Last Updated : 14 Dec, 2014 12:16 PM

 

Published : 14 Dec 2014 12:16 PM
Last Updated : 14 Dec 2014 12:16 PM

புதிதாய்ப் பிறந்த ‘நியூ’சிலாந்து - 6

‘குடும்பம் என்கிற அமைப்பு நியூசிலாந்தில் சிதைந்து கொண்டு வருகிறது. எளிதில் விவாகரத்து கிடைக்கிறது. தன்பாலினத் திருமணங்கள் அரிதல்ல போன்ற சூழல்கள் இந்தச் சிதைவுக்கு உறுதுணையா கின்றன. பெண்கள் ஒரே நேரத்தில் பலருடன் வாழ்க்கை நடத்துவதும், குழந்தைகளை அனாதையாக்கி விட்டுச் செல்வதும் அப்படியொன் றும் அபூர்வ விஷயமாகத் தெரிய வில்லை’. இப்படிக் கவலை தெரிவித்திருக்கிறார்கள் கிறிஸ்தவ மதத் தலைவர்கள்.

மக்களின் போக்கு வேறொரு விதத்திலும் மாறி வருகிறது. 1800களில் நியூசிலாந்தில் ஐரோப்பியர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குடியேறினார்கள் என்பதைப் பார்த்தோம். அவர்களில் ஆங்கிலேயர்களின் எண்ணிக்கை கணிசமாகவே இருந்தது. இவர்களில் திமிங்கல வேட்டைக்கு வந்தவர்கள், முன்னாள் கைதிகள், இங்கிலாந்து சர்ச்சின் பிரதிநிதிகள், அவர்களின் மனைவிகள் என்று பலரும் இருந்தார்கள்.

முதலாம் உலகப் போரின்போது நியூசிலாந்தில் வசித்த பல ஆங்கி லேயர்கள் இங்கிலாந்துக்குக் கிளம்பினர். இருநாட்டு அரசுகளும் அதற்கு ஒத்துழைத்தன.

1974 வரை ஆங்கிலேயர்கள் நியூசிலாந்துக்குச் செல்வதற்கும், தங்குவதற்கும் அரசு இலவசமாக உதவியது. அதற்குப் பிறகு நியூசிலாந்திலிருந்து வொர்க் பர்மிட் இருந்தால் மட்டுமே நியூ சிலாந்துக்குள் செல்ல அனுமதி யளிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் நியூசிலாந்து செல்லும் ஆங்கி லேயர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்தது. நியூசிலாந்தின் பொருளாதாரம் அப்படியொன்றும் கவர்ச்சிகரமாக இல்லை என்பதே முக்கிய காரணம். தொடக்கத்தி லிருந்தே தங்கள் மதத்தை நியூ சிலாந்தில் பரப்புவதில் இங்கி லாந்து மிகவும் குறியாக இருந்தது.

எப்படியோ பிரிட்டனின் தாக்கம் நியூசிலாந்தில் பலமாகவே இருந்த ஒன்றுதான். இன்று நியூசி லாந்தில் பிரபலமாக உள்ள ரக்பி, கிரிக்கெட் போன்ற விளையாட் டுகள் கூட இங்கிலாந்திலிருந்து பரவியவைதான். ஆனால் நியூசிலாந்து மக்களில் பலரும் இப்போது வேர்களை நோக்கிப் பயணம் செல்லவே விரும்புகிறார்கள்.

மொழி எனும் அடிப்படையில் நியூசிலாந்து இப்போது இங்கிலாந் திடமிருந்து விலகத் தொடங்கி விட்டது. தங்கள் பேச்சுவார்த்தை யில் அதிக அளவு மவோரி வார்த் தைகளை பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள். நியூசிலாந்துகாரர்கள் பேசிக் கொள்ளும் ஆங்கிலம் இதன் காரணமாக வெளிநாட்டினருக்குப் புரிவது கஷ்டமாகவே உள்ளதாம்.

இதற்கு முன் இடங்களின் பெயர் களைக் குறிப்பிட மட்டுமே மவோரி வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன. இப்போது அலுவலகங்களில்கூட வானு, இவி, மஹி, கியோரா போன்ற வார்த்தைகள் வெகு சரளமாக பயன்படுத்தப்படுகின்றன. இவை மவோரி வார்த்தைகள். இவற்றின் அர்த்தம் முறையே குடும்பம், இனம், பணி மற்றும் ஹலோ. வெலிங்டனில் உள்ள விக்டோரியா பல்கலைக்கழகம் புழக்கத்திலுள்ள 1000 மவோரி வார்த்கைளுக்கான ஆங்கில அர்த்தங்களை வெளியிட்டுள்ளது.

