Last Updated : 05 Jan, 2015 10:37 AM

 

Published : 05 Jan 2015 10:37 AM
Last Updated : 05 Jan 2015 10:37 AM

200 ஏக்கர் பரப்பளவில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை: ரூ.2 ஆயிரம் கோடியில் அமைக்க திட்டம்

தமிழகத்தில் ரூ.2 ஆயிரம் கோடியில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழக மருத்துவ மனை (எய்ம்ஸ்) அமைக்க வேண்டும் என மத்திய அரசிடம், தமிழக அரசு கோரிக்கை வைத்து இருந்தது. இதையடுத்து எய்ம்ஸ் மருத்துவ மனை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து அனுப்பும்படி மத்திய அரசு கடிதம் எழுதியிருந்தது. இதனைத் தொடர்ந்து அப்போதைய தமிழக முதல்வர் ஜெய லலிதா, 5 இடங்களை தேர்வு செய்து கடிதம் எழுதினார். இந்நிலை யில், தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ மனையை அமைக்கும் முயற்சியில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக நேற்று முன்தினம் சென்னை வந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெபி.நட்டா, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதற்காக டெல்லி குழுவினர் விரைவில் வர உள்ளனர் என தெரிவித்து இருந்தார். இதன் மூலம் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது உறுதி யாகியுள்ளது.

இதுதொடர்பாக தமிழக சுகா தாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழக சுகாதாரத் துறையின் செயல்பாடுகள், மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக இருக்கிறது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெபி.நட்டா பாராட்டியுள்ளார். இதனை நினைக்கும் போது பெருமையாக உள்ளது. தமிழகத்தில் ரூ.2 ஆயிரம் கோடியில் 200 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு அமைக்க திட்டமிட் டுள்ளது. மத்திய அரசு கேட்டுக் கொண்டபடி, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல் பட்டு, புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை நகரம், தஞ்சாவூர் மாவட்டத்தில் செங்கிபட்டி, ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை மற்றும் மதுரை மாவட்டத்தில் தோப்பூர் ஆகிய 5 இடங்கள் தேர்வு செய்து அனுப்பப்பட்டுள்ளது. இந்த 5 இடங்களிலும் குடிநீர் வசதி, மின்சார வசதி, பேருந்து, ரயில் போக்குவரத்து வசதிகள் உள்ளது. மேலும் விமான நிலையங்களும் அருகில் இருக்கிறது. மத்திய குழுவினர் 5 இடங்களையும் ஆய்வு செய்வார்கள். அதன்பின் ஏதாவது ஒரு இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கும். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக் கப்பட்டால், தமிழகம் மருத்துவத்துறையில் இன்னும் வளர்ச்சி அடையும். மருத்துவக் கல்வியின் தரம் மேம்படும். ஏழை - எளிய மக்கள் தரமான மருத்துவ சிகிச்சை பெறுவார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

செங்கல்பட்டு, மதுரை சிறந்த இடம்:

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில தலைவர் டாக்டர் கே.செந்தில், பொதுச்செயலாளர் டாக்டர் பி.பாலகிருஷ்ணன் ஆகியோர் கூறியதாவது:

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ மனை அமைப்பதை வரவேற் கிறோம். பேருந்து, ரயில் மற்றும் விமான போக்குவரத்து அருகில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைத்தால் அனைத்து மக்களும் பயன்பெற முடியும். அப்படி பார்த்தால், தமிழக அரசு தேர்வு செய்து கொடுத்துள்ள 5 இடங்களில் செங்கல்பட்டு அல்லது மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை அமைத்தால் நன்றாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x