்று தெளிவா கப் புரியாவிட்டாலும், ஒரு குறிப்பிட்ட கட்சிக்காகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டது, பள்ளிக்கூட வயதில்தான். அதற்கு முன்பும் இல்லை. அப்புறமும் இல்லை. எல்லாம் அரிசி செய்த வேலை!

ஒரு புதுக்கட்சி ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்றால் ஆளுங்கட்சியின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை வெளிச்சம் போட்டுக் காட்டவேண்டும் என்ற உன்னதமானதொரு வியூகத்தை முதலில் வகுத்தவர் அறிஞர் அண்ணா தான்.

‘கோ’ திரைப்படத்தில் வசந்தனின் (அஜ்மல்) புதுக்கட்சி தேர்தலில் வென்று ஆட்சி அமைக்க வேண்டும். ஆளுங்கட்சி மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட வேண்டும். என்ன செய்யலாம்? முதல்வரை (பிரகாஷ்ராஜ்) பத்திரிகை நிருபர் ஒருவர் தாறுமாறாகச் சீண்டுவதுபோல் கேள்வி கேட்க, அவர் அந்த நிருபரைச் செருப்பால் தாக்குவார்.

அந்தக் காட்சியை பத்திரிகைகள் மக்களிடம் கொண்டுசேர்க்கும். ஆளுங்கட்சி தேர்தலில் தோற்கும். பள்ளி வயதில் கற்ற ராஜதந்திரம்தான் ‘கோ’ திரைப்படத்தில் வேறு ஒரு வடிவத்தில் கையாளப்பட்டது!

- வாசம் வீசும்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: dsuresh.subha@gmail.com


வெட்டிவேரு வாசம்செவ்வாய் சினிமாதொடர்சுபாஅனுபவங்கள்திரைக்கதை அனுபவம்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author