Published : 11 Dec 2014 15:11 pm

Updated : 11 Dec 2014 15:11 pm

 

Published : 11 Dec 2014 03:11 PM
Last Updated : 11 Dec 2014 03:11 PM

அரங்கனை ஆண்டாள்

சின்னஞ்சிறு பெண் ஆண்டாள். அச்சிறுமிக்கு வடபத்ரசாயி மேல் அளவு கடந்த பக்தி. அதுவே கள்ளம் கபடமற்ற மோகமாக மாறியது. முதலில் கண்ணனுக்கு உரித்தான பூமாலை தொடுத்தாள். தொடுத்த மாலையின் நீள அகலத்தையும், அழகையும் வசீகரத்தையும் கண்ணால் கணிக்க எண்ணினாள். நேரான பார்வையில் காண்பதைவிட நிலைக் கண்ணாடியில் கண்டால் கணிப்பு சிறப்பாக இருக்கும் என்று எண்ணினாள். இவ்வாறு அளக்கப்பட்ட மாலையே ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயிக்கு தினந்தோறும் சாற்றப்பட்டது.

இதனை ஆண்டாளின் வளர்ப்புத் தந்தை பெரியாழ்வார் ஒரு நாள் கண்டுபிடித்துவிட்டார். இது மகளின் அறிவீனம் என்று எண்ணினாலும் போற்றி வளர்த்த பொன் மகளான ஆண்டாளைக் கடிந்துகொள்ளாமல், ஆண்டாள் சூடிக் களைந்த மாலையை வடபத்ரசாயிக்குச் சாற்றாமல் விட்டுவிட்டார். இதனை அறியாத ஆண்டாள் இரவில் அயர்ந்து தூங்க, பெரியாழ்வாரோ தூக்கம் பிடிக்காமல் புரண்டு, புரண்டு படுத்திருந்தார்.


அவர் விடியற்காலையில் கண் அசர கனவில் வந்த வடபத்ரசாயி தனக்கு இன்று மலர் மாலை சாற்றாத காரணம் கேட்டார். ஆண்டாள் அறியாமல் செய்த தவறை மன வேதனையுடன் எடுத்துக் கூறினார் பெரியாழ்வார். ஆண்டாள் சூடிக் களைந்த அம்மலர் மாலையையே தான் விரும்புவதாகத் தெரிவித்தார் வடபத்ரசாயி. இதனைக் கேட்டு பெரியாழ்வார் நெக்குருகினார்.

108 திவ்ய தேச பெருமாள்

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தன் மகள் ஆண்டாளுக்குத் திருமணம் செய்யப் பெரியாழ்வார் முயல, மானிடரைத் திருமணம் செய்ய மறுத்தாள் ஆண்டாள். பெருமாளையே மணக்க விரும்புவதாகத் தெரிவித்தாள். 108 திவ்ய தேசப் பெருமாளின் அருமை, பெருமை, அழகு, வீர தீரம் ஆகியவற்றை விளக்கினார் பெரியாழ்வார்.

இவர்களுள் நின்றவண்ணம், அமர்ந்தவண்ணம், கிடந்தவண்ணம், உலகளந்தவண்ணம் ஆகியவற்றை விளக்கிவிட்டு எந்த வகையில் மாப்பிள்ளை வேண்டும் எனக் கேட்டார் பெரியாழ்வார். ஆண்டாள் தேர்ந்தெடுத்ததோ ஸ்ரீரங்கத்து அரங்கனை. அதற்கான காலம் கனியக் காத்திருந்தாள். அதற் காகவே நோன்பிருந்தாள். அதுவே பாவை நோன்பு எனப்படுகிறது.

