Published : 03 Sep 2014 10:00 AM
Last Updated : 03 Sep 2014 10:00 AM

விநாயகர் ஊர்வல பாதைகள் ‘வெப்காஸ்டிங் சிஸ்டம்’ மூலம் ஆய்வு: சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் பேட்டி

விநாயகர் ஊர்வலப் பாதைகள் வெப்காஸ்டிங் சிஸ்டம் மூலம் ஆய்வு செய்யப்படும் என்றும், பதட்டமான இடங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் கூறியுள்ளார்.

சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் செவ்வாய்கிழமை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சென்னையில் வருகிற 6 மற்றும் 7-ம் தேதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடலில் கரைக்கப்படுகின்றன. அந்த இரு நாட்களும் சென்னையில் உள்ள அனைத்து போலீஸ் அதிகாரிகளும், போலீஸாரும் பாதுகாப்பு பணியில் இருப் பார்கள். யாருக்கும் விடுமுறை கிடையாது. சுமார் 18 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். ஊர்வல பாதைகள் மற்றும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து இந்து அமைப்புகளின் நிர்வாகிகளுடன் ஏற்கெனவே ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் அனைத்து இடங்களிலும் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் பார்வையிடுவதற்காக ‘வெப்காஸ்டிங் சிஸ்டம்’ மூலம் பாதுகாப்புப் பணிகளை செய்திருக்கிறோம். இதற்காக 10 போலீஸ் கேமராமேன்கள் தனித்தனி வாகனங்களில் தயாராக இருப்பார்கள். இவர்கள் விநாயகர் ஊர்வலத்தை வீடியோ எடுப்பார்கள். அவர்கள் 10 இடங்களில் எடுக்கும் காட்சிகளை ஒரே இடத்தில் அமர்ந்து பார்வையிட்டு, தேவையான இடத்துக்கு கூடுதல் போலீஸாரை அனுப்பமுடியும்.

9 இடங்கள்

ஏதாவது ஓர் இடத்தில் அசம்பாவிதம் ஏற்பட்டால் அந்த இடத்துக்கு 3 நிமிடங்களுக்குள் கூடுதல் போலீஸாரை அனுப்ப முடியும். ஒவ்வொரு காவல் நிலையத்திலும் தலா 6 மோட்டார் சைக்கிள்களில் ரோந்து குழுவினர் இருப்பார்கள். இவர்கள் 3 ஷிப்ட் முறையில் தொடர்ந்து பணியில் இருப்பார்கள். சென்னையில் வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு, எழும்பூர், திருவல்லிக்கேணி, கோடம்பாக்கம், கே.கே.நகர், சேலையூர், தாம்பரம், வேளச்சேரி ஆகிய 9 இடங்கள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்களில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

சென்னையில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படும் 200 நான்கு சக்கர வாகனங்களுக்கும் 200 கேமராக்களை வாங்க முதல்வர் ஜெயலலிதா அனுமதியளித்துள்ளார். இதன் மூலம் சென்னையின் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த பேட்டியின்போது கூடுதல் கமிஷனர்கள் கருணாசாகர், ஆபாஸ்குமார், இணை கமிஷனர் வரதராஜன், துணை கமிஷனர் ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x