1970க்களிலிருந்து மவோரியும் ஆட்சி மொழியாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது. 1980க்களில் ஆரம் பக்கட்டப் பள்ளிகளில் மவோரி மொழியும் பயிற்றுவிக்கப்படு கிறது.

இரண்டு தேசிய கீதங்கள் கொண்ட நாடு நியூசிலாந்து. ‘’அரசியைக் கடவுள் காப்பாற்றட் டும்’’ (God save the Queen) என்று தொடங்கும் பாடல் ‘‘நியூ சிலாந்தைக் கடவுள் பாதுகாக் கட்டும்’’ (God defend New Zealand) என்று தொடங்கும் பாடல் ஆகிய இரண்டுமே அதிகார பூர்வமான தேசிய கீதங்கள்.

1977வரை அரசி பாடல்தான் ஒரே தேசிய கீதமாக இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் பெரும் பாலும் நியூசிலாந்து பாடல் தான் தேசிய கீதமாக ஒலிக்கிறது. 1972 ஒலிம்பிக்ஸில் இதுதான் ஒலித் தது. இதைத்தான் தேசிய கீதமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று ஓர் இயக்கமே நடந்தது.

அதன் பிறகு இதற்கும் சம உரிமை உண்டு என்று முடிவெடுத் தது நியூசிலாந்து. இதற்கான சம்மதத்தையும் ராணி இரண்டாம் எலிசபெத் அளித்தார்.

மூன்றாவது முறையாக நியூசி லாந்தின் பிரதமராகி இருக்கிறார் ஜான் கீ. இவர் அந்த நாட்டின் 38வது பிரதமர். நியூசிலாந்து தேசியக் கட்சியின் தலைவர். அடிக்கடி மாதாகோவிலுக்குச் சென்றாலும் ‘‘இறைவன் உண்டா இல்லையா என்பதில் ஒரு முடிவுக்கு வர முடிய வில்லை’’ என்கிறார்.

இம்முறை ஆட்சிப் பொறுப் பேற்றதும் அவர் அவசரமாகச் செய்த காரியம் அந்த நாட்டுக் கொடியை மாற்றி அமைத்ததுதான். அதாவது அந்த நாட்டின் கொடியில் இடம் பெற்றிருந்த பிரிட்டனின் யூனியன் ஜாக் இனி மறைந்துவிடும். ‘எங்கள் நாட்டின் தனித்துவம்தான் இனி எங்கள் தேசியக் கொடியில் இருக்கும்’ என்று பெருமை பொங்கக் கூறியி ருக்கிறார் ஜான் கீ.

கொடியை மாற்றுவதில் அந்த நாட்டு மக்களில் பெரும்பாலானவர் களுக்குச் சம்மதம்தான். ஆனால் அதற்கான காரணம் பலரைப் பொருத்தவரை மாறுபடுகிறது. ‘ஆஸ்திரேலியாவின் கொடியைப் போல காட்சி தருகிறது எங்கள் நாட்டுக் கொடி’ இதுதான் பலரது ஆதங்கம்.

காரணம் எதுவாக இருந்தாலும் கொடி மாற்றத்துக்கு பலத்த ஆதரவு. அக்டோபர் 29 அன்று புதிய கொடி தொடர்பான கருத்துக் கேட்பு நடைபெற்றது. 2016க்குள் புதிய தேசக் கொடி வடிவம் தீர்மா னிக்கப்பட்டு அமலுக்கு வந்துவிடும் என்று கூறியிருக்கிறார் பிரதமர்.

‘நாட்டின் பொருளாதாரம், சூழலில், ஆரோக்கியம் என்று பல விஷயங்களில் கவனம் செலுத் தாமல் கொடியைப் பிடித்துக் கொண்டு அலைகிறார் பிரதமர்’ என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. பழைய கொடி மாற்றப்பட வேண்டுமென்பதில் நெருடல் எதுவும் இல்லை. ஆனால் புதிய கொடியைத் தீர்மானிக்கும் போது வேறுபாடுகள் முளைவிடலாம்.

(அடுத்து.. ஆபத்துகள் சூழ்ந்த ‘சகுனி’ தேசம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x