Published : 24 Nov 2014 06:57 PM
Last Updated : 24 Nov 2014 06:57 PM
அசாம் மாநிலத்தின் கெண்டுகோனா ரயில் நிலையத்தில் சக்தி வாய்ந்த குண்டு கைப்பற்றப்பட்டது. இதனால் மிகப் பெரிய சதிச் செயல் முறியடிக்கப்பட்டது.
அசாமின் கெண்டுகோனா மாவட்டத்தின் லும்டிங்-காமாக்யா இன்டர்சிட்டி ரயில் நிலையத்தில் கழிவறை அருகே துணியால் சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்த மர்ம பொருள் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து உடனடியாக ரயில்வே நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்த மார்க்கத்தில் வந்த ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, பயணிகள் அனைவரும் பெட்டியில் இருந்து இறக்கிவிடப்பட்டனர்.
மர்ம பொருளை சோதனை செய்தபோது, அது 7 கிலோ எடை கொண்ட, அதிக சக்திவாய்ந்த வெடிகுண்டு என்று உறுதியானது. இதனால் ரயில் நிலையத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இதனை அடுத்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டை செயலிழக்க செய்யும் பணி நடந்து வருகிறது. வெடிகுண்டை கண்டுபிடித்ததன் மூலம், பெரும் விபத்தில் இருந்து அந்த ரயில் தப்பியது.