Published : 22 Sep 2014 12:46 PM
Last Updated : 22 Sep 2014 12:46 PM

அரை நூற்றாண்டு அற்புத ரயில்

ஜப்பானில் ஷிங்கான்சென் சூப்பர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடங்கி 50 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. 1964 அக்டோபர் முதல் தேதி இது தொடங்கப்பட்டது. மணிக்கு 270 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இதைத்தான் புல்லட் ரயில் என்கிறார்கள். இந்த சேவையைப் பார்த்துப் பிரமித்து தங்கள் நாட்டிலும் இதைத் தொடங்கியவர்கள் பலர். ஆனால், இதற்கு இணையாக யாராலும் நடத்த முடியவில்லை.

டோக்கியோவிலிருந்து ஒசாகா நகரம் வரை உள்ள 515.4 கி.மீ. தொலைவைக் கடக்க இந்த ரயிலுக்கு மொத்தம் 145 நிமிஷங்கள்தான் பிடிக்கின்றன. ஒரு நாளைக்கு 323 முறை இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஒரு நாளைக்கு சுமார் 3,91,000 பயணிகள் இதைப் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு பயணத்தின்போதும் ரயில் பெட்டிகள் துடைத்துப் பெருக்கிச் சுத்தப்படுத்தியதைப் போல அவ்வளவு தூய்மையாக இருக்கும். இந்த ரயில் தாமதமாகப் புறப்படுவதோ போய்ச் சேருவதோ இல்லை. ஆண்டுதோறும் கணக்கெடுத்துப் பார்த்தாலும் ஏதோ ஒரு ரயில் அதிகபட்சம் 6 விநாடிகள் மட்டுமே தாமதித்திருக்கும். இந்த ரயிலில் சென்றவர்கள் யாரும் காயம்பட்டதும் இல்லை, உயிரிழந்ததும் இல்லை. இதே பாதையில் இயக்கப்படும் விமானங்களாலேயே இந்த ரயில் சேவையுடன் போட்டிபோட முடியவில்லை. உலகிலேயே மிகவும் பரபரப்பான ரயில் சேவைப் பிரிவாக டொகைய்டோ ஷின்கான்சன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் சேவை குறித்து 1930-களின் இறுதியிலும் 1940-களின் தொடக்கத்திலும் திட்டமிடப்பட்டது. இந்த ரயிலுக்கான பாதையைக் கடலுக்கு அடியிலும் நிறுவி கொரியா, சீனாவுக்கும் சேவையை நடத்த முதலில் திட்டமிடப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அந்தக் கனவு தகர்ந்தது. அதே சமயம் நாட்டுக்குள் இரு முனைகளையும் இணைப் பதென்று முடிவாயிற்று.

எந்த நாட்டிலுமே ரயில் சேவை மூலம் லாபம் கிடைப்பதே இல்லை. ஜப்பானும் விதிவிலக்கல்ல. ஆனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருக்கவும் இதன் பங்களிப்பு அளவிட முடியாதது. மிகக் குறைந்த எரிபொருளில் அதிகம் பேரை, அதிக எடையுள்ள சரக்குகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டுசெல்ல ரயிலைவிடச் சிக்கனமான போக்குவரத்தே கிடையாது.

புல்லட் ரயில் (அதிவேக ரயில்), சாதாரண ரயில், பாசஞ்சர் ரயில் என்று மூன்று விதமான ரயில் சேவையை ஜப்பான் நடத்துகிறது. ஒவ்வொரு வகை சேவைக்கும் போகவும் வரவும் தனித்தனியாக ஆறு பாதைகளைப் பராமரிக்கிறது. இந்த ரயில் சேவையில் நகரங்களில் மக்கள்தொகை கூடிவிட்டது என்று குற்றம்சாட்டுகிறார்கள். எனினும், தொலைக்காட்சியைவிட ஜப்பானியர்களை இணைப்பது இந்த ரயில்சேவைதான். நாட்டின் எந்த மூலையிலிருந்தும் இன்னொரு மூலைக்கு இரண்டேகால் மணிக்குள் சென்றுவிட முடியும் என்பதால் திருமணம், நிச்சயதார்த்தம், பிறந்தநாள், புதுமனை புகுவிழா என்று எல்லா விசேஷங்களுக்கும் உறவினர்கள், நண்பர்கள் வீட்டுக்குப் போய்விடுகிறார்கள். கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கவும், விரும்பிய இடங்களில் விடுமுறையை கழிக்கவும், வியாபாரங்களைப் பெருக்கவும் இந்த ரயில் சேவை உதவுகிறது.

பிரான்ஸ், தென் கொரியா, தைவான், சீனா ஆகிய நாடுகள் இந்த ரயில் சேவையைப் பார்த்துத்தான் தங்களுடைய நாடுகளிலும் புல்லட் ரயில்களை அறிமுகப்படுத்திவருகின்றன. ஷின்கான்சன் ரயில் சேவையில்லாத நவீன ஜப்பானைக் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாதபடி அந்த நாட்டின் வரலாறு அன்றாட வாழ்க்கை ஆகியவற்றுடன் அது ஒன்றிவிட்டது.

- தி ஜப்பான் டைம்ஸ் தலையங்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x