Published : 20 Dec 2014 13:10 pm

Updated : 20 Dec 2014 13:11 pm

 

Published : 20 Dec 2014 01:10 PM
Last Updated : 20 Dec 2014 01:11 PM

ஜெயகாந்தனோடு பல்லாண்டு 13

13

தமிழக கவர்னராக கே.கே.ஷா ஆளுநராக இருந்த போது, ஜெயகாந்தனுக்கு மேலவை உறுப்பினர் பதவி (எம்.எல்.சி) வழங்கும் ஒரு யோசனை அரசாங்கத் தரப்பில் இருந்து வந்தது. திருப்பத்தூரில் எங்கள் வீட்டுப் பழைய மொட்டை மாடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருக் கும்போது, ஜெயகாந்தன் இதை எங்களுக்குத் தெரிவித்தார். அதை ஏற்றுக் கொள்ளலாமா, வேண்டாமா என்று முடிவு செய்ய முடியாமல் இருப்பதாக சொன்னார்.

மறுநாள் காலை நாங்கள் புறப்பட்டு, போளூர், கலசப்பாக்கம் அருகில் உள்ள பூண்டி என்கிற ஒரு சிற்றூருக்குப் போனோம். அந்த ஊரில், ஒரு திண்ணை யில் உட்கார்ந்த இடத்தைவிட்டு எழாமல் 11 வருஷ காலமாக உட்கார்ந்தது உட்கார்ந்தபடியே இருக்கும் பூண்டி சாமியாரை அவ்வப்போது போய்ப் பார்த்துவிட்டு வருவது எங்கள் வழக்க மாயிருந்தது.

பூண்டி சாமியார் இப்போது இல்லை. அவர் சமாதியடைந்து பல வருஷங்களாகிவிட்டன. அவரைப் பற்றி இங்கே கொஞ்சம் சொல்ல வேண்டும்.

ஜெயகாந்தன் பார்த்திருந்த ஓங்கூர் சாமியாரை நாங்கள் பார்த்தது இல்லை. எனவே, அப்படி ஒரு சித்த புருஷர் காணக் கிடைக்க மாட்டாரா என்று நாங்கள் ஏங்கியிருந்தபோது, ஆனந்த விகடனில் பரணிதரன் பூண்டி சாமியாரைப் பற்றி எழுதி எல்லோருக்கும் அறிமுகப்படுத்தினார். அதிலே, நாம் கேட்கிற கேள்விகளுக்கு அவர் கூறியிருந்த சம்பந்தா சம்பந்தமில்லாத அழகழகான வார்த்தைகளை எல்லாம் அப்படியே பதிவு செய்திருந்தார். அந்த வார்த்தைகள் எல்லாம் மிகவும் ரசிக்கத் தக்கவையாக இருந்தன. அவரது சொற்களின் அழகுதான் அங்கே தூண்டில் போட்டு இருந்தது.

பூண்டி சாமியாரை நாங்கள் அவ்வப்போது போய்ப் பார்த்து வந்த அனுபவங்களை நான் என் ‘தெரிந்த முகங்கள்’ என்கிற படைப்பில் விவரமாக எழுதியுள்ளேன். சாமியார் என்றால், தேர்தலில் டிக்கெட் வாங்கி ஜெயித்து, நாடாளுமன்றத்தில் காவி உடை அணிந்து நின்று, ஆவேச உரையாற்றும் சாமியார்களைப் போன்றவர் அல்லர் அவர். அவரது சித்தம் என்கிற பறவை, லெளகீக விஷயங்கள் எல்லாவற்றிலும் இருந்து பூரணமாக விடுபட்டு, எங்கோ பரவெளியில் பறந்து கொண்டிருந்தது. அரசனையும், கற்றறிந்த பெரியோரையும், நாயையும், நாயைத் தின்பவரையும் ஒரே மாதிரியாக பாவிக்கும் ஸ்திதப் பிரக்ஞன் ஆக அவர் இருந்தார்.

அங்கே சென்று, அவரைக் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்துவிட்டு, செய்யாற்று நீரில் குளித்துக் களிப்பது எங்கள் சிறந்த பொழுதுபோக்குகளில் ஒன்றாக இருந்துவந்தது. இந்தப் பூர்வ பீடிகையோடு இப்போது நாம் பூண்டிக்குப் போகலாம்.

அங்கே ஒரு சேந்துக் கிணற்றின் செப்பு வாளியில் நீர் முகந்து கை, கால், முகம் அலம்பிக் கொண்டு அதன் பின் நாங்கள் சாமியாரைத் தரிசிக்கப் போனோம். ஜெயகாந்தன், எப்போதும் போல என்னை முன்னால் தள்ளிவிட்டார். அவரது உத்தேசம் எனக்குப் புரிந்தது. ஒவ்வொரு முறை தரிசிக்கும்போதும், நாங்கள் சாமியாரிடம் ஏதாவது பேச்சுக் கொடுத்து, அவர் பேசுகிற அழகை ரசிப்போம்.

