Published : 31 Jan 2015 09:16 am

Updated : 31 Jan 2015 09:16 am

 

Published : 31 Jan 2015 09:16 AM
Last Updated : 31 Jan 2015 09:16 AM

பூதாகரமான தலை நல்லதா?

வேலை தேடியும் வேறு காரணங்களுக்காகவும் ஊர்விட்டு ஊர் செல்லும் தொழிலாளர்களின் வாழ்வில் வருவாய், நுகர்வு அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் குறைந்துவருகின்றன என்று உலக வங்கி அறிக்கை தெரிவிக்கிறது. தெற்காசிய நாடுகள் பலவற்றில் மேற்கொண்ட கள ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டிருக்கிறது. நகர்மயமாதலும் தனியார் துறையின் பங்களிப்பு அதிகரிப்பதாலும் சமூக, பொருளாதாரப் பின்னடைவுச் சூழல்களிலிருந்து ஏழைகள் விடுபட வாய்ப்பு கிடைத்திருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. ஏற்றத்தாழ்வு என்பது பண அடிப்படையில் மட்டுமல்லாது, சமூகரீதியாகவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.

தெற்காசிய நாடுகளில் மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் 40% மக்களின் நிலையை ஆராய்ந்து வெளியிடப்பட்ட அறிக்கை இது. சர்வதேச அளவில் காணப்படுவதைவிட தெற்காசிய ஏழைகளின் நிலை, இடம்பெயர்தலாலும் தனியார் துறை வேலைகளாலும் சற்றே மேம்பட்டிருப்பதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. காலங்காலமாக சமூக அடுக்கில் கீழ்நிலையில் அழுத்தி வைக்கப்பட்டிருந்த சமூகத்தினர் தொடர் வேலை, நல்ல ஊதியத்துக்காக நகர்ப்புறங்களை நோக்கி நகர்ந்ததால் சமூக ஒடுக்குமுறைகளிலிருந்தும் இழிவிலிருந்தும்கூட விடுபட முடிந்திருக்கிறது. சிறுபான்மையினருக்கு எல்லா அரசுகளும் சட்டரீதியாக அளிக்கும் பாதுகாப்பு காரணமாக அவர்கள் முன்னேறவும் முடிகிறது என்பதையும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஒரு பக்கம் இப்படி என்றால், இன்னொரு பக்கம் இந்தியாவில் ஏழை, பணக்காரர் வித்தியாசம் மிகமிக அதிகமாக இருக்கிறது. பெரும் பணக்காரர்கள் சில ஆயிரம் பேரிடம் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 12% அளவுக்குச் சொத்துகள் குவிந்துள்ளன. பிற நாடுகளுடன் ஒப்பிட்டால் இந்த விகிதம் இன்னமும் அதிகமாக இருப்பதுதான் வேதனையளிக்கும் செய்தி.

கிராமங்களில் ஆதிக்க சாதியினரின் கட்டுப்பாடுகளுக்குக் கீழ்ப்பட்டு, பொருளாதார வளர்ச்சியும் சமூக அந்தஸ்தும் இல்லாமல் இருந்த மக்கள், வேலைக்காக நகரங்களுக்கும், திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும் இடங்களுக்கும் இடம்பெயரும்போது முன்பு பெற்றதைவிட அதிக ஊதியத்தையும் சுதந்திரத்தையும் பெற முடிகிறது. உலகின் பிற பகுதிகளுடன் ஒப்பிடும்போது, தெற்காசிய நாடுகள் மிகவும் பின்தங்கிய நிலையில் இல்லை என்றாலும் கல்வி, சுகாதார வசதிகளில் பிற சமூகத்தவரைவிடப் பின்தங்கியிருப்பதை மறுக்க முடியாது. சிசு மரணமும், சிறு வயதுக் குழந்தைகள் மரணமும் தெற்காசிய நாடுகளில்தான் அதிகம். வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளில் ஏழைக் குழந்தைகளில் 50% பேர் ஊட்டச்சத்து குறைவு காரணமாக வளர்ச்சியில்லாமல் குள்ளமாகவே இருக்கிறார்கள்.

வரி ஏய்ப்போர் அதிகமிருப்பதாலும் எரிபொருளுக்கும் மின்சாரத் துக்கும் தரும் மானியத்தின் பலன் ஏழைகளைவிடப் பணக்காரர்களுக்கே அதிகம் கிடைப்பதாலும் பொதுப் பயன்பாட்டுக்கான நிதி அரசுக்குக் கிடைக்காமலே போகிறது. சாதி, மத, மொழி அடிப்படையில் சில பிரிவினரை முன்னேற விடாமல் அடக்கிவைக்கும் சமூகக் கட்டமைப்பு முறை பெரும்பாலான மக்கள் முன்னேறுவதற்கும், அவர்களுடைய மனித ஆற்றலை வளர்த்துக்கொள்ளவும் பெரிய தடையாக இருக்கிறது.

உலக வங்கி அறிக்கையின்படி பார்க்கும்போது, இந்தியாவின் நிலை பெருமையளிப்பதாக இல்லை. பூதாகரமான தலையையும், வற்றி இளைத்த உடலையும் கொண்ட ஒரு குழந்தையைப் போல் இந்தியா காட்சியளிக்கும்போது, வளர்ச்சி என நாம் எதைச் சொல்லிக்கொண்டிருக்கிறோம் என்ற கேள்விதான் எழுகிறது.தெற்காசிய நாடுகள்வேலையின்மைவரி ஏய்ப்புஉலக வங்கி அறிக்கை

You May Like

More From This Category

More From this Author