பாவை நோன்பு

மார்கழி மாதத்தில் உள்ள முப்பது நாட்களுக்கு நாளொன்றுக்கு ஒரு பாடல் வீதம் பாடப்படும் முப்பது பாடல்கள் கொண்ட தொகுப்பே திருப்பாவை. இவற்றை இயற்றியவள் ஆண்டாள். இந்தப் பாசுரங்களில் கண்ணனைத் துதிப்பதுடன் பாவை நோன்பின் விதிகளையும் ஆண்டாள் குறிப்பிட்டிருக்கிறாள். விடியற்காலையில் குளிக்க வேண்டும், நெய் உண்ணக் கூடாது, பால் உண்ணக் கூடாது, பிரம்மச்சாரிகளுக்கும், சந்நியாசிகளுக்கும் அவசியம் உணவிடுதல் வேண்டும், கோரிய பலனைப் பெற அகமகிழ்ந்து விரதம் இருத்தல் வேண்டும்.

ஆயர்பாடி

ஆயர்பாடியில் கண்ணன் வளர்ந்ததால், அந்நாட்களுக்கே மனோரதத்தில் சென்ற ஆண்டாள் திருப்பாவைப் பாசுரங்களில் அந்நிகழ்ச்சிகளைப் படம் பிடித்துக் காட்டுகிறாள். மார்கழித் திங்கள் எனத் தொடங்கும் முதல் பாசுரத்திலேயே, கண்ணனே நாராயணன் என்று அறுதியிட்டுக் கூறிவிடுகிறாள். அவனே விரத பலனை அளிப்பவன் என்றும் குறிப்பிட்டுவிடுகிறாள்.

கண்ணனின் வளர்ப்புத் தந்தை நந்தகோபனே ஆயர்பாடித் தலைவன். அவனோ சாதுவானவன். ஆனால் இப்பாசுரத்திலோ கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் என்கிறாள். கண்ணன் மீது கொண்ட பாசத்தால், குழந்தையின் அருகில் ஈ, எறும்பு வந்தால்கூட, அதனைக் கொல்ல ஈட்டியைத் தூக்குவானாம் நந்தகோபன். அதனால் கூர்வேல் கொடுந்தொழிலன். ஏராந்த கண்ணி யசோதை என்கிறாள் ஆண்டாள். குழந்தைக் கண்ணன் தொடர்ந்து செய்யும் லீலா விநோதங்களைக் கண்டு ஆச்சரியத்தால் கண்களை விரியத் திறக்கிறாளாம் யசோதா.

அப்படி ஏறிட்டபடியே நிலை கொண்டுவிட்டதாம் அவளது கண்கள். அதனால் ஏராந்த கண்ணி யசோதை இளம் சிங்கம் கண்ணன். அவன் கார்மேனிச் செங்கண் கதிர் மதியம், போல் முகத்தான் என்கிறாள் அடுத்த வரிகளில். தனது பக்தர்களின் எதிரிகளிடம் கதிர் அதாவது சூரியன் போல் சுடு முகத்தைக் காட்டுபவன். தனது பக்தர்களிடம் மதியம் அதாவது நிலவு போல குளிர் முகத்தைக் காட்டுபவன். அவனே கண்ணன். அவன்தான் நாராயணன். விரத பலனைத் (பறை) தரப் பாத்திரமானவன்.

தனது பக்திப் பயணத்தின் லட்சியக் குறிக்கோளை நோன்பு தொடங்கும் ஆரம்பப் பாசுரத்திலேயே அறிவித்துவிட்டாள் ஆண்டாள். நாராயணனைத் துதித்து வரம் பெற விரும்பும் பக்தர்கள், குறிப்பாகப் பெண்கள், இத்தகைய விரதத்தைக் கடைப்பிடித்தால் பல்வேறு நன்மைகளும் பெறலாம் என்ற நம்பிக்கையுடன் பாவை நோன்பு இன்றளவிலும் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆண்டாள்வடபத்ரசாயிதிருப்பாவைபெரியாழ்வார்மார்கழி மாதம்கண்ணன்

You May Like

More From This Category

More From this Author