‘‘வடிவேல் பிள்ளை வருவாரு…’’

‘‘காதர் பாஷா நல்லா வலை பின்னுற மாதிரி பேசுவார்…’’

‘‘சீமைத் தக்காளிச் செடி. ஒவ்வொரு செடியிலும் முப்பது முப்பத்தைந்து பழம்…’’

‘‘விடியற்காலையில புளிய மரத்து அடியிலே, திருப்பதிக்குப் போற ஏழெட்டுப் பேர்…’’

என்று இந்த மாதிரியெல்லாம் வசனிக்கின்ற அவர் வார்த்தைகளைக் கொண்டே அவரிடம் நாங்கள் விளையாடுவோம்.

இந்த முறை நான் மெல்ல வாய் திறந்து, ‘‘பிள்ளை உங்களிடம் ஒன்று கேட்கச் சொன்னார்…’’ என்றேன். இது மட்டுமே சொன்னேன்.

சாமியார் எங்களைச் சற்று உறுத்துப் பார்த்தார்.

‘‘அதெல்லாம் ஒண்ணும் வேணாம். நீ இப்ப இருக்கற இடமே பெரிய இடம். உனக்கு செய்யலாம்னு தோணும். ஆனா, உன்னால முடியாது’’ என்று சொன்னவர், இன்னொரு முறையும், ‘‘நீ இப்ப இருக்கற இடமே பெரிய இடம்!’’ என்று கூறி முடித்தார்.

அவ்வளவுதான். ஜெயகாந்தன் அங்கிருந்து சரேலெனக் கிளம்பினார். செய்யாற்றைக் கடக்கும்போது, ஸ்டீயரிங்கை இயக்கியபடியே, ‘‘என்னை நன்றாய் அறிந்தவர் போல இலக்கணம் சொன்னீரே…’’ என்று ஒரு வரியை மிகவும் அனுபவித்துப் பாடலானார். ஆனால், அந்தப் பாடல் அந்த ஒரு வரியோடு நின்றுவிட்டது.

இந்த மாதிரி ஒரேயொரு வரியோடு நின்றுபோன அவர் பாடல்கள் ஒரு கத்தை தேறும்.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட அந்தக் கொடூரமான இரவில் நாங்கள் கோயம்புத்தூரில் இருந்தோம்.

‘‘என் பகைவருக்கு என்ன வேண்டும்…

என் பகைவருக்கு என்ன வேண்டும்?’’

என்று அங்கலாய்த்தவர், சற்றுப் பொறுத்து மிக மிக அமைதியாக அந்த அழகான வரியைச் சொன்னார். அந்தக் கவிதை வரியின் கடைசி எழுத்தில் ஒரு கண்ணீர்ச் சொட்டு ஒட்டியிருந்தது.

‘‘இன்னும் ஒருமுறை வென்று இந்தியாவைக் காப்பதற்கு என்னென்ன எண்ணியிருந்தான்!’’

ஓர் ஆழமான உணர்ச்சி அவருக்கு உண்டாகுமாயின், அதனது உடனடிப் பிறப்பு, எப்போதும் ஒரு கவிதை வரியின் ரூபத்திலேயே நிகழ்வதை, நாங்கள் பலமுறை கவனித்திருக்கிறோம்.

அவர் யாரையும் புகழ மாட்டார் என்றும், அப்படி இப்படி என்றும் அவரை இகழ்ந்துரைப்பாரைப் பற்றி ஒரு முறை பேச்சு வந்தது.

‘‘நான் புகழ்ந்துகொண்டே இருக்கிறேன் – என்

புகழ்ச்சிக்கோர் நாயகன் கிட்டவில்லை – எனை

இகழ்ந்துகொண்டே இருக்கிறார் – இவர்

இகழ்ச்சிக்கு நானொன்றும் இளைக்க வில்லை!’’

என்கிற பாடல் வரி அவரிடம் சட்டென்று பிறந்தது.

கவிதைக்கும் அவருக்கும் உள்ள உறவு பற்றி இன்னும் பல அத்தியாயங்கள் எழுதலாம்.

‘‘கவி எழுதுவோர் எல்லாம் கவிஞர் அல்லர்! கவிதையே வாழ்க்கையாகக் கொண்டோன், வாழ்க்கையையே கவிதையாக செய்தோன் – அவனே கவிஞன்’’ என்றார் பாரதியார்.

ஜெயகாந்தன், வாழ்க்கையையே கவிதையாகச் செய்தவர்!வாழ்வோம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: pisakuppusamy1943@gmail.com

தொடர்ஜெயகாந்தனோடு பல்லாண்டுபி.ச.குப்புசாமிசனிக்கிழமை சரிதை

You May Like

More From This Category

More From